மிகப் பெரிய அச்சத்தில் ஆழ்ந்துள்ளது மேல் மத்திய தரவர்க்கம் .சமூகக் காரணங்களைக் கொண்ட கொள்ளை புதிய சவாலாக தமிழக அரசை அச்சுறுத்தத் துவங்கியுள்ளது. சென்னைக்குள்ளும் சென்னைக்கு வெளியிலும் பணக்கார ஆலை அதிபர்கள் , பெரும் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிப்பதும் தேவைப்பட்டால் கொலை செய்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்ட நிலையில் ஒரு காதணிக்காவோ சிறு மூக்குத்திக்காவோக் கூட பெண்கள் கொல்லப்படுகிற செய்திகளையும் நாம் காண முடிகிறது.
புதிய முறையில் மிகப்பெரிய நகைக்கடைகளை துளையிட்டு கோடிக்கணக்கான ரூபாய்களைக் கவ்ர்ந்து செல்வது அதிகரித்துள்ளது. சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கும் நிலையில் பெண்கள் அச்சமடைந்துள்ளார்கள். சென்னை கே.கே. நகரில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் சில வழக்குகளில் இன்னமும் கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதோடு குற்றங்களும் சென்னையில் குறைந்தபாடில்லை.
இம்மாதிரியான் கொள்ளை கொலை போன்ற சமூகக் கேடுகளில் பெரும்பலான குற்றவாளிகள் தண்டிகப்படுவதில்லை. எட்டாத உயரத்தில் சென்று விட்ட விலைவாசி , வறுமை, கடன் தொல்லை , கந்து வட்டி, வேலைவாய்ப்பின்மை அகோரமான வீட்டு வாடகை என நகரத்தில் கீழ் மத்திய தரவர்க்கம் வாழ முடியாத நிலையில் தவிக்கும் போது ஏழைகளின் நிலையை எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஏழ்மையும் , வறுமையும் எங்கெல்லாம் அதிகரித்துச் செல்கிறதோ அங்கெல்லாம் கொள்ளை , கொலை போன்ற சமூக நோய்கள் மக்களை பீடிப்பது யதார்த்தம்.
குற்றங்களை மறைக்க போலி மோதல்களை நடத்தும் தமிழக அரசு
2006-ஆம் ஆண்டு கருணாநிதி ஐந்தாவது தடவையாக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட 20 -பதுக்கும் மேற்பட்டோரை ரௌடிகள் என்னும் பெயரில் என்கவுண்டர் என்ற பெயரில் போலி மோதலில் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. பொதுவாக சமூக நிலையில் எழுந்து வரும் அரசியல் பதட்டங்கள் , சமூக வன்முறைகளை பாதுகாப்பாற்ற நிலை என்கிற போக்கு அதிகரித்திருக்கும் நிலையில் தொடர்ந்து ரௌடிகளைக் சுட்டுக் கொலவதன் மூலம் மக்களிடம் ஒரு விதமான ஹொரோயிச தோற்றத்தை உருவாக்க அரசு நினைக்கிறது.
உண்மையில் என் கவுணடர் செய்யபப்டும் ரௌடிகள் தனித்து இயங்குகிறார்களா? இவர்களுக்கு அரசியல்வாதிகள் , போலீஸ் கூட்டு உண்டா? அரசியல்வாதிகளுக்குள் எதிரணிகள் உருவாவது போல ரௌடிகளுக்குள்ளும் எதிரணிகள் உண்டா? அரசியல் தலைவர்களையும்இ ஊடகங்களையும் மிரட்ட அரசியல்வாதிகள் ரௌடிகளைப் பயன்படுத்தியது உண்டா? போலீஸ செய்யும் சில கருப்பு நடவடிக்கைகளுக்கு ரௌடிகளை பயன்படுத்துவதுண்டா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகிற நிலையில்.
” சில வழக்கறிஞர்கள் ,காவல்துறையினர் அரசியல்வாதிகள் இவர்களின் அனுசரணையோ ஆதரவோ இல்லாமல் ரௌடிக் குழுக்களால் இயங்கவே முடியாது.பல நேரங்களில் ரௌடிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அலோசனை வழங்கும் சேவையை சில வழக்கறிஞர்களும் காவல்துறை அதிகாரிகளும் செய்திருக்கிறார்கள்“ ரௌடிகளின் வலைப்பின்னல் குறித்து இப்படிச் சொன்னது என்கவுண்டர்களுக்கு எதிராக செயல் படும் மனித உரிமை அமைப்பினரோ என்கவுண்டர்களால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவரரோ சொன்ன வரிகளில்லை.தனது டாக்டர் பட்ட ஆய்வுக்காக “ “Organized Crime”” என்கிற தலைப்பில் ஐ.பி.எஸ் அதிகாரி காந்திராஜன் சமர்ப்பித்த ஆய்வில் உள்ள வரிகளின் தொனிதான் இது.
