“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” – பாரதி
மிக அருகில் இருந்து ஆடித்திருவதைப்போல் நட்சத்திரங்கள், கைபிடித்துவரும் ஒற்றையடிப் பாதையின் காற்று, நிலா முட்டும் குடிசைகள், பொத்தான் தொலைத்து கோணலாக இழுத்துக் குத்தப்பட்ட காற்சட்டைச் சிறுசுகள், ஜன்னல் அருகில் காற்று வாங்கத் துடிக்கும் பாவாடை பூக்கள், மஞ்சள் பூசி வளைய வரும் ஆறுகள் எல்லாம் படியேறி எங்கே ஓடிவரப்போகிறது நாற்சுவரல் ஒடுங்கிவிட்ட எம் நகரத்து வாழ்க்கைக்கு?
ஓரியாவிலிருந்து ஒரு குட்டிக் கிராமத்தையே நம் கண் முன் கொண்டு வருந்திருக்கிறார் ஒரிய மொழிக் கவிஞர் கலாநிதி மனோரமா பிஸ்வால். அவருடைய கிராமத்துக் கனவை தமிழில் மொழிபெயர்த்தவர் இந்திரன்.
மனோரமா பிஸ்வால் மஹபத்ரா ஒரிசாவில் உள்ள ஜகாய் கிராமத்தில் பிறந்தவர். ஓரிய மொழியில் இவருடைய இருபது கவிதைத் தொகுதிகள் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் என்று இவரது இலக்கியப் பயணம் விரிந்தது. பிறமொழிகளிலும் இவரது இலக்கியங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கவிதைத் தொகுதிகளுள் ஒன்றான “மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள்” தமிழி;ல் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
எத்தனை அழகையும் முதுமை கொள்ளாத இயற்கையையும் அள்ளி வைத்தாலும், கிராமத்து வாழ்கையின் ரணங்களையும் இத்தொகுதியில் வார்த்திருக்கிறார் கவிஞர் மனோரமா பிஸ்வால்.
மண்ணாலும் ஓலைகளாலும் ஆன வீடுகளைப் போல, அன்பும் அரவணைப்பும் கூடி வரும் உறவுகளின் உயிர் நாடி இன்றைய தினங்களில் ஆட்டங்காண்பதை தனது கிராமத்து வாழ்க்கையில் உயிர் நோக, தனித்துப்போன தாயை கவனித்தக்கொள்ளாத பிள்ளைகள் பற்றியும் அம்மா பற்றியும் இப்படிப் பேசுகிறார்.
தாயைப் பகிர்ந்து கொண்டபோது
அன்று
எல்லோரது முன்னிலையிலும்
நிலம் மற்றும் பிற சொத்துக்களுடன்
தாயையும்
பிரித்துக்கொள்வதென்று
முடிவு செய்யப்பட்டது
கடலில் கரைக்கப்போகும்
கடவுள் விக்கிரம் போல்
மௌனமாய் அசையாமல்
அமர்ந்திருந்தாள்
கல்வியும், மனிதனின் வாழ்க்கைத்தரமும் கிராமங்களில் மட்டுமல்ல உயர் மட்டங்களிலும் அடிப்படை இயல்புகளை அதிக அளவில் மாற்றிவிடவில்லை என்பதையும், நாற்சுவருக்குள்ளே தோன்றும் பெண்களுக்கெதிரான வன்முறை என்பது வாழ்வின் யதார்த்தம் போல நடைமுறை படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டேதான் ஆகவேண்டும். பெண்களின் முன்னேற்றம் பல வகையிலும் பெருகி வளர்ந்த வண்ணம் இருந்தாலும் பெண்களுக்கெதிரான அத்துமீறல்களும் வன்முறைகளும் தீரவில்லை என்பதை கீழ்க் காணும் கவிதையின் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார் கவிஞர்.
என்னைக் கேட்காதே
நான் விரும்பியபடி வாழ
நீ என்னை அனுமதிக்கவில்லை
ஒவ்வொரு விஷயத்திற்கும்
நீ காரணம் கேட்டாய்
இன்று நான் அழுகிறபோது
தயவுசெய்து
என்னை எந்தக் கேளிவியும்
கேட்காமலாவது இரு.
