அறிமுகம்
இன்று தமிழ் மக்கள் எதை வேண்டுகிறார்கள் என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் மேலெழுகிறது. தமிழ் மக்களின் எதிர்காலம் ஜெனீவா, ஐ.நா. சபை, அமெரிக்கா, இந்தியா, வட மாகாண சபை என ஏதெதன் மீதோ நம்பிக்கை வைத்து பயணிக்கிறது. இம்முறை ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்றும் இனி ஐ.நா. தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. இந்தியா எவ்வாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வட மாகாண சபைத் தேர்தலை நடக்க வைத்ததோ அவ்வாறே வட மாகாண சபையினூடாகத் தமிழ் மக்களுக்கான விடிவைப் பெற்றுத் தரும் என்று சிலரும் அமெரிக்கா மகிந்த ராஜபக்ஷ அரசை அகற்றி இன்னொரு அரசை உருவாக்குவதன் மூலம் தமிழருக்கான தீர்வு சாத்தியமாகும் என்று வேறு சிலரும் கருத்துரைக்கிறார்கள். தமிழ் மக்கள் தங்கள் மீதல்லாமல் பிற அனைத்தின் மீதும் நம்பிக்கை வைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
இப்போது நடைபெறும் எதுவும் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சனைகளையோ நீண்டகாலப் பிரச்சனைகளையோ தீர்க்கும் முனைப்பை உடையதல்ல. சர்வதேச சமூகம் இலங்கை மீதான தனது பிடியை இறுக்குவற்கான வழிவகைகளைத் தேடுகிறது. இந்தியா இலங்கையில் தான் பதித்துள்ள பாதங்களை உறுதிப்படுத்த எதையெதைச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகட்கு ஈழத் தமிழர் பிரச்சனை நல்லதொரு கிளுகிளுப்பான விடயமும் அவ்வாறே உணர்ச்சிப் பொங்கும் உரை வீச்சுக்கட்கு வாய்பான ஒரு விடயமுமாகும். இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகட்கு அது பிழைப்புக்கு உகந்த வியாபாரப் பொருள். அவ்வளவுதான். இதற்கிடையில் புலம்பெயர் தமிழர்கள் நினைப்பது போல அவர்களின் முயற்சியால் தான் இலங்கை விடயத்தில் அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட மேற்குலகு அக்கறை காட்டவில்லை. மேற்குலகின் அக்கறைகட்குப் பின்னால் அவர்களது நலன்கள் இருக்கின்றன. தமிழ் மக்கள் இன்று நம்ப வேண்டியது என்று சொல்லப்படும் ஐக்கிய நாடுகள் சபை பற்றிய ஒரு குறிப்பாகவும் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய சில கேள்விகளை எழுப்புவதுமாக இக் கட்டுரை அமைகிறது.
இலங்கை தொடர்பான ஐ.நா.வின் பெற்றி அறிக்கை
ஐக்கிய நாடுகள் சபை சில காலம் முன்பு இலங்கையில் நடந்துகொண்ட முறை தொடர்பில் ஐ.நா.வின் உள்ளக மீளாய்வு அறிக்கை ஐ.நா. செயலாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டது. அது சார்ள்ஸ் பெற்றி என்பவரின் தலைமையிலான மீளாய்வுக் குழுவின் அறிக்கையாகும். அதனால் அது பெற்றி அறிக்கை எனப் பொதுவாக அறியப்பட்டது. ஐ.நாவின் அமைப்புரீதியான செயற்பாட்டடை விமர்சிக்கும் உள்ளக மீளாய்வு அறிக்கையாக அது இருந்தும், அது வெளிப்படுத்தப்பட்டமை முக்கியமானது என்பதுடன் ஒரு உள்ளக அறிக்கை ஏன் வெளியிடப்படுகிறது என்பதும் கேட்கவேண்டிய கேள்வியாகிறது. இலங்கை அலுவல்களைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்கட்கு அவ்வறிக்கை புதிதாக எதையும் சொல்லவில்லை என்பதை விளங்க அதிக சிரமம் இராது. ஆனால் ஐ.நா. சபையின் அறிக்கை என்ற அடிப்படையில் அதிற் சொல்லப்பட்ட விடயங்கட்குள்ள பெறுமதியை மறுக்க இயலாது.