கடந்த பத்தாண்டுகளில மட்டும் தமிழகத்தில் 50 பேர்வரை போலி போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நகசல்பாரிகள் , தமிழ்த் தேசிய போராளிகள் , ரௌடிகள் என இந்த மோதல் கொலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இப்போது கடைசியாக மதுரை செக்போஸ்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கவியரசு முருகனும் அதற்கு சில நாட்கள் முன்னர் திண்டுக்கல் பாண்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வழக்கமாக ஒவ்வொரு என்கவுண்டர்களின் போதும் போலீஸ் புதுப் புதுக் கதைகளைச் சொல்வதில்லை. ஏனென்றால் மக்களின் இம்மாதிரியான என்கவுண்டர்கள் குறித்து அக்கரையற்றவர்களாக இருக்கிறார்கள். இம்மாதிரியான கொலைகள் எவ்வித பிரச்சனைகளையும் எழுப்புவதும் இல்லை.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்படும் போலி மோதல்களுக்கு எதிராகப் பேசும் மனித உரிமை அமைப்புகள் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் அடக்கியே வாசிக்கின்றன. ஊடகங்களோ வரிந்து கட்டி ரௌடிகள் பற்றிய கதைகளை கட்டி விடுகின்றன. பெரும்பாலான ரௌடிகள் இரண்டு மனைவிக்காரர்கள் என்றும் நடிகைகளோடு உல்லாசம் அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் வந்த பைக் கூட திருடப்பட்ட பைக் , என்றெல்லாம் போலீஸ் கதை சொல்லும் , ஒரே மாதிரியாக பொலீசின் முழங்கைக்குக் கிழே கட்டுப் போடப்பட்டிருக்கும்இ படு பயங்கரமான ஆயுதங்களான வீச்சாரிவாள் , கத்தி , ஒரு துருப்பிடித்த துப்பாக்கி அங்கே சிதறிக்கிடக்கும் , இதை எல்லாம் விட ரௌடிகளின் தாக்குதலால் நிலை குலைந்த எஸ்.ஐ.யின் அலரல் சத்தம் கேட்டு மதுரை துணைக் கமிஷனர் வெள்ளைதுறை துப்பாக்கியோடு( தமிழகத்தின் பெரும்பலான போலீஸ் கொலைகளை நடத்தியது இந்த வெள்ளைதுரை தான் , சென்னையில் ஆயோத்திகுப்பம் வீரமணியைச் சுட்டுக் கொன்றதும் இவர்தான்) நிச்சயம் அங்கு வந்து விடுவார். இந்த வெள்ளைதுரைக்கு மதுரையில் ரௌடிகள் தாக்கினாலும் சத்தம் கேட்கும் சென்னையில் ரௌடிகள் தாக்கினாலும் சத்தம் கேட்கும். மதுரை செக்போஸ்டில் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதும் இவர்தான்.
இம்மாதிரி போலீஸ் என்கவுண்டர்கள் குறித்த பிரச்சனை இந்திய அளவில் எழுந்த போது போலிஸ்என்கவுன்டர் கொலைகளை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் 2003ம் ஆண்டிலேயே அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி , தமிழக காவல்துறை தலைவருக்கும் ,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 08-08-2007 அன்று கடிதம் எழுதியுள்ளார். இதன்படி இந்த சம்பவங்கள் குறித்து கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். வழக்கின் முடிவில் காவல்துறை தவறிழைத்ததாக முடிவு செய்யப்பட்டால் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று என்கவுன்டர் சம்பவங்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தலைமைச் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த கடிதத்தின்படி இதுவரை நான்கு அறிக்கைகள்வரை சமர்ப்பிக்கப் பட்டிருக்க வேண்டும். இது பற்றி எந்த மனித உரிமை அமைப்புகளோஇ ஊடகங்களோ கேள்வி எழுப்பத் தவறுகின்றன.
