கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் செய்திகள் அதிகம். நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன்கான் சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அது அதானிக்குச் சொந்தமான துறைமுகம். ஆனால், அந்த செய்திகள் அடியோடு அமுங்கிப் போன நிலையில், உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அது நாடு தழுவிய அளவில் பரபரப்பை கிளப்பிய நிலையில் ஆரியன் கான் கைது செய்யப்பட்டார்.
இப்போது மும்பை துறைமுகத்தில் 125 கோடி அளவுக்கு போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
மும்பையில் ஆரியன்கான் கைது செய்யப்பட்டபோது அவரை இழுத்துச் சென்று நார்க்கோடிக் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது பாஜகவைச் சேர்ந்த கே.பி கோஸ்வாமி, இவர் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றை நடத்துகிறார், மேலும் மணீஷ் பானுஷாலியும் அவருடன் செல்கிறார். உண்மையில் ஆரியன்கானை கைது செய்தது போதை பொருள் ஒழிப்பு அதிகாரிகளே இல்லை. அவரை பாஜகவினர் கைது செய்து அரசிடம் ஒப்படைக்கிறார்கள் என்று தகவல்கள் கசிய அதை போதை ஒழிப்புத்துறை மறுத்துள்ளது.
ஆரியன்கானிடம் போதை பொருள் எதனையும் கைப்பற்றவில்லை, கப்பலிலும் கைப்பற்றவில்லை என்று முன்னதாக தகவல் வந்தது. ஆனால், பின்னர் 25 கிராம் அளவுக்கு ஹெராயின் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஐந்து மாநிலங்களில் தேர்தல். பாஜக முன்பைப் போல வெல்ல முடியவில்லை எப்படியேனும் வென்றாக வேண்டிய நெருக்கடியில் பாஜக உள்ளது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என பிரபலங்களை வளைக்க பாஜக திட்டமிடும் நிலையில் பல பிரபலங்கள் பாஜவின் வலையில் சிக்காமல் நழுவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்க போதைப் பொருள் பாவனையை அரசு பயன்படுத்தலாம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.