எல்லாச் சர்வாதிகாரிகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு காணப்படும். அவர்களின் அதிகாரம் ஒரு இடத்தை நோக்கிக் குவியும் போது, அடிமடத்துடன் தொடர்புகளை இழந்துவிடுகின்றனர். தாமும், தம்மைச் சுற்றியிருக்கும் நம்பிக்கைக்குரிய சிலரையும் தவிர கீழுள்ள அனைத்து மட்டங்களது தொடர்புகளையும் சர்வாதிகாரிகள் துண்டித்துவிடுகின்றனர்.
இதனால் இரண்டவது மட்டத்திலிருக்கும் சர்வாதிகாரிகளின் ஆதரவாளர்கள் வெறுப்படைய ஆரம்பிக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி கீழணிகளை அணிதிரட்டி ஆட்சிக் கவிழ்ப்பையும் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்துவதென்பது இலகுவான செயல். துனிசியா, எகிப்து, லிபியா, யெமன் போன்ற நாடுகளில் கிளர்சிகளை ஏற்படுத்தி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்த இரண்டாவது அணியை கிளர்ச்சிக்குத் தலைமையேற்கச் செய்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்திய செயலை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொண்டன.
ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும்வரை ராஜபக்சவிற்கு எதிரிகள் இல்லை என்ற நிலையே காணப்பட்டது.
சில நாட்களுக்கு உள்ளாகவே ராஜபக்ச ஆட்சியில் பங்கெடுத்த இரண்டாவது அணி அவரின் எதிர்த்தரப்பாக மாறியது.
ஏகாதிபத்தியங்களின் இப் புதிய அணுகுமுறைக்கு சில முறைமைகள் காணப்படுகின்றன.
-முதலில் இனப்படுகொலை போன்ற தீவிர குற்றச் செயல்களை நடத்துவதற்கு ஒருவரைத் தெரிந்தெடுப்பது.
-இரண்டாவதாக அவர் சர்வாதிகாரியாகவும் பாசிஸ்டாகவும் வளர அனுமதிப்பது.
-மூன்றாவதாக எதிரணிகளையும் ஜனநாயக சக்திகளையும் பயன்படுத்தி குறித்த சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் கருத்தை ஏற்படுத்துவது.
-நான்காவதாக கிளர்ச்சி அல்லது ஆட்சி மாற்றைத்திற்கு தகுந்த சந்தர்ப்பம் ஏற்படும் போது எதிரணிகளுக்கு ஆட்சியில் பங்கெடுத்த இரண்டாவது மட்டத்தின் ஊடாகத் தலைமை வழங்குவது.
இறுதியாக சர்வாதிகாரியைத் தண்டித்து தனக்கு ஆதராவான புதிய அடியாளை ஆட்சியிலமர்த்திக் கொள்ளையைத் தொடர்வது.
இந்த இடைக்கட்டத்தில் இடதுசாரிகள், ஜனநாயக வாதிகள் போன்ற பலர் வழி தெரியாமல் திகைப்பார்கள். இடைவெளியை நிரப்புவதற்காக பாதிப்பற்ற வகையில் ஏகாதிபத்தியங்களே சோசல்ஸ்டுக்களையும், ஜனநாயகவாதிகளையும் களமிறக்கும்.
இலங்கைத் தேர்தல் களத்தில் இடம்பெறும் மாற்றங்களையும், நிர்வாக, அதிகார மட்டங்களில் தோன்றும் மாறுதல்களையும் உற்றுக் கவனித்தால் மைத்திரிபாலவை ஆட்சியில் அமர்த்துவதற்கான திட்டம் ஏகபோக அரசுகளால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வெளித்தெரியும்.
இந்த நிலைமைகளை அவதானித்து வாக்குப் பொறுக்கிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வேலைத்திட்டத்தை முன்வைப்பதே புரட்சிகர சக்திகளின் கடமை.
எது எவ்வாறாயினும் வன்னியில் இறுதி யுத்ததை நடத்திய மகிந்த குடும்பம் தன்னைச் சுற்றி என்ன
நடக்கிறது என்பதையே அறிய முடியாத ஆபத்தான சூழலில் தொடர்பறுந்து காணப்படுகிறது. இன்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மகிந்த இறுதிக்கட்ட யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.