மாலைவரை குந்தியிருந்து படிப்பு வாங்கும் வகுப்பறைப் பாடங்களில் சிறந்து விளங்கினாலும் நல்ல பல இலக்கியங்களை உள்வாங்கிக்கொள்வதைக் காட்டிலும் ஆடம்பரமற்ற சாதாரண மனித வாழ்க்கையிலும், ஒரு குடிசையிலும் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்முடியும். பெண்களின் விருப்பங்களை நிராகரிக்கும் போக்கென்பது எமது வாழ்க்கையோடும், இலக்கியங்களோடும் காலத்தால் வளர்க்கப்பட்டிருக்கின்றன. இத்தன்மையை எம் வாழ்க்கைமுறையில் இருந்து வினாடிக்குள் அகற்றிவிடுதல் என்பது அசாத்தியமானது. இவருடைய கவிதைகள் ஒரு பெண் என்பதை அடையாளப்படுத்திப் பேசுவதைவிட தனது மண்ணின்; அடையாளம் குறித்தே அதிகம் பேசுகிறார்.
மேகமாய் வருவார்கள்
மெத்தென்ற
என் இளமைக்காலத்தோடு கூடிய
எனது ஆன்மாவின் நறுமணம்
வண்ணப்பூக்கள் நிரம்பிய
என் கிராமத்தின் மீது பரவி இருந்தது.
..
மாலை நேரத்து வெளிச்சத்தில்
எனது தாய்
ஒரு பெண் தெய்வம் போல் தெரிந்தாள்
சிலர் இதை நம்பமாட்டார்கள்
ஆனால் இது உண்மை
அவள் தன் கணவனின் வைப்பாட்டி கொடுமை
தாளாமல் தற்கொலைக்கு முயன்றாள்
மொய்க்கும் எறும்புகள் போல தெருவெங்கும் குவிந்து கிடக்கும் மனிதர் ஒவ்வொருவற்கும் ஒரு கதை இருக்கும். வசிப்பிடம் பற்றிய கவலையும் கனவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரித்தானது. கிராமங்களில் உள்ள மனிதர்களுக்கு கல்வீடு என்பதே பெரும் கனவாகவிருக்கும். ஓங்கி விளைந்த கனவின் பெரும் பசி அதிர்ச்சி கொள்ளும் விதமாக சிதைக்கபடுவதும், கனவுகள் உறங்கும் இடமாக வீட்டின் சுவர்கள் நிழல்படங்களை சுமந்து நிற்பதும் கவிதையில் கனக்கின்றன. ஒரு பெண்ணின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தைச் சுமந்து வருகிறன இவ்வரிகள்.
வீடு
இப்போது வீடு
சோக மயமாய் உள்ளது
இந்த வீட்டை பற்றிக்
கனவு கண்டவள் ஒரு தைல வண்ண ஓவியமாய்ச்
சுவரில் தொங்குகிறாள்
ஏமாற்றங்கள் உணர்வின் ஒவ்வொரு அணுக்களையும் அசைத்துக்கொண்டே இருக்கும் ஒருவித மீட்டல்வலி. வாழ்வின் கசப்புகளையும், ரணங்களையும் சேகரித்து வைத்திருக்கும் வாழ்க்கையின் அனுபவ உண்டியல். காலத்தின் வேகத்தில் வலிகள் குன்றினும் வடுக்களை விட்டுச் செல்ல மறப்பதில்லை. ஏமாற்றத்தின் வலிமை பலரின் பாதையே புரட்டிப் போட்டிருக்கிறது. அதுபோலல்லாமல் ஏமாற்றம் தரும் வாழ்க்கை பக்கங்களை துணிவோடு நாம் புரட்டிப்போட வேண்டிய அவசியத்தை ”எதுவும் எனதல்ல” கவிதை காற்றுப் போல் தொட்டுச் செல்கிறது.
வீடுகளின் கூரைகள்
வேலைப்பாடுசெய்த கடந்த காலம்
விநோதமான ஒரு கனவின்
பரவசத்தில்
குறுகலான ஒரு ஆசையில்
ஆனைத்தையும் நான்
எனதென்று குறித்தேன்
எதுவுமே எனதல்ல என்று
நான்
இதற்குமுன் அறிந்ததே இல்லை
ராணுவத்திற்குத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்களமாக மாற்றப்பட்டு இவரது கிராம மக்கள் வசிப்பிடங்களைத் துறந்து விரட்டப்பட்டபோது முகங்களில் பளிச்சிடும் சோகத்தை இவர் பாடுகிறார். மேற்கண்ட கவிதையின் தொடர்ச்சியாகவே கீழ் வரும் கவிதையும் பாடுகிறது என்றே உணர்கிறேன்.
