காலம் சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்திற்கு, மகிந்த ராஜபக்ஷவே காரணம் என அவரது குடும்பத்தினர் கருதுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவம் குறித்து சிக்கல் எழுந்துள்ள போதும், அவை இதுவரையில் பெரிதாக பேசப்படவில்லை. எனினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க அமைச்சர் சந்திரசேகரனின் மனைவி விரும்புமாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக கூறப்படுகின்றன. ஒன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் சந்திரசேகரன் மீது பிரயோகித்த கடுமையான அழுத்தம் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு நிலை ஏற்பட்டதாக அவரது குடும்பமும், கட்சியின் ஆதரவாளர்களும் கருதுகின்றனர். இந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், எதிர்காலத்தில் அபிவிருத்தி நிதியாக வழங்குவதாக கூறப்பட்ட பெருந்தொகையான பணமும் அமைச்சருக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தம்மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று முறைகள் அமைச்சரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அவர் தேர்தல் பிரசாரமாகவும் பயன்படுத்திக்கொண்டார்.
இதேவேளை இறுதி நேரத்தில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை அமைச்சர் சந்திரசேகரன் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது மனைவியும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அமைச்சர் சந்திரசேகரனின் 16 ம் தின கிரியைகள் நிறைவடைந்ததன் பின்னர், இது தொடர்பிலான தீர்மானம் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.