28.02.2009.
“இலங்கை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் அபாயமான சூழ்நிலை காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியேறாது விடுதலைப் புலிகள் தடுக்கின்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன” என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களிடம் கூறினார்.
“அரசாங்கத்தின் தகவல்களின் படி 70,000 பேர் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டுள்ளனர். ஐ.நா. தகவல்களின் படி 200,000 பேர் அங்குள்ளனர். தமிழ் குழுக்களின் தவல்களின் படி அங்கு 300,000 பேர் சிக்குண்டுள்ளனர்” என ஜோன் ஹோல்ம்ஸ் கூறினார்.
பொதுமக்களை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்குமாறு விடுதலைப் புலிகள் மத்தியில் செல்வாக்குள்ள அனைத்துத் தரப்பினரிடமும் தான் கோரிக்கை விடுத்ததாக ஹோல்ம்ஸ் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கூறினார்.
இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நேரம் வழங்கப்பட வேண்டும் எனவும் தனது இலங்கை விஜயத்தில் அரசாங்கத்தை வலியுறுத்தியதாக ஹோல்ம்ஸ் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வலியுறுத்தியிருந்தனர்.
“அதிகாரத்திலிருப்பவர்கள் பொதுமக்களைப் பாதுகாத்து, மனித உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் மௌரிஸ் ரிப்பெர்ட் கோரிக்கைவிடுத்தார்.
இலங்கையின் நிலைவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.