இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மற்றுமொரு பிரதான காரணி பௌத்தமதமும் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுமாகும். இப்பௌத்த பீடங்கள் பின் காலனிய அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. சோவனிச, பேரினவாத அரசியல் இங்கு தான் உற்றெடுக்கின்றது. முன்னை நாள் இராணுவத் தளபதியும் மகிந்த அரசுடன் இணைந்து இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்தவரும் எனக் கருதப்படும் சரத் பொன்சேகா இன்று பௌத்த பீடாதிபதிகளிடம் ஆசிபெற்றுள்ளார். இப்பீடங்கள், யுத்தம் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சவிற்கு இலங்கையின் அதியுயர் விருதை வழங்கிக் கௌரவித்ததன என்பது குறிப்பிடத்தக்கது. போர் நிகழ்ந்த வேளையில் 13 திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை முன்வைப்பேன் எனக் கூறியது போலவே சரத் போன்சேகாவும் இன்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இலங்கையின் அனைத்து வாக்குக் கட்சிகளும் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா என்ற இரு சிங்கள பௌத்த அடிப்படை வாதிகளிடையே தம்மை அடையாளப்படுத்தியுள்ளன.
பௌத்த பீடங்களின் ஆசிபெற்ற மறுகணம் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பொன்சேகா, 13வது திருத்தச் சட்டம் குறித்து மறுபடி கருத்து வெளியிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக அமையும் எனக் கருதப்படுவது இங்கு குறிப்பிடத் தக்கது.