• வடக்கினையோ கிழக்கினையோ பொருத்தளவில் மக்கள் தமது கட்டுமானங்களை யுத்தத்தினால் முற்றாக இழந்து விட்டனர். எனவே அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுடனும் சங்கிலித் தொடரான சிக்கல்மிக்க அவலங்களே நிறைந்து கிடப்பதனால் மாணவர்கள் பாடசாலை இடைவிலகளுக்கு எதிராக மாணவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் இணைந்ததாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. குடும்ப வறுமையின் காரணமாக அனேக மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல் ஒன்று தெரிவித்திருந்தது. அத் தகவல் சரியானது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது போன்றே கடந்த ஆண்டின் ஆரம்பத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலை கல்வியைக் கைவிட நேர்ந்திருகின்றது என்பது ஆய்வுகள் வாயிலாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. 2013 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியாகிய 2012 ஆம் ஆண்டை மையப்படுத்திய ஆய்வில,; நாடளாவிய ரீதியில் 1 இலட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இதில் வடக்கு மாகாணத்தில் 38 ஆயிரத்து 321 மாணவர்களும் அதற்கு அடுத்த படியாக கிழக்கு மாகாணத்தில் 24 ஆயிரத்து 614 மாணவர்களும் தமது பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட இவ்விரண்டு மாகாணங்களும் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகுவோர் விடயத்திலும் முதன்மை இடத்தையே பிடிக்கின்றன.
பொதுவாக பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகுவதற்கான சூழ்நிலைகள் போரின் பின்பான காலகட்டத்தில் அசாதாரணமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. போரின் பின்பான சமூகப் பொருளாதார தாக்கங்களைக் கையாள்வதில் மிகப் பெரும் இடைவெளியும் தோல்வியும் காணப்படுவதன் யதார்த்தமே இதற்கான காரணமாகும். அரசாங்கம் கூறும் அபிவிருத்தித் திட்டங்கள் வாயிலாகவும் தமிழ் மக்களின் சமூக அலகுகளினாலும் நிவர்த்திக்கப்படாத பிரச்சினையாகவுள்ளன. அல்லது கண்டு கொள்ளப்படாமலும் கைவிடப்படும் பிரச்சினையாகவும் உள்ளன.
இன்றைய நிலையில் வடக்குக் கிழக்கில், பாடசாலை மாணவர்கள் அதிகபடியாக பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவதற்கு குடும்ப வருமானம் அற்ற தன்மைகளே அதிகபடியான காரணம் என சகல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றன. மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிடுவதற்கான காரணியாகவுள்ள குடும்ப வறுமை என்பது தனியாக கல்வி நிர்வாக அமைப்புக்களால் மாத்திரம் கண்டுகொள்ளப்பட்டு நிவர்த்தக்கப்பட முடியாதது ஆகும். அது நாட்டின் ஒட்டுமொத்த துறைகளையும் கொண்டே பாடசாலைக்கல்வியில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் பிரச்சினை வைக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
மாணவர்கள் இடைவிலகல்கள் தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதற்காக உதாரணமாக,; மல்லாகத்தில் உள்ள கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் இடைத்தங்கல் முகாமின் அவதானிப்புக்கள் இக் கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இருந்து கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்பாதுகாப்பு வலயம் ;காரணமாக வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் கணிசமான தொகையினர் இம் முகாமில் வசிக்கின்றனர். இம் முகாமில் குடும்பம் ஒன்று 10 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்ட வீடுகளில் தான் பல வருடக்கணக்கில் நிரந்தரமாக வாழத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு மலசல கூடத்தினை குறைந்தது தினம் ஒன்றுக்கு 50 பேருக்கு மேல் உபயோகிக்க வேண்டியுள்ளது. பொதுக்கிணறுகளில் காலையில் மக்கள் அலைமோதுகின்றனர். இடப்பெயர்வுக்கு முன்னர் தமது சொந்தக் கிராமங்களில் விவசாய , கடல்தொழில் முயற்சிகள் வாயிலாக வருவாய் ஈட்டிவந்த இம் மக்கள் இடப்பெயர்வுகளுக்குப் பின் தொழிலுக்கான மூலாதாரங்கள் எதுவும் இன்றி கூலிவேலைகளுக்காக அலைகின்றனர். பொதுவாக குறைந்த சம்பளத்திற்கு நிச்சயமற்ற நாட்களைக் கொண்ட கூலிவேலைகளுக்கே மக்கள் அனேகமாகச் செல்கின்றனர். இவ்வாறானதோர் இடைத்தங்கல் முகாமில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் அனேகர் மேற்கூறப்பட்ட அவலங்களின் காரணமாக பாடசாலைகளுக்கு செல்லாது விட்டு விடுகின்றனர்.
