மக்கள் கலை இலக்கிய படைப்பாளிகள் தொடர்பாக நோக்கும் போது புலமைவாய்ந்த கல்வியியலாளர்களின் பால் பார்வையை திருப்பி வியப்பாக நோக்கும் இந்த காலத்திலே யாராலும் திரும்பிப் பார்க்கப் படாத அற்புத நாடகக் கலைஞன் ஒருவன் எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றான் அவர் 39 மேடை நாடகங்கள, பல விருதுகள், கலைக்காக பல ஆயிரம் ரூபா பொருள் இழப்பு, பல அரசியல் வாதிகளின் பகை, என்பவற்றை மட்டும் சம்பாதித்து கலை சேவை புரிந்த அட்டன் பளிங்கு மலை தோட்டத்தின் புகழ் மிக்க மக்கள் இலக்கிய வாதி பீ.எஸ்.செல்வராஜா.
பொன்னன் சின்னைய்யா செல்வராஜா ஒரு தோட்டத் தொழிலாளி பல இசைக்கருவிகளை இசைக்கத் தெரிந்த இவர் மேடை நாடகங்களை எழுதி இயக்கி கலைஞர்களுக்கு ஒப்பனை செய்து இசையமைத்து சில கதாபாத்திரங்களில் அவரே நடித்தும் இருக்கின்றார்.
இவரது அனைத்து நாடகங்களும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிமை சிந்தனையை உடைத்தெரிவதற்காகவும் மூடநம்பிக்கைகளை தகர்த்தெரிவதற்காகவும் பெண்ணடிமை சிந்தனையை சுட்டெறிப்பதற்காகவும் முற்போக்கு கருத்துக்களையும் மனித நேய சிந்தனைகளையும் உயிர் நாதமாகக் கொண்டு படைக்கப் பட்டவையாகும்.
இவரது படைப்புகளில் இலங்கேஸ்வரன் உறங்காத விழிகள். ஒரு நாள் நீதி வெல்லும் .விதியே உன் முடிவென்ன? மறக்க முடியாத மனிதர்கள். நீங்காத நினைவுகள். புதிய சாம்ராஜ்யம். மகா பாரதம். நீதியின் தீர்ப்பு. போன்ற பல நாடகங்களை பல தோட்டங்களிலே மேடையேற்றியதுடன் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்திய மேடை நாடக போட்டிகளிலும் பல பரிசுகலையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
தனது நாடகக் குழுவிற்கு பளிங்கு மலை பாண்டியன் பால் ராஜ் அண்ணா ஞாபகத்தில் முத்தமிழ் கலாமன்றம் என்ற பெயரைசூட்டி இயக்கி வந்துள்ளது பாண்டியன் பால்ராஜ் என்பவர் தனது கலை வழி காட்டி என்பதனால் அவருக்கு நன்றி கடன் புரிவதற்காக அந்த பெயரை வைத்ததாக கூறுகின்றார் இவரோடு தோளோடு தோள் நின்று உழைத்த கே.எம்.மகாலிங்கம் சி.ஜி.ஆர்.சுப்ரமனியம் ஆகியோரையும் ஞாபகப்படுத்தும் இவர் முன்னாள் கம்யுனிஸட் கட்சி தலைவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
நீதியின் தீர்ப்பு என்னும் நாடகத்தினை மேடையேற்றியதனால் அதில் புதைந்திருந்த அரசியல் விமர்சன கருத்தியல்கள் பல மலையக தொழிற்சங்க வாதிகளை சினம் கொள்ள செய்ததாக கூறுகின்றார்.
தனது சக தோழர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த துக்ககரமான நிகழ்வுகளின் காரணத்தினால் விதியே உன் முடிவென்ன? எனும் நாடகம் உருவானதென்றும் கூறும் அவர்தனது நாடகங்களினூடாக தீண்டாமைக்கு எதிரான கருத்தியல்களை நகைச்சுவையுடன் வழங்கி பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வந்தவர்.
அரசியல் இடையுறுகளின் காரணங்களினாலும் ஒரு சிலரின் சுயநல போக்குகாரணத்தினாலும் தனது கலை வாழ்க்கை இடை நின்று போனதாகவும் மீண்டும் அவரது கலைப்படைப்புக்களுக்கு உயிர் கொடுத்து மீள்ளுருவாக்கம் செய்ய காத்துள்ளார்.
தனது வாரிசான வெலிங்டன் தோட்ட பாடசாலையின் உப அதிபர் எஸ்.வாசு தேவன் பாடசாலை மட்டத்தினாலான பல நாடகங்களை அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற வைத்த தந்தையின் கலை வாரிசு என தனது அடையாளத்தை பதித்துள்ளார் இவர்களின் கலை சேவை நாட்டுக்கு நல்லது செய்ய வாழ்த்துகின்றோம்.