ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியும் அதில் சட்டச் சிக்கலை உருவாக்கி வைத்தது கடந்த அதிமுக ஆட்சி. எடப்பாடி பழனிசாமியால் ஆளுநரையும் மீறி அதில் எதையும் செய்ய முடியவில்லை. அற்புதம்மாள் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து சோர்ந்து போனார். பின்னர் மாநில அரசுக்கு கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நீண்ட பரோல் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில்,
\சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர வேண்டியுள்ளது. இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்க கோரி 10ம்தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7ஆம்தேதி உத்தரவிட்டுள்ளது.எனவே மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்.\என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,
\திரு. பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிறை விடுப்பு அளிக்க வேண்டும் என அவரது தாயார் திருமதி. அற்புதம்மாள் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். அரசு அக்கோரிக்கையை கனிவோடு பரிசீலித்தது.திரு. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்க ஆணையிட்டுள்ளேன்!\ என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.