இவ்வாறாக பாடசாலை செல்லாத மாணவர்;களை பாடசாலைகளுக்கு மீள ஈர்த்துச்; செல்லும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் திரும்பத் திரும்ப ஈடுபடுகின்றனர். அதன் ஒரு கட்டமாக மாணவர்களின் பாடசாலை வரவு அல்லது இடைவிலகல்கள் தொடர்பில் பெற’றோருடன் பேசுவதற்கு அரச அதிகாரிகள் முகாமிற்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் அதிகாரிகளில் சிறுவர் நன்நடத்தை பகுதியினர், அரசாங்க நிர்வாக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனச் பல மட்டங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் பெற்றோர்களால் உரியவாறு அணுப்பப் படவேண்டும். அவ்வாறாக பெற்றார் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது விடுவதன் பாதிப்பு பற்றி பேசுகின்றனர். கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படாது விட்டால் சட்ட நடவடிக்கை பற்றியும் பேசுகின்றனர். உண்மையில் இந்த அதிகாரிகளின் கடமையுணர்வு பாராட்டப்படவேண்டியது. அதேயிடத்தில் அதிகாரிகள் பலரும் மாணவன் பாடசாலை செல்வதையோ அல்லது இடைவிலகளையோ குடும்பப் பின்னணிகள் மற்றும் பாதிப்புக்களின் தன்மைகளுடன் தொடர்பு பட்டதாக அணுகுவதைத் தான் காண முடியவில்லை. இது யதார்த்த பூர்வமான தீர்வையும் இப் பிரச்சினையில் தள்ளிப் போடுகின்றது. சிலசமயம், அவ் அதிகாரிகள் தம்மால் தீர்வுகாண பட முடியாததை பற்றி பேசித்தான் என்ன என்ற நிலையில் இருக்கின்றார்களோ தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் எம்மிடையே மாணவர்களது இடைவலகளுடன் தொடர்பு பட்டதாக அம் மாணவனின் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான பொறிமுறைகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன. இவ்வாறான ஆய்வுகளின் முடிவுகள் பாடசாலை மாணவர்களின் இடைவிலகள் தகவலுடன் முழுமையாக அரசியல் நோக்கங்கள் அற்று வெளிப்படுத்தப்பட வேண்டும். மேலுமொரு உதாரணத்தினை நோக்குவோமாயின், அச்சுவேலி பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளிகள் சிலர் தினம் ஒன்றுக்கு தம்மால் உண்பதற்கு வசதியில்லை. பின்னர் எவ்வாறு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப முடியும்? பசியுடன் பிள்ளைகள் எவ்வாறு கற்பது பற்றி யோசிப்பது என இக் கட்டுரை வாயிலாகக் கேள்வி எழுப்புகின்றனர். எனவே கல்வி கற்கக் கூடிய பிள்ளைகள் உள்ள குடும்பங்களின் வறுமை நிலையுடன் இணைந்ததாகவே மக்களின் கல்வி விருப்பினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. கல்வி என்பது சமூக முதலீடாகவுள்ள நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இனங்கண்டு காலையில் இருந்து மாலைவரையில் முழுநேர உணவுடன் கூடிய பாடசாலைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டிய அவசியங்களும் உள்ளன. காரணம் மக்களின் வறுமை நிலை மாணவர் கல்வியை துண்டாடிவிடுகின்றமையே ஆகும்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் உணவுக்காகத் திண்டாடுகின்றனர். இந்த இடத்தில் மக்களின் வறுமையினையும் கஷ்டத்தினையும் அவர்களின் நிலை நின்று கண்டு கொள்ளவேண்டிய தேவையுள்ளது. விதவைகள் மற்றும் பெண் தலைமையுள்ள குடும்பங்கள் வட கிழக்கில் 86 ஆயிரத்திற்கு மேலாக உள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கு விசேடமான திட்டங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
நடைபெற்ற யுத்தம் பல மாணவர்களை விரும்பியோ விரும்பாமலோ கல்வியில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இவ்வாறாக இடைநின்று போன மாணவர்களை மீள பாடசாலைக் கல்வியில் உள்வாங்குவதில் காலந்தவறியமை உட்பட பல்வேறு சிக்கல்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆகவே அவ்வாறு இடைவிலகியோருக்கு தொழில்துறைப் பயிற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய அவசியம் வடக்கு மற்றும் கிழக்குத் தலைமைகளிடத்தில் உள்ளது. வடக்கு மாகாணத்தில் மோசன் வேலைகள், தச்சுத் தொழிலாளர், கட்டிட அமைப்பில், இயந்திரங்களை இயக்குதல் என பலதரப்பட்ட விடயங்களுக்கும் தென்பகுதியில் இருந்தே தொழிலாளர்களை வரவழைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். எனினும் உள்ளுர் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கள் இன்றி வீடுகளில் இருக்கின்றனர். வட மாகாண இளைஞர்கள் வருமானமின்றி இருக்கையில,; அவர்களின் முன் நுகர்வுக் கலாசாரம் மாத்திரம் விரிவு படுத்தப்படுகின்றது. இது தமிழ் இளைஞர்களை குற்றச் செயல்களில் ஈடுபட்டாவது பணத்தினைத் தேடி எல்லோரையும் போல நுகரவேண்டும் என்ற துரதிஸ்ட நிலைமையினைத் தூண்டுகின்றது.