அவ்வறிக்கை, இலங்கையில் ஒரு இனப் படுகொலை அரங்கேறாது தடுப்பதற்கு வழிகள் இருந்தும் ஐ.நா. அசமந்தப் போக்குடன் செயற்பட்டது எனக் கோடிட்டுக் காட்டுகிறது. அதேவேளை, போர் முடிந்த பின்னர் மக்கள் முட்கம்பி வேலிகட்குள் துன்பப்படுகையில் ஐ.நா. வாளாவிருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.
செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட முன்னரே அறிக்கை சில ஊடகங்கட்குக் கசிந்தமை அறிக்கையை வெளிப்படுத்துவதற்கான ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதிலும், குறிப்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையிற் சில பகுதிகள் கறுப்பு மையினால் நீக்கப்பட்டிருந்தன. அப் பகுதிகள், குறிப்பாக ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனையும் அவரது பிரதான அலுவலர் விஜய் நம்பியாரையும் குற்றஞ் சாட்டுகின்றன. நடந்தேறிய மனிதப் படுகொலைக்கான இரத்தம் தோய்ந்த கரங்களுடையோராக இவ்விருவரையும் சுட்டுகின்றன.
ஐ.நா.வின் கரங்கள் இரத்தம் தோய்ந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல. 1994இல் ருவாண்டாவில் ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் பிரசன்னத்தில் எட்டு இலட்சம் டுட்சி இனப்பிரிவைச் சேர்ந்த ருவாண்டர்கள் ஒரு மாதத்துக்குள் கொல்லப்பட்டார்கள். அப்போது ஐ.நா. அமைதி காக்கும் படைகட்குப் பொறுப்பாகவிருந்தவர் கொஃபி அனான். அவர் 2000ம் ஆண்டில் ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டு, தான் ஐ.நாவின் செயலாளர் நாயகமாக இருந்தபோது கொல்லப்பட்டவர்கட்காக அமைந்த நினைவகத்திற் பூக்கொத்தொன்றை வைத்து வருத்தம் தெரிவித்தார். அவ்வளவுதான்.
வரலாற்றில் மேலுஞ் சிறிது பின்சென்றால் 1960இல் கொங்கோவின் அரசுத் தலைவர் பற்றிஸ் லுமும்பா ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் காப்பில் இருக்கும்போது கொல்லப்பட்டார். அதை விசாரிக்கச் சென்ற ஐ.நா.வின் மிகக் காத்திரமான செயலாளர் நாயகம் என்று இன்றும் போற்றப்படுகின்ற டக் ஹமர்ஷீல்ட் விமான விபத்திற் கொல்லப்பட்டார். இதுதான் ஐ.நா.வின் யோக்கியம்.
இவ்வறிக்கை வெளியானபின்பு, தமிழ் மக்கள் மத்தியில் ஐ.நா. தொடர்பான மாயைகளும் நம்பிக்கைகளும் மீண்டும் உருவாக்கப் பட்டுள்ளன. இது ஆபத்தானது. இவ் விடத்தில் ஐ.நா.வின் அரசியலை மீள்பார்வைக்கு உட்படுத்தும் தேவையுள்ளது.