துயர நதியின் கரையில்
உனக்குத் தெரியாது
வெறும் கவிதைகளை மட்டும்
வைத்துக்கொண்டு வாழ்வது
எவ்வளவு கடினம் என்பது
உணர்ச்சிகளின் பூகம்பங்கள் தோன்றலாம்
ஒரு போரின் விளைவு என்பது ஒரு சமூகத்தையே பல ஆண்டுகளுக்கு மீள முடியாத துன்பத்திற்கு ஆழ்த்திவிடுபவை. போரின் கொடுமை என்பதை ஒருவர் சொல்லி உணரவேண்டிய அவசியம் மூன்றாம் உலகநாடுகள் பெரும்பான்மைக்கு இல்லை. போரின் காலம் மனித வாழ்க்கையின் காலங்களை முழுங்கி விடுவதாக மாறிப்போகையில், யுத்த காலத்தில் தவறிப்போன இளமைக்காலங்களை குறித்து வேதனை படுவதை தவிர்த்து முடிந்தவரை வாழ்தாக வேண்டும் என்ற உயிரின் துடிப்பை பற்றிக்கொள்வது பற்றி இந்தப் பாடல் ஒலிக்கிறது.
ஏன்?
காலத்தின்
துவக்க நாள்களிலிருந்தே
நீ ஏன்
உன் முகத்தை இருளில் புதைத்துக் கொள்கிறாய்
இன்றோ
நாளையோ
ஒரு வெடிகுண்டு விழுவதற்கு முன்னால்
அன்பில்
உன்னை மூழ்கடித்துக் கொள்
பள்ளிப்பருவகாலங்கள் அனைவரிடமும் அடைகாக்கப்பட்ட பொக்கிஷ்ங்களாக ஒவ்வொரு மனத்தின் அடியிலும் புதைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிப்பருவம் தான் நாம் நாமாக இருந்திருக்கக்கூடிய இறுதிப் பருவம் அந்தப் பருவம் பற்றி கவிஞருடைய வரிகளின் ஊடாக எனது பள்ளி பருவத்திற்குள் நானும் யாரும் அழைக்காமல் பிரவேசித்தேன்.
அழைக்காவிட்டாலும்
பள்ளியின் வாசலில் சேகரிக்கப்பட்ட
சிகப்பும் மஞ்சளுமான மூடிகள்
காலியான தீப்பெட்டிகள்
பென்சில் துணுக்குகள்
அவளது புத்தக மூட்டைக்குள்
மறைத்து வைக்கப்பட்டுள்ளன
அவளை யார்
தேடினாலும் தேடாவிட்டாலும்
யார் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும்
அவளது புத்தக மூட்டைக்குள்
பத்திரப்படுத்தியிருக்கும்
கனவுகளுக்கு அவள்
மறுபடியும் திரும்பிப் போவாள்
மனோரமா தன் கவிதைகளில் ஏழ்மை, சோகம், பழைய வழக்கங்களைக் கட்டிக்கொண்டு சதா வீட்டையே வளைய வரும் கிராமத்துப் பெண்களின் அப்பாவித்தன மகிழ்வை காட்சிப்படுத்துகிறார். கிராமத்து வாசனைக்காகவும், எளிமைக்காகவுமே இவருடைய கவிதைகளை நானும் நேசிக்கிறேன்.
யோகி இங்கிலாந்திலேயே வாழ்ந்திருக்கலாம் அவனது சிந்தனையை யாரும் வாங்கிக் கொள்ளவில்லை சந்தேகம் பிடித்தவர்களால் சிற வைக்கப்பட்டு சமராய்வு என்ற உப்புக்கு பொறூப்பாகப் போட்டார்கள் இப்போது அவனை இராணூவம் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கிதாகச் செய்தி.கிரிக்கெட்டை நேசித்த யோகி இந்துவின் பழைய மாணவன்.கலட்டி என்ற புறநகரைச் சேர்ந்தவர்.