தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்க அரசு நடத்தி வரும் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதால் இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு ஏற்க மறுத்துள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்க அரசின் நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதிக் கட்டம் நெருங்கி விட்டது.
இந்நிலையில் போரை நிறுத்துமாறு ஜரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சிறிலங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று ஏன் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைந்தால் போர் நிறுத்தம் என்ற சொல்லைக்கூட அனைத்துலக நாடுகள் உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
ரெலோ தாக்கப்பட்டு பலவீனப்பட்ட பின்,ஆயுதப் போராட்ட இயக்கத்தின் பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக கட்டுப்படுத்தப்பட்ட ஒரு தாக்குதலை 1986 மே 20 மட்டில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனையிறவு முகாமிலிருந்து முதலில் வந்த இராணுவம் பளையில் திரும்பிச் சென்றது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து புறப்பட்ட ஒரு பகுதியினர் மண்டைதீவில் ஒரு கடற்படைத்தளத்தை அமைத்தனர். கோட்டைக்குள் கெலிக்கொப்டரை இறக்குகையில் அண்மையிலிருந்து சுடப்படலாம் என்பதால், படையினரை கோட்டைக்கு பாதுகாப்பாக அனுப்புவதற்காகவே இத்தளத்தை நிறுவினர். இலங்கை இராணுவம் தொண்டமானாற்றிலும் வல்வெட்டித்துறையிலும் உள்ள தமது தமது முகாம்களை விஸ்தரிப்பதிலும் வெற்றிபெற்றனர். மே மாதம் வரை மக்கள் மத்தியில் எழுந்த கேள்வி யாதெனில்,இந்த முகாம்களில் ஒன்றைத் தாக்குவதற்கு போராளிகள் எப்போது முனைவார்கள் என்பதாகும்.இப்பொழுதுள்ள கேள்வி என்னவென்றால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் எப்பொழுது தாக்குதலை ஆரம்பிக்கும் என்பதாகும். விடுதலைப் புலிகள் எதிர்ப்பதற்கும் கடினமான ஒரு எதிரியை உருவாக்கி விட்டார்கள் என நன்கு உணரப்பட்டது.
நன்றி; முறிந்தபனை(பக்கம் 93)