உள்நாட்டு அடக்குமுறையாளர்கட்கு ஐ.நா. சபையின் சில செயற்பாடுகள் அச்சுறுத்தலாக இருப்பதுண்டு. அதே போன்று உலகில் பெரிய சக்திகள் சிறிய நாடுகளை அச்சுறுத்தி அடிபணிய வைக்க ஐ.நா. சபையின் சில செயற்பாடுகளை திட்டமிட்டு முடுக்கி விடுவதுமுண்டு. மேலாதிக்கச் சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் தமக்குப் பணியாத நாடுகளைப் பணியவைக்கவும், ஐ.நா. சபையின் சில செயற்பாட்டுத் தளங்கட்கு அப்பாற் செயற்பட்டு ஆக்கிரமிப்புகளையும் செய்துள்ளன. ஈராக் முதல் லிபியா வரை இவற்றை அவதானித்துள்ளோம். இந்த மேலாதிக்க சக்திகளை ஐ.நா. சபையின் செயற்பாடுகள்முலம் கேள்விக்குட்படுத்த முடியாதுள்ளது என்பதும் தெரிந்ததே. ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளை ஐ.நா. சபை கேள்விக்குட்படுத்துவதும் வேடிக்கையானது. ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளும் தமது நேச நாடுகட்கு எதிராக ஐ.நா. சபை நிறைவேற்றும் தீர்மானங்களை நிராகரிக்கும் சிறப்புரிமையைக் கொண்டுள்ளன.
உலக ஒழுங்கு ஐக்கிய அமெரிக்க, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு துருவங்களைக் கொண்டிருந்தபோது ஐ.நா.வின் குழப்பமான செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருந்தது அரிது. ஆனால் 1980களின் முடிவில் சோவியத் ஒன்றியத்தின் முழுமையான சிதைவின் பின், அமெரிக்கா தன் அதிகாரத்தை ஐ.நா. சபைக்கூடாக அல்லது தான் தனியாக நிலைநாட்டி வருகிறது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், மேலாதிக்க அல்லது ஏகாதிபத்திய சக்திகள் சிறிய நாடுகளை மிரட்டி அடிபணிவிப்பதில் வெற்றிகண்டு வருகின்றன. அதேவேளை அடக்குமுறை அரசுகளும் குழப்பமான சூழ்நிலையில் ஐ.நா. சபையின் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைப் பயன்படுத்த முயல்வதையும் அவதானிக்க முடியும்.
ஐ.நா. சபை ஒரு நவகொலனிய ஏகாதிபத்திய சர்வதேச நிறுவனம் என்பதில் எவ்வித ஐயமும் இருக்கமுடியாது. ஆனால் அடக்குமுறை அரசுகளின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிராக ஐ.நா. சபையின் நடவடிக்கை மூலம் அழுத்தங்கள் கொடுக்கும் போக்கு ஒனறைக் காணமுடியும். மக்கள் விரோத அடக்குமுறை அரசுகட்கு எதிரான சர்வதேச ரீதியான நடவடிக்கைகளாக, ஐ.நா. சபையூடான மட்டுப்படுத்தப்பட்ட தாக்கம் கொண்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இவ்வாறான நடவடிக்கைகளை ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் ஆபத்திருக்கின்ற போதும், இந் நடவடிக்கைகளில் அடக்குமுறை அரசுகளின் கொடுமைகளைக் கேள்விக்குட்படுத்த வாய்ப்பிருப்பதுடன், அடக்குமுறை அரசுகள் மீது அழுத்தஞ் செலுத்தவும் வாய்ப்புண்டு.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகேட்பதை ஏகாதிபத்தியச் சதியாயும், நீதி மறுப்பதை ஏகாதிபத்திய எதிர்ப்பாயும் கொள்வது இலங்கை ஆளும் வர்க்கங்களினதும் அடக்குமுறை அரசினதும் நிலைப்பாடாகும். அடக்கியொடுக்கப்படும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் தேசிய இனங்களதும் நிலைப்பாடானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றஞ் செய்தவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதாகவே இருக்கமுடியும். இந் நிலைப்பாட்டை முன்நகர்த்த இலங்கை மக்களின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் தேவை.
பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டுச் சட்டங்களின் கீழும் சர்வதேசச் சட்டங்களின் கீழும் நடவடிக்கைகளை எடுக்க உரிமையுடையவர்கள். இன்றைய அரசுகள் ஐ.நா. சர்வதேசச் சட்டங்கட்கு உட்பட்டே இருக்கின்றன. அவற்றின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகட்கு அரசுகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளன. ஆனால் இவை மிகவும் வரையறுக்கப்பட்டவை என்பதனை மக்கள் விளங்கிக் கொள்வது அவசியம்.
