பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போராடிப் பெற்ற சமூக நலத்திட்டங்கள் சிக்கனம் என்ற தலையங்கத்தில் நாளாந்தம் அழிக்கப்பட்டு வருகின்றன. ஓய்வூதியம், வேலையற்றோருக்கான உதவித்தொகை, குழந்தைகளுக்கான உதவித்தொகை போன்றன சிறுகச் சிறுக நீக்கப்பட்டு வருகின்றன. உழைக்கும் மக்களது வாழ்க்கைத்தரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. நிரந்தரமாக வேலையற்றோர் சமூகம் ஒன்று உருவாகிவருகின்றது. இவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டங்களும் புதிய வர்க்க சார் அரசியலும் உருவாகிவருகின்ற நிலையில் அவற்றை அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் நிறவாதத்தைத் தூண்டி வருகின்றது.
ஆங்கிலேயர் பாதுகாப்பு அமைப்பு ( English Defence League (EDL) ) என்ற நிறவாத பாசிச அமைப்பு பிரித்தானிய முழுவதும் உறுப்பினர்களை கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களில் இதன் வளர்ச்சி சமூகத்தை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட டாட்டூ (tattoo) இன்று வெள்ளை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
இஸ்லாமிய மசூதி ஒன்றை குண்டு வைத்துத் தகர்ப்பது போன்ற படத்தைக் கொண்ட இந்த டாட்டு பதிக்கப்பட்ட ரீ – சேர்ட்களும் பிரித்தானியா எங்கும் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய தலைமுறையை நச்சூட்டும் இந்த டாட்டூ விற்பனை எந்தத் தடையுமின்றி நடைபெறுகிறது.
ஆங்கிலேயர் பாதுகாப்பு அமைப்பிற்கு எதிராக ‘பாசிசத்திற்கு எதிரான அமைப்பினால்’ கடந்தத ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் பாதுகாப்புப் படைகள் கலைத்தன. 20 பேர்வரை கைது செய்யப்பட்டனர்.