மட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 ஆம் வகுப்பு மாணவியான சதீஸ்குமார் தினுஸிக்கா (வயது 8 ) என்ற மாணவி நேற்று பாடசாலைக்கு சென்றிருந்தவேளை காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸில் புகார் செய்திருந்தனர்.
இம்மாணவி பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார் என்பதை பொலிஸார் பாடசாலை வரவு இடாப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று நண்பகல் பாடசாலை முன்பாகக் கூடிய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இம்மாணவி காணாமல் போயுள்ள சம்பவத்தைக் கண்டித்தும்,கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலைக்கு அண்மித்த வீதிகள் வழியாக பேரணியொன்றையும் நடத்தினர்.
காணமல் போன மாணவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து தங்களால் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் வாகரையைச் சேர்ந்த ஏரம்பமூர்த்தி ஜனாத்காந்த் ( வயது 12 ) என்ற மாணவனும் நேற்று மாலை முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
கல்லடியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த இம்மாணவன் நேற்று மாலை தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திருத்மபவில்லை என உறவினர்கள் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.