எனவே பாதிக்கப்பட்டவர்கட்கு நீதி கிடைக்கவும் குற்றம் புரிந்தவர்கட்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கவும் அனைத்து மக்களும் ஐக்கியப்பட்டுச் செயற்படுவது அவசியம். இதனை அடக்கு முறையாளர்களினதும் ஏகாதிபத்தியத்தினதும் நிகழ்ச்சிநிரல்களின் கீழ்ச் செய்யமுடியாது. எனவே மக்களுக்கான நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்க வேண்டும். அனைத்து அடக்கப்பட்ட மக்களினதும் ஐக்கியமான போராட்டத்தை தவிர இதற்கு வேறு வழி எதுவுமில்லை.
காக்கும் கடப்பாடு: யாருடைய கடப்பாடு?
காக்கும் கடப்பாடு என்பது நாட்டின் மக்களை பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடு (Responsibiltiy to Protect – R2P) ஆகும். அரசு அக் கடப்பாட்டிற் தவறுகிறபோது, கடப்பாடு சர்வதேச சமூகத்தின் கைகட்குப் போகிறது. பாரிய அநியாயங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடப்பாடு சர்வதேச சமூகத்தினுடையதாகிறது. கடப்பாடு இவ்வாறு சர்வதேசத்திடம் பாரப்படுவதற்குக் காரணம் அது நீதியானதும் சரியானதும் என்ற வாதத்தின் அடிப்படையிலாகும்.
காக்கும் கடப்பாடு என்பது அடிப்படையில் தடுப்பு (Prevention) என்பதையே பிரதானமானதாகக் கொண்டுள்ளது. ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களைக் காக்க முடியாதபோது பொருளாதார, அரசியல், ராஜதந்திர, சட்டரீதியான, இராணுவரீதியான நடவடிக்கைகட்கும் அது வழி வகுக்கிறது.
1994இல் ருவாண்டாவில் 8 இலட்சம் பேர் 100 நாட்களில் இனப்படுகொலைக்காளானார்கள். இது ருவாண்டாவில் ஐ.நா. அமைதிகாக்கும் படைகள் இருக்கும் போது நிகழ்ந்தது. கனடா நாட்டவரான ரோமியோ டிலேர் ((Roméo Dallaire)) இந்த அமைதி காக்கும் படைக்குப் பொறுப்யிருந்தார். அவர் கனடா திரும்பிய பின்னர் ருவாண்டாப் படுகொலைகளைப் பற்றி அறிந்திருந்தும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் வாளாவிருந்தன எனத் தெரிவித்தார்.
கனடாவின் CBC தொலைக்காட்சி அவரது நேர்காணலுடன் எடுத்த Ghosts of Rwanda ஆவணப்படமும் அவரது Shaking Hands with the Devil என்ற ருவாண்டா அனுபவங்கள் பற்றிய புத்தகமும் கனடிய மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை எழுப்பின. அதன் விளைவாகக் கனடிய அரசாங்கம் செப்டெம்பர் 2000இல் International Commission on Intervention and State Sovereignty (ICISS)என்ற ஆணைக்குழுவை நிறுவியது. ஆணைக்குழு அறிக்கை 2001இல் வெளியானது. அதன் பயனாகத் தோன்றியதே காக்கும் கடப்பாடு என்ற கோட்பாடாகும்.
அதை 2005இல் ஐ.நா. உலக மாநாடு ஏறறது. பின்னர் 2006 ஏப்ரலில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரித்தது. 2009 ஜனவரியில் ஐ.நா. செயலாளர் நாயகம் ‘“Implementing the Responsibility to Protect” என்ற ஆவணத்தை வெளியிட்டார்.
