அம்மா தன் மடியிருத்தி
ஆயிரம் எண்ணங்கள் மனதிருத்தி
அணிவித்த பொட்டு!
அவள் தளர்ந்து போகும் காலம் வர
அக்காவின் கைகள்
அழுத்தி அழுத்தி
அழகாய்
இட்டு விடும் பொட்டு!
பச்சை ,மஞ்சள், சிகப்பு, நீலம், கறுப்பு என
வண்ணங்களில் ஜொலிக்கும் பொட்டு!
எளிமை அன்பை வெளிப்படுத்தும்
பரிசுப் பொருளாய் கூட இந்நாளில்
கைகளில் நிறையும் பொட்டு!
அகதியாய் புகுந்த நிலப்பரப்பில்
ஒவ்வொரு தடவையும்
பொருட்கள் வாங்குகையில்
மீதிப்பணத்தை சரிபார்த்தபடி
இரட்டைப் புன்னகையை
அவள் வீசுகின்றாள்
ஒரு புன்னகை அவள் தொழிலுக்காய்!
மறு புன்னகை பொட்டுக்காய்!
நெற்றியில் கிடக்கும் பொட்டினைக் கண்டு
தேசம் கடந்த
அன்னிய தம்பதிகள்
பேச மொழியின்றி
புன்னகையும் தலையசைப்புமாய்
கடந்து செல்லுகின்றனர்!
புலம்பெயர்ந்து
ஆண்டுகள் பல கடந்த நிலையில்
தலைநகர் கொழும்பில் இருந்து
தலதா மாளிகை செல்ல விழைகையில்
உடன் இருந்தவர்கள் :
புத்தி ஜீவிகளல்லர்,
செல்வந்தர்களல்லர்,
பட்டம் பதவி கொண்டவர்களல்லர்,
அதிகாரமிக்கோரின் நண்பர்களுமல்லர்-
அந்த ‘சமாதான ‘ காலத்திலும்
அவர்கள் குரல்கள் கோருகின்றன,
‘பொட்டினை எடுத்து விடுங்கள்’!
பொட்டு தரும் அனுபவங்கள்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
மாறுபட்டு போகின்றன.
பொட்டு அக்கறையை வெளிப்படுத்திற்று!
பொட்டு அன்பினை இனம்காட்டிற்று!
பொட்டு நட்பினை உருவாக்கிற்று!
பொட்டு அணிவதும் அணிவிப்பதும்
அச்சமூட்டுவதாக
ஆனது!
அப்பாவிகளும்
குற்றமற்றோரும்
அந்த
‘பொட்டு வைத்தலை’
எதிர் கொண்ட போதெல்லாம்
பொட்டு வைத்தல்;
பொருள் மாறிப் போயிற்று!!
அதன் விளைச்சலோ……….
குருதி வடிய வடிய
மனித வாழ்வை வாரியள்ளி
குப்பையாய் குவித்து சாம்பலாக்கி
இந்துமாகடலில் எறிந்ததாய்
முடிந்து போனது!
-விஜி.
சிங்களப்பேரினவாதம் தமிழ்பெண்ணியம் என்ற புதிய சித்தாந்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கியவகை உருவாக காரணமாகிவிட்டது.தேசிய`இன விடுதலைப்போராட்டங்களில் பாரிய அளவில் பாதிக்கப்படுவோர் பெண்களேயாகும்.சிங்களப்பேரினவாதம் தார்மீக அடிப்படைகள் இன்றியே தமிழர்கள் அறவழியில் நின்று போரைநடத்தியன் விளைவா இயங்கிவருகிறது.இராசபக்கசே பேரினவாத maleசாவனிஷ்ட்.