மாணவர் இடைவிலகளுடன் கல்வித்துறையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகளும் காரணமாக அவதானிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் பாடசாலைகளுக்கு நீண்ட தூரம் மாணவர்கள் கால்நடையாகச் செல்லவேண்டிய நிலைமை வன்னியில் அதிகமாகவுள்ளது. இந்த விடயத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த மாணவர்களுக்கு போக்குவரத்தில் சலுகைகள் அளிக்கப்படலாம். இதற்கு வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலைகள் வாரியாக வசதிக்குறைவான மாணவர்களை இனங்கண்டு வட மாகாண போக்குவரத்து அமைச்சிடம் இலவச பருவச் சீட்டுகளுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். மேலும் வன்னியின் சில கிராமங்களுக்கு பேருந்துகளே செல்வதில்லை. இது பற்றியும் வெளிப்படுத்தல்கள் அவசியமாகவுள்ளன. இவ்வாறாக போக்குவரத்து அற்ற கிரமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தமது கிராமத்தில் இருந்து உயர்தர வகுப்புக்கு கற்பதற்காக செல்வதில் இருந்து புறந்தள்ளப்படுகின்றனர்.
மாணவர்கள் பாடசாலை செல்லாமைக்கு அல்லது இடைவிலகளுக்கு எதிராக மாணவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் இணைந்ததாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். காரணம் வடக்கினையோ கிழக்கினையோ பொருத்தளவில் மக்கள் தமது கட்டுமானங்களை யுத்தத்தினால் முற்றாக இழந்து விட்டனர். எனவே அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுடனும் சங்கிலித் தொடரான சிக்கல்மிக்க அவலங்களே நிறைந்து கிடப்பதனாலாகும். மாணவர்களின் இடைவிலகளை கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால் இப் பிரச்சினை நிவர்த்திக்கப்பட முடியாத ஒன்றாகவே அமையும். குடும்பத்தில் இருந்தே போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் சவால்கள் தோன்றுவதனால் சகல நிர்வாக மட்டங்களும் இணைந்து ஆராய்ந்து நேர்த்தியான சிபாரிசுகளை முன்வைத்து இப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும். மேலும் கடந்த காலங்களில் பாடசாலைகளில் இருந்து பல்வேறுபட்ட துன்பியல் சம்பவங்கள் காரணமாக இடைவிலகியோரை மீளவும் பாடசாலைக் கல்வியில் உள்வாங்க முடியாத நிலைகளும் வடக்கில் தாராளமாகவுள்ளன. எனவே நீண்ட கால கல்வி இடைவிலகல்களை எதிர்கொண்டு தொழிலுக்கான வழிவகைகள் தெரியாதவர்களாக உள்ள இளைஞர்களுக்கு முறைசார கல்வி முறைமையூடாக தொழில் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இத் திட்டத்தினை விசேட முயற்சியாக நிபந்தனைகள் அற்று நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களில் வடக்கு மாகாண சபை அதிக கரிசனை செலுத்த முடியும். மாகாணத்தில் உள்ள நலன்விரும்பிகளைக் கூட இணைத்து செயற்பட முடியும். எவ்வாறாயினும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் சமூக நலிவுகளைச் சந்திக்காது இருப்பதற்கு அவர்களது கல்வி விடயத்தில் அதிக கரிசனை வேண்டும். மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்களைத் தடுக்கும் திட்டங்கள் அவசியமாகவுள்ள அதேவேளை கடந்த காலத்தில் இடைவிலகியோருக்கும் உரிய திட்டங்கள் அவசரமாக அவசியமாகவுள்ளன. இந் திட்டங்கள் சகல தரப்பினையும் சென்றமையும் வண்ணமும் மேற்கொள்ளப்படவேண்டும்.
I recently went to one of the schools in the region to see my old school. The teacher who showed me around insisted that I see the poor state of the hostel they have. It was really bad. The dining hall, showers, toilets, dormitory all were in extremely bad shape. While some are living in extreme wealth to the extent of having even elevators in their 3/2 story houses kids are enduring squalid conditions living in that hostel. It was unbelievable. Hope the readers here are encouraged to help these schools in whatever way they can.