வழமையான சர்வதேச உறவுகளில், ஒரு நாடு இன்னொரு நாட்டின் அலுவல்களிற் தலையிடுவது பின்னைதன் இறைமைக்கு சவால் விடும் செயலாகக் கருதப்படும். ஆனாற், காலப்போக்கில், மனிதாபிமான ரீதியான தலையீடுகள் என்ற அடிப்படையிற் குறுக்கீடுகள் நிகழ்ந்தன. ஆனால் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் மனிதாபிமானத் தலையீடு என்பதை மதிப்பிறக்கி அரசியல் நோக்கில் பட்டவர்த்தனமாக தெரிகின்ற சர்வதேசச் சட்ட விதிகளை மீறும் செயல்களாகக் காணப்பட்டன. அதனால் ‘மனிதாபிமானத் தலையீடு’ என்பது கெட்ட வார்த்தையாகியது. அதைச் சர்வதேச சட்டரீதியாக நியாயப்படுத்த முடியாமையும் மனிதாபிமானத் தலையீட்டின் மீதான பாரிய விமர்சனங்கட்கு வழியமைத்தது. எனவே, குறுக்கீடுகட்குப் புதிய கோட்பாட்டுருவாக்கம் தேவைப்பட்டது. அவ்வாறு உருவானதே காக்கும் கடப்பாடாகும். குறுக்கீட்டுக்கான நியாயம், மனிதாபிமானத் தலையீட்டில் இருந்து காக்கும் கடப்பாட்டை நோக்கி வளர்ந்துள்ளது.
காக்கும் கடப்பாட்டைச் சர்வதேசச் சட்டவிதிகட்கு அமைவாக உருவாக்குவதற்கு நியாயமான யுத்தம் என்ற கருத்தமைவு பயன்பட்டது. அதன்படி, காக்கும் கடப்பாட்டின் அடிப்படையில் தலையிட, நியாயமான காரணம் (just cause), சரியான நோக்கம் (right intention)), இறுதி வழி , (last resort)சட்டப்படியான அங்கீகாரம் (((legitimate authority) என்பன அடிப்படைகளாகக் கொள்ளப்பட்டன.
காக்கும் கடப்பாட்டை நான்கு சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது:
1. இனப்படுகொலை (genocide)
2. போர்க்குற்றங்கள் (war crimes)
3. மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity)
4. இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing)
காக்கும் கடப்பாட்டை மையப்படுத்தி நடந்த முதலாவது தலையீடு லிபியாவில் இடம்பெற்றது. அது காக்கும் கடப்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்கியது. காக்கும் கடப்பாடு அடிப்படையில் யாருடையது என்ற கேள்விக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தல்
வரலாற்று ரீதியாக இவ்வாறான குறுக்கீடுகளிலிருந்து கற்க நிறைய உண்டு. அடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டுமொத்த வடிவமாயிருக்கும் ‘சர்வதேச சமூகம்’ எனப்படும் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று நம்புவது பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை ஆட்சி யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய நிலைமைகட்கு ஏற்பக் கட்டிவளர்க்க மாட்டாத ஜனநாயக, இடதுசாரி சக்திகளும், சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாக இருக்கின்றனர்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன் ஏகாதிபத்திய நாடுகள் செயற்பட்ட முறைக்கும் இன்று செயற்படுகிற முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்று, அவை, மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறிச், சர்வதேச சமூகம் என்ற பெயரில் வசதியாக ஏனைய நாடுகளின் இறைமையில் தலையிடுவதுடன் சில நாடுகளிற் குடியேறியும் விடுகின்றன. இதனையே தற்போது ‘மனிதபிமான ஏகாதிபத்தியத் தலையீடுகள்’ என்று கூறுகின்றனர்.
