10.11.2008.
வங்காள விரிகுடா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட் கிழமை புதுடில்லிக்குச் செல்லவுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும் இந்த மாநாடு புதுடில்லியில் நடைபெறவிருக்கிறது.
வங்காள விரிகுடாவுக்குட்பட்ட இந்தியா, பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
தெற்காசியாவுக்கும் தென் கிழக்காசியாவுக்கும் பாலமாக செயற்படுகின்ற பல்தரப்பு தொழில் நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளின் முன் முயற்சி அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாடே புதுடில்லியில் நாளை ஆரம்பமாகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தியா செல்லவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் இன்று உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி உட்பட இந்தியத் தலைவர்கள் பலருடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குமிடையிலான நேரடிப் பேச்சுகள் நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் தமிழக கட்சிகளும் புதுடில்லிக்கு தொடர்ந்தும் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வரும் நிலையிலேயே, இலங்கை இந்தியத் தலைவர்களின் நேரடிச் சந்திப்பு இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்த வேண்டுமென தமிழகம் புதுடில்லிக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. தமிழகத்தின் இந்த அழுத்தங்கள் காரணமாக புதுடில்லி நெருக்கடியானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதுடில்லி, தமிழகத்தின் கோரிக்கைப்படி போர்நிறுத்தத்தை வலியுறுத்தினாலும், இலங்கை அரசு அதனை ஏற்றுக் கொள்ளும் என எந்த விதத்திலும் எதிர்பார்க்க முடியாதென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, போர்நிறுத்தம் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு இதுவரை நேரடியாக அழுத்தம் கொடுக்காத போதிலும் போரை தொடர்வதற்குப் பதிலாக அரசியல் தீர்வு யோசனைகளை தாமதப்படுத்தாமல் முன்வைக்குமாறு வலியுறுத்தலாமென நம்பகமாகத் தெரிய வருகின்றது.
ஏற்கனவே, ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ புதுடில்லி சென்றிருந்த போது கூட இந்தியா விரைவான அரசியல் தீர்வு குறித்தே வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய அரசியல் தீர்வு தொடர்பான சர்வகட்சி மாநாட்டுக் குழுவின் முன்மொழிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட இந்தியத் தலைவர்களுக்கு தெளிவு படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் அழுத்தத்தை நிராகரிக்க முடியாத நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வ கட்சிக்குழுவின் முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வு தொடர்பான யோசனைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவாக கலந்துரையாடவிருக்கின்றார்.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசு முன்வந்துள்ள போதிலும், போர் நிறுத்தமொன்று தொடர்பாக இந்தியா அழுத்தம் கொடுக்குமானால் அதனை இலங்கை முற்றாக நிராகரிக்கும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ள அதேவேளை, புதுடில்லி எடுத்த எடுப்பில் அப்படியானதொரு அழுத்தத்தைக் கொடுக்குமா என்பதும் சந்தேகத்திற்கிடமானதே எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனினும், அடுத்த வருட முற்பகுதியில் பொதுத் தேர்தல் வருவதால் தமிழகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. இதனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவாரெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-எம்.ஏ.எம்.நிலாம்- (Thinakkural)