இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை மிகவும் பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளது.
பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப் புலிகள் தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் டேஸ் பிரவுண் தலைமையிலான அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் இலங்கைக்கான விஜயம் குறித்து பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மோதல்கள் நடக்கும் பகுதிகளில், இலங்கை அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் எனவும், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த குழுவினர் கோரியுள்ளனர்.
வவுனியாப் பகுதிக்கு சென்ற அந்தக் குழுவினர் அங்கு இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடியதாகவும் அப்போது அவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி தற்போது பாதுகாப்பாக தங்கியுள்ளதாக தம்மிடம் தெரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டனின் நாடாளுமன்ற குழுவினரின் அறிக்கை கோருகிறது.