என்கவுண்டர் எனப்படும் மோதல் கொலைகள் இந்தியாவுக்கு அறிமுகமானது அறுபதுகளில்தான் மேற்குவங்கத்தில் வேர் விட்டுக் கிளம்பிய நக்சல்பாரிகளை வேட்டையாட என்கவுண்டரை ஒரு கருவியாக பயன் படுத்தியது காவல்துறை.மேற்குவங்கம் ,ஆந்திரம் ,கேரளம் பின்னர் தமிழகம் என என்கவுண்டர் கொலைகள் பரந்து விரிந்திருந்தது.அதிரடியாக கிராமங்களைத் தாக்கி கொள்ளையிடும் சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளையர்களையும்இகாஷ்மீரில் தீவீரவாத பாதையில் காலடி வைக்கும் இளைஞர்களையும் , தன்னாட்சிக் கோரிக்கைக்காக போராட முன்வந்த இளைஞர்களையும் ,பஞ்சாபில் காலிஸ்தான் போராளிகளை வேட்டையாடவும் , தெலுங்கானாப் பகுதியில் நிலை கொண்டிருந்த மாவோயிஸ்டுகளை வேட்டையாடவும் என்கவுண்டரை போலீஸ் ஒரு கருவியாக பயன் படுத்திக் கொண்டது.
எழுபதுகளில் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது நாடு முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்ட போலீஸ் வன்முறை வெறியில் பலியான உயிர்களும் உண்டு.தமிழகத்தைப் பொறுத்த வரையில் நெருக்கடி நிலையை எதிர்த்த காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது குடும்பமும் கட்சியும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானதும்.சென்னை சிட்டிபாபுவும் சாத்தூர் பாலகிருஷ்ணனும் சிறைக்குள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டதும் சோகமான கருப்பு என்கவுண்டர் வரலாறுதான்.1975 – ல் நெருக்கடி நிலை காலத்தில் திமுக தன் ஆட்சியையே இழந்தது.ஆனால் ஐந்தாவது முறையாக பதவியேற்றிருக்கும் கருணாநிதியின் ஆட்சியில் இது வரை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் போலி மோதல்களில் ரௌடிகள் சகட்டு மேனிக்குக்கொல்லப்படுகிறார்கள்.
போலீஸ் போட்டி போட்டுக் கொல்கிறது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல் பாண்டி , வேலு என்ற இருவரை சென்னை போலிஸ் சுட்டுக் கொன்றது இதில் திண்டுக்கல் பாண்டி மீது 18 வழக்குகள் இருப்பதாக போலீஸ் சொல்கிறது. இவர்களை சென்னை நீலாங்கரையை ஒட்டிய பனையூரில் வைத்து மோதலின் போது சுட்டுக் கொன்றதாக சென்னைப் போலீஸ் சொன்னாலும் திண்டுக்கல் பாண்டியின் மனைவியோ ‘’அவரை ஒரு நாள் முன்பே பிபரவரி எட்டாம் தேதியே போலீஸ் திண்டுக்கல்லில் வைத்து பிடித்துச் சென்று விட்டது. தகவல் கேள்விப்பட்டதும் திமுக அமைச்சர் பெரியசாமியைப் போய் பார்த்து என் கணவரைக் காப்பாற்றக் கோரினேன். ஆனால் அவர் என்னை வெயிட் பண்ணச் சொன்னார். இப்போது போலீஸ் என் கணவரை சென்னையில் வைத்து சுட்டுக்கொன்று விட்டதாகத் தெரிகிறது. கேட்டால் எந்தத் தகவலும் எனக்குச் சொல்ல மறுக்கிறார்கள்“” என்று அழுது அரற்றுகிறார் திண்டுக்கல் பாண்டியின் மனைவி. இம்மாதிரியான ரௌடிகளின் மனைவிகளின் குரல்கள் ஆளும் வர்க்க ஊடகங்களில் எடுபடுவதில்லை. பெரும்பாலும் வறுமைஇ சமூக புறக்கணிப்பிற்குள்ளாகும் பெண்கள் ரௌடிகளுக்கு இரண்டாம் தரமாக வாழ்க்கைப்படுவதும். ரௌடிகள் என்றாலே இரண்டு மனைவிக்காரர்கள் என்ற பொதுப்புத்தியில் ஊடகங்கள் அவர்களின் தனிப்பட்ட உறவுகளை தொடர்ந்து இழிவு செய்து எழுதவும் செய்கின்றன. இம்மாதிரி ஊடகங்கள் ஏன் இரண்டிற்கும் மேலான மனைவிகளைக் கொண்ட நம் தலைவர்களைப் பற்றி ஏன் எழுத மறுக்கின்றன? என்று யாராவது கேட்டால் அது நியாயமான கேள்வியாக இருக்கும்தானே?
