ராஜபக்ச பாசிச அரசு தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் நிலப்பறிப்பை வரலாற்றில் என்றுமில்லாதவாறு முடுக்கிவிட்டுள்ளது. இராணுவக் குடியிருப்புக்களுக்கும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கும் அப்பாவி மக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன. அதே வேளை இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை ஹிட்லகாலத்தின் நாஸி வடிவில் அரச ஆதரவு பயங்கரவாதக் குழுவான பொதுபல சேனா ஊடாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுளது. இலங்கையின் வாக்குப் பொறுக்குவதில் குறியாக உள்ள பேரினவாதக் கட்சிகள் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டுகொள்வதில்லை.
பலாங்கொட குருகல பிரதேசத்தில் உள்ள கட்டடங்களை மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றாது போனால், 05 ஆயிரம் பேருடன் வந்து குருகலவை முற்றுகையிடப் போவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் சின்னத்தை கொண்ட வேன் ஒன்றில் சென்ற இந்த குழுவினரில் கண்டி மற்றும் பெப்பிலியான விகாரைகளின் பிக்குமாரும் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருகல பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசல் உள்ளிட்ட ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.