மன்னார் மடுக்கோவிலில் இருந்து பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் இன்று செவ்வாய்க்கிழமை அங்கிருந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
மடுப்பகுதி மோதல்களின் போது தேவன்பிட்டி தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மாதாவின் சொரூபம், மடுக்கோவில் பிரதேசத்தை இராணுவம் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதையடுத்து மடுக்கோவிலுக்கு திரும்பவும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும் வன்னிப்பிரதேசத்தின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இராணுவ நடவடிக்கை மற்றும் அந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற எறிகணை தாக்குதல்கள் என்பவற்றினால் பல இடங்களிலும் இருந்து மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே, தேவன்பிட்டியில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சொரூபம் மன்னார் ஆயர் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டதை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பு அவர்களும் அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
வன்னிப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மாதாவின் திருச்சொரூபம், மடுக்கோவிலின் சேதமடைந்த கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு முடிந்ததும், அங்கு மீண்டும் வைக்கப்படும் எனவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.