17.10.2008.
பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார்.
இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குணசிங்கே அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரியப்படுத்தியுள்ளார்.
வெள்ளியன்று நடந்த இந்த சந்திப்பின்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை போக்கத்தக்க முறையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என ஷிவ்ஷங்கர் மேனன் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொல்லைக்குள்ளாகும் சம்பவங்கள் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்தியாவின் கவலைகளையும் அவர் அப்போது தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் தொடரும் மோதல்களின் காரணமாக இதில் சம்பந்தப்படாத பொதுமக்கள் சந்திக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று தெரிவித்திருந்த பின்னணியில், இன்றைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.