கரிபியனில் ஹெயிற்றியிலும் ஆபிரிக்காவில் எதியோப்பியா, சூடான், ருவாண்டா, கொங்கோ ஆகிய நாடுகளிலும் மனிதாபிமானப் பணிகட்காக என்றும் யுத்த நிறுத்தக் கணிக்காணிப்புக்காக என்றும் தலையிட்ட ஐ.நாவும் அதன் ஏனைய அமைப்புகளும் இது வரை எதைச் சாதித்துள்ளன? பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாகக் கூறி, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தியது. அந் நாடுகளில் கொலைகளும் குண்டுவெடிப்புக்களும் நடவாத நாளே இல்லை. அங்கு அமெரிக்கப் படையினரும் ஐரோப்பிய நாடுகளின் படையினரும் பயங்கரவாதத்தில் தாராளமாக ஈடுபடுகின்றனர். வட கொரியாவையும் ஈரானையும் பணியவைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈடுபட்டுள்ளது. வட கொரியாவிடமிருந்து தென் கொரியாவைப் பாதுகாக்க 1950களில் அங்குசென்ற அமெரிக்கப் படைகள் அங்கு ராணுவத் தளங்களை அமைத்து நிரந்தரமாகவே தங்கிவிட்டன. அதனால் அந் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுச் சீரழிவுகளை மறக்கலாகாது.
பிலிப்பின்ஸில் மார்க்கோசின் மனித உரிமை மீறல்களைத் தண்டிக்க அங்கு சென்ற சர்வதேச நிறுவனங்கள் அங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த தேசிய விடுதலைக்கான ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிகரப் போராட்டங்களை பின்னடையச் செய்தன. அங்கு மனிதாபிமானப் பணிகளை செய்யும் பேரிற் சென்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் பாரிய அரசியல், பொருளாதார, பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்தின. இன்று மியானமார் (பர்மா), தாய்லாந்து போன்ற நாடுகளிலும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுடனேயே செயற்படுகின்றன.
இலங்கையில் 2002ஆம் ஆண்டு முதல் இயங்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சாதனைகள் என்ன? ஆயிரக் கணக்கான தொண்டு நிறுவனங்கள் இன்று வெளிநாடுகளிலிருந்து நெறிப்படுத்தும் தலைமையகங்களுடனும் உள்ளுர் முகவர்களுடனும் பணிமனைக ளுடனும் இயங்குகின்றன. அவை சர்வதேச ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுடனேயே செயற்படுகின்றன. மாறிமாறி ஆண்ட அரசாங்கங்கள் தமது இயலாமையால் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை வௌ;வேறு வகைகளிற் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளன. அதனால் அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களும் தலைவிரித்தாடுகின்றன.
இவற்றுக்கு எதிரான மக்கள் சார்பான அரசியல், வெகுஜன நடவடிக்கைகள் இல்லாத சூழ்நிலையில், சர்வதேச சமூகம் என்ற ஏகாதிபத்தியத்தை ரட்சகராகக் கொள்வதற்குப் பல சக்திகள் உள்ளுரிற் செயற்படுகின்றன. அரசாங்கங்களின் அடக்குமுறைகளை எதிர்க்க ஏகாதிபத்தியத்திடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. அதன் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது போன்று காட்டப்பட்டாலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை. ஏகாதிபத்திய உதவிகளும் அதனை முன்னெடுக்கும் தொண்டு நிறுவனங்களும் உள் நோக்கங்கள் கொண்டவையும் நச்சுத்தனமானவையுமாம். அவை உண்மையில் ஏகாதிபத்தியத்திற்குத் தொண்டுபுரியும் நிறுவனங்களே.
அன்று கொலனித்துவம் இலகுவாகக் கண்டுகொள்ளப்பட்டு. எதிர்க்கப்பட்டது. இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலின் கீழ், நவகொலனித்துவம், மனிதாபிமான ஏகாதிபத்தியமாகத் தேசிய அரசுகளதும் அரசாங்கங்களதும் வரவேற்புடனும் மக்கள் ஆதரவுடனும் தன் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களும் போராடும் இயக்கங்களும், தேசிய அரசிற்கு எதிராகச் செயற்படும் அதேவேளை, மனிதாபிமான ஏகாதிபத்திய வலையில் அகப்படாமற் கவனமாயிருக்க வேண்டும். மனிதாபிமான ஏகாதிபத்தியமாகத் தெரியும் உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் ‘சர்வதேச சமூகம்’ எனப்படும் உலக மேலாதிக்க ஏகாதிபத்திய சக்திகளை உரியவாறு அடையாளம் காணவேண்டும். அவற்றை அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராட மக்கள் இயக்கங்களைக் கட்ட வேண்டும்.