திண்டுக்கல் பாண்டியும் வேலுவும் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குள் மதுரை போலீஸ் கவியரசு, முருகன் என்ற இருவரைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் மீது 53 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் சொன்னது. உண்மையில் நாம் விசாரித்தவரையில் இவர்கள் மீது ஒரு கொலை வழக்குக் கூட இல்லையாம். வழிப்பறிஇகொள்ளை வழக்குகள் சில உள்ளன.உண்மையில் சென்னை போலீஸ் திண்டுக்கல் பாண்டியைக் கொன்றதுஇ மதுரை போலீஸ் நீங்கள் மட்டும்தான் என்கவுண்டர் செய்வீர்களா? நாங்கள் செய்யமாட்டோமா? என்று இருவரை போட்டுத்தள்ளியிருக்கிறார்கள். நண்பர்களே இது கற்பனையாக எழுத வில்லை. தமிழக காவல்துறைக்குள் என்கவுண்டர் தொடர்பாக ஒரு ஈகோ யுத்தம் உருவாகியுள்ளதாகவும் அந்த யுத்தத்தில் யார் அதிகம் என்கவுண்டர்களைச் செய்தார்கள் என்கிற போட்டி உருவாகியும் உள்ளதாம். ஒரு சில வருடங்களுக்கு முன்பு இதன் உச்சமாய் திருட்டு வழக்கு ஒன்றில் பிடித்துச் செல்லபப்ட்ட ஒருவரை போலீஸ் சுட்டுக் கொல்ல அது உயர்நீதிமன்றத்தில் பிரச்சனையாகி கடைசியில் தமிழக காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். ஆனால் ஒரு உயிர் அநியாயமான முறையில் பறிப்பட்டு விட்டது. போலீஸ் ஒரு மன்னிப்போடு தங்களது கொலைக் கரங்களை கழுவிக் கொண்டது.
தொடர்ந்து நடைபெறும் என் கவுன்டர்கள் அதில் ஈடுபடும் அதிகாரிகளை ஹிரோக்கள் போல சித்தரித்து ஆளும் கட்சி ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிடுகிற அதே வேளையில் என்கவுண்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முதல்வர் விருதும் பதவி உயர்வுகளும் கொடுத்து அரசு ஊக்குவிக்கிறது.
வீரப்பனை மயக்க மருந்து கொடுத்து கொன்று விட்டு என்கவுண்டர் என்று கதை சொன்ன போலீசாருக்கு அப்போதைய முதல்வர் ஜே மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தினார். இப்போது ஆளும் கருணாநிதியோ முதல்வர் விருதும் பதவி உயர்வும் கொடுத்து என்கவுன்டரை ஊக்கப்படுத்துகிறார். மாநில முதல்வ்ரே ஊக்கப்படுத்தும் இந்த விஷயம்தான் போலீசிடம் என்கவுன்டர் கொலைகளை தொடர்ந்து நடத்தும் போட்டியை உருவாக்கியிருக்கிறது. தவிறவும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத வழக்கில் கொல்லப்பட்டு விட்ட இந்த ரௌடிகளை குற்றவாளிகளாக்கும் செயலையும் காவல்துறை செய்கிறது. சமீபத்தில் சென்னை கே.கே.நகர் பகுதியில் அதிகரித்து வரும் கொலை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் சென்னை போலீஸை கண்டித்திருந்தது. இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் முன்னாள் டாமின் அதிபர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் போலி மோதலில் கொல்லப்பட்டு பிணமாகிவிட்டா திண்டுக்கல் பாண்டிக்கும் அக்கொலைக்கும் தொடர்பிருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படியானால் பாண்டிக்கும் அக்கொலைக்கும் தொடர்பிருப்பது போலீசுக்கு இத்தனை நாள் தெரியாமல் போனது ஏன்? அதை நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்க வேண்டியதுதானே?
ரௌடிகள் எல்லோரும் தண்டிக்கப்படுகிறார்களா?
அரசியல் ரௌடிகள் என்போர் யார்?
மத்யமரையும் பணக்காரர்களையும் திருப்திப்படுத்தும் கொலைகளா இவைகள்?.
இக்கொலைகளால குற்றங்கள் குறைகிறதா?
அடுத்த வாரமும் தொடரும்…
அரசியல் கூட்டு இல்லாத ரவுடி கள் இருக்க மாட்டார் கள்