போர்க்களத்தில் நின்று செய்திகளை சேகரித்து வெளியிட்ட ஊடகவியலாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா ‘சிரச’ தொலைக்காட்சி ஊடகத்தின் ஒலிவாங்கியை வீசி எறிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன மற்றும் பல அமைச்சர்கள் முப்படைகளின் பேச்சாளர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற முற்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டை நேசிக்கும் ஒழுக்கமான ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் உள்நாட்டில் இருந்துகொண்டு சர்வதேசத்துடன் இணைந்து வடக்கின் இராணுவ நடவடிக்கைகளை இழிவுபடுத்தி நாட்டுக்குத் துரோகம் செய்த சிரச ஊடகத்தை அனுமதிக்கக் கூடாது எனக் கூறிய அமைச்சர் மேர்வின் சில்வா, அந்நிறுவனத்தின் ஒலிவாங்கியை வீசி எறிந்தார்.
இதனையடுத்து இங்கு உரையாற்றிய அமைச்சர், “நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்த எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மன்னர் என்றே அழைக்க வேண்டும். அதுவே நாம் அவருக்கு கொடுக்கும் கௌரவமாகும்” என்றார்