தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடனான அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதிப்புக்குள்ளான ஒரு சமுதாயம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பேச்சுகளின் விபரங்கள் நாட்டு மக்களுக்குத் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
உலகம் பூராவும் நடைபெற்ற பேச்சுகவார்த்தைகளை எடுத்து நோக்கும்போது பகிரங்கத் தன்மை பேணப்படாத பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை வரலாறாகும். பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள இரு தரப்புகளுடனும் பேச்சுகள் நடைபெறுகின்ற பொழுது அது குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்குத் தெரியப்படுத்தப்படாத பேச்சுவார்த்தைகள் சட்டபூர்வமான பேச்சுவார்த்தைகள் அல்ல.
அத்துடன் பேச்சுகளின் விவரங்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பது மக்களுக்குச் செய்யப்படுகின்ற துரோகமாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின்போது பகிரங்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களில் எந்தத் தோல்வியும் இடம்பெறவில்லை எனவும் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகளில் காணப்பட்ட உடன்பாடுகளால் பேச்சுகள் தோல்வியடைந்தன எனவும் பஷீர் சேகுதாவூத் சுட்டிக்காட்டியுள்ளார்