ஜெனீவாவும் தமிழ் மக்களும்
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையின் வருகை தமிழ் மக்களுக்குப் பெரிய வெற்றி எனப்பட்டது. அவருடைய இலங்கை வருகையின் நோக்கம், முதலிலிருந்து எதையும் விசாரிப்பது அல்ல. ஏலவே அறிந்த அல்லது எட்டக்கூடிய தகவல்களை உறுதிப்படுத்தற்கும் தெளிவுபடுத்தற்கும் அப்பால் எதையுஞ் செய்ய அவர் விரும்பினாலும் அவரால் அது இயலாது.இலங்கை குறித்து அவர் வழங்கிய அறிக்கை ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நவநீதம்பிள்ளையின் அறிக்கை புதிதாக எதையும் கூறவில்லை. அவரும் பிறரும் தொடர்ந்து சொல்லிவந்தவற்றை மீள வலியுறுத்துவதாகவே அதன் பெரும் பகுதி உள்ளது. எனினும்இரண்டு காரணங்கட்காக அவ்வறிக்கை முக்கியம் பெறுகிறது. ஒன்று, அது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும் மனிதாபிமானச் சட்ட மீறல்களையும் விசாரிக்கச் சுயாதீன சர்வதேச விசாரணையைக் கோருகின்றமை. இரண்டாவது, நிலைமாறுகால நீதியை ((transitional justice)) நிலைநாட்ட, உண்மையை அறியும் உரிமை ((Right to Truth)), குற்றவியல் நீதியும் பொறுப்புடைமையும் (criminal justice and accountability), சட்ட, நிறுவனச் சீர்திருத்தங்கள் (legal and institutional reforms), பரிகாரத்துக்கும் இழப்பீட்டுக்கும் உரிமை ((right to remedy and reparations) ஆகிய நான்கினதும் அடிப்படையில் ஐ.நா.வின் நுட்பவியற் சிறப்புத்தேர்ச்சி உதவிகளைப் பெறுமாறு இலங்கையை வலியுறுத்துகின்றமை.
இரண்டாவது பரிந்துரை, உண்மையில், இலங்கையில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் ஒன்றை நிறுவுதற்கான பிரேரணையாகும். இலங்கை, ஐ.நா.வின் தொழில்நுட்ப சிறப்புத் தேர்ச்சி உதவிகளைப் பெற உடன்பட்டாலோ பெறுமாறு வற்புறுத்தப்பட்டாலோ, அதன் அடிப்படையில் இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமை அலுவலகம் ஒன்று அமையும். இது, சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் முக்கிய காய்நகர்த்தலாகும். தென்னாசியாவில் அமெரிக்கா மறைமுகமாகக் கால்பதிக்க இது வழிகோலும். இதுவரை தென்னாசியாவில் இவ்வாறான அலுவலகம் எதுவும் நிறுவப்படவில்லை. அவ்வாறு ஒன்று உருவானால், அது இலங்கைக்கும் அப்பால் முழுப் பிராந்தியத்தினதும் மனித உரிமை நிலைமைகளைக் கண்காணிப்பதாற்குமாக இருக்கும். அது பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு உவப்பானதல்ல. இன்று மனித உரிமை மீறல்களைக் காட்டிச் சீனாவைக் குற்றவாளியாக்கும் விதமாக நாளை இந்தியாவுக்கும் நிகழலாம். எனவே அத்தகைய அலுவலகம் அமைவதைத் தவிர்க்க இந்தியா இயன்றவரை முயலும்.
