அரசாங்கக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் புனர்வாழ்வுக்காக செயற்பட முடியும் என்றும் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி குறிப்பிட்டார். இதே போல இந்தியாவின் கொலைகாரத் திட்டங்களுக்கு அடிபணிந்தே தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது இன்னொரு குழு. அமரிக்காவை அழைத்துவந்து மக்களை விலைபேசி அடிமைகளாக்க வேண்டும் என்கிறது மற்றோரு பிரிவு. இவர்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள். மக்களுக்கு எதிரான அரசியலை பயங்கரவாத அரசுகளின் நலன்களின் அடிப்படையிலிருந்து முன்வைக்கிறார்கள்.
தமக்கு பணமும் அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக மக்கள் மீது தீர்வைத் திணிக்க முற்படுகிறார்கள். ஆயிரம் முள்ளிவாய்க்கால்களை இந்தப் பிழைப்புவாதிகளே ஏற்படுத்துவார்கள். ஒரணியில் திரண்டு சமூக விரோத அரசியல் செய்யும் இவர்களின் கூட்டு அழிக்கப்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களும் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் தனித் தமிழீழம் அமைய வேண்டுமென்று கோரி வருவதாலேயே அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களுக்கு வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்படுவதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.
உலகமக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு லட்சக்கணக்கில் அப்பாவி மக்களை இரவோடிரவாகக் கொன்றுகுவித்த அரசாங்கத்தை அப்பாவித்தனமான பச்சைக் குழந்தை போல் காட்டமுற்படும் இந்தப் பிழைப்பு வாதி, 2009 வரை புலிகளில் செயற்பட்டவர்.