சுயாதீன சர்வதேச விசாரணையைக் கோரும் பரிந்துரையும் இந்தியாவுக்குச் சிக்கலானது. இலங்கை மீது மேலாதிக்கத்தை விரும்பும் இந்தியா, இலங்கையின் அலுவலகளில் சுயாதீன சர்வதேச விசாரணையூடான சர்வதேசத் தலையீட்டை விரும்பாது. ஏனெனில் அது இந்திய-இலங்கை உறவை மோசமாகப் பாதிக்க வல்லது. இதுவரை, ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான தீர்மானங்களை வலுவிழக்கச் செய்து இந்தியா இலங்கைக்கு உதவி வந்திருக்கிறது. இது, தடியும் முறியாமல் பாம்பும் சாகாமல் நடத்தும் காரியமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான இரண்டு தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. இக் காலத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கையிற் பயனுள்ள முன்னேற்றம் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? பறித்த நிலங்கட்கு மேலாக எஞ்சியிருந்த நிலங்களும் பறிபோகின்றன. வாழ்க்கைச் சுமை கூடிள்ளது. இது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய விடயம். ஜெனீவா தான் தமிழ் மக்களின் விடுதலைக்கான வழி என்று சொன்னவர்களும் சொல்கிறவர்களும் தமிழ் மக்களுக்கு ஜெனீவா தீர்மானத்தால் இதுவரை கிடைத்த பயனெதென்று சொல்வார்களா?
கடந்த கால அனுபவங்கள் நல்ல பாடங்களைச் சொல்கின்றன. தமிழ் மக்களின் எதிர்காலம், ஜெனீவாவிலோ ஐ.நா.விலோ இல்லை. பறிபோகிற நிலங்களையும், மறுக்கப்படுகிற உரிமைகளையும் ஐ.நா.வோ ஜெனீவாவோ பெற்றுத் தரா. ஆனால் எல்லாத் தரப்புக்களும் பேசவும் தத்ததம் நம்பிக்கைகளை வளர்க்கவும் காலங் கடத்தவும் நல்ல வசதிகளாக அவை ஆகிவிட்டன. தமிழ் மக்கள் ஐ.நா.வையோ ஜெனீவாவையோ நம்புவதற்கு முன் இதுவரை ஐ.நா. என்ன செய்திருக்கிறது என்று ஆராய்வது நன்று.
நிறைவாக
உலகில் எத்தனையோ படுகொலைகள் நடைபெற்ற போதெல்லாம் ஐ.நா. வாளாவிருந்துள்ளது. அதில் இலங்கை விடயமும் அடக்கம். தமிழ் மக்கள் தங்களுக்கான விடிவைத் தாங்களே தேடவேண்டும். தமிழ் மக்களுக்கு அன்று முதல் இன்று வரை மறுக்கப்பட்டு வருகின்ற மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கும் மறுக்கப்படுவனவற்றையும் பரந்த நோக்கிற் காணுதல் வேண்டும். இன்றைய சூழலில் அனைத்து மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதற்கேற்ற அரசியற் கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும், இன்றைய தேர்தல் அரசியலுக்குப் பதிலான மாற்று அரசியலில் மக்கள் அணிதிரள வேண்டும். அதுவே சகலவிதமான ஒடுக்குமுறைகட்கும் எதிரான சரியான போராட்டமாக இருக்கும்.
Very useful article. I remember Patrice Lumumba’s wife(Egyptian born) was on her way to Egypt . At the Airport two infants of Lumumba were snatched from her by a Belgian troop and he smashed the twins against a wall and the infants died instantly -.
Is this fact or fiction. From Wiki – Patrice Lumumba’s family is actively involved in contemporary Congolese politics. Patrice Lumumba was married to Pauline Lumumba and had five children; François was the eldest followed by Patrice Junior, Julienne, Roland and Guy-Patrice Lumumba. François was 10 years old when Patrice died. Before his imprisonment, Patrice arranged for his wife and children to move into exile in Egypt, where François spent his childhood, then went to Hungary for education (he holds a doctorate in political economics).
Lumumba’s youngest son, Guy-Patrice, born six months after his father’s death, was an independent presidential candidate in the 2006 elections,[72] but received less than 10% of the vote.