திருத்தம்: இதற்கு முன்னைய தொடரி;ல் நான் தவறுதலாக சிவனு லட்சுமணன் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான ஆண்டை 1975 என குறிப்பிட்டுருந்தேன். அது 1977 மே 11ந் திகதி என்று திருத்தப்படவேண்டும். இத்தவறை சுட்டிக்காட்டிய ‘எஸ்டேட் போய்” அவர்களுக்கு நன்றி.
1986 பேரெழுச்சியின் பளு …
மலையக வரலாற்றை மாற்றிய தலவாக்கெலைப் பேரெழுச்சிக்கு அடிதளமாக இருந்த சந்திரசேகரனின் பெயர் அதன் பின்னர் அப்புகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. அதன்பின்னர் அவர் சிங்கள இனவாதிகளால் தமிழ் தீவிரவாதியாக கருதப்பட்ட அதேசமயம் இப்பகுதி மலையக தமிழ் மக்களால் புரட்சியாளாராக மதிக்கப்பட்டார். பாதுகாப்புத்துறையின் கழுகுப்பார்வை அவரை வட்டமிட்டது. அவருக்கிருந்த மக்கள் ஆதரவும் தொண்டமானின் செல்வாக்கும் இருந்திராவிடில் அவர் கைதாகியிருப்பார் அல்லது தலைமறைவாகியிருப்பார் என்ற நிலைமை உருவாகியிருந்தது.
அப்பேரெழுச்சி அரசியல்ரீதியில் மலையகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதியபோதும் அது ஏற்படுவதற்கு காரணமானயிருந்தவர்கள் தனிப்பட்டமுறையில் அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சிங்கள காடைத்தனத்திற்கு பதிலடி கொடுப்பதற்கு முதன்முதலாக களத்தில் இறங்கிய வீர இளைஞர்கள் சம்பவத்தோடு தொடர்புடைய கடையின் சொந்தக்காரனால் இனங்காட்டப்பட்டு அவர்கள் மீது பொலிசாரால் வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் பிரதானமானவர் பி. ஜெகநாதன். இவர் முன்னர் நான் குறிப்பிட்ட பி. செல்வராஜின் தம்பி. ஒரு பட்டதாரி. மிகவும் பொறுமைசாலி. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பார். மிகவும் கண்ணியமானவர். சந்திரசேகரனோடு ஒரே பாடசாலையில் கல்விகற்ற அவரது ஆத்மார்த்த நண்பர்களில் ஒருவர் மலையக முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன்மீது அடக்குமுறையும் அச்சுறுத்தலும் பிரயோகிக்கப் பட்டிருந்த வேளையில் துணிந்து செயல்பட்ட முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். சந்திரசேகரன் அமைச்சரான பின்னர் புதிய நண்பர்கள் நிறையபேர் அவருக்குக் கிடைத்தார்கள். அவர்களில் பொரும்பாலானவர்கள் நல்லவர்கள தான். ஆனால் ஒரு சிலர் வேறு நோக்கங்களுக்காக அவரை அணுகியவர்கள். ‘ஜெகா’ என சந்திரசேகரன் அன்புடன் அழைத்த ஜெகநாதன் அதற்கு நேர்மாறானவர். சலுகைகளுக்காகவும் அந்தஸ்துக்காகவும் உறவு வைத்துக்கொள்ளாமல் தனக்குப் பிடிக்காதபோது தானாகவே ஒதுங்கிக்கொண்டவர். அவர் பல்கலைகழகத்தில் படிக்கும்போது ‘பாசறை’ என்ற மார்க்சிச படிப்புக் குழுவில் இணைந்திருந்தவர்.
அப்போது தேசியவாத அரசியலை விட அனைத்து மக்கள் தழுவிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார். இவர் வங்கி ஒன்றில் தொழில்புரிந்து கொண்டு சொந்த செலவில் 1995 வரை சுமார் ஒன்பது வருடங்கள் வழக்கு பேசிவந்தார். கடைசியாக மலையக மக்கள் முன்னணி உருவான பின்னரே அது இப்பிரச்சினையைக் கையாண்டது. உதய ரோஹான் என்ற பிரபல சட்டத்தரணியை அமர்த்தி ‘ஜெகா’ வினதும் ஏனைய இளைஞர்களதும் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது.
குத்துவிளக்கை ஏற்றிவைப்பதற்குக் கூட ஒரு தீப்பொறி தேவை. அதுமாத்திரம் போதாது அதனைப் பற்றிக்கொள்ளக்கூடிய எண்ணெயும் திரியும அதற்குத்தேவை. தலவாக்கெலை எழுச்சி தற்செயலான நிகழ்வு அல்ல. அது ஒரு வெகுஜன எழுச்சி என்பதால் பலதரப்பட்டவர்கள் – அரசியல் ஆர்வமற்றவர்கள் கூட – அதில் பங்கு கொண்டிருக்கலாம். ஆனல் அது நீண்டகாலமாக தலவாக்கெலை பகுதியில் உருவாகிவந்த படிப்படியான விழிப்புணர்ச்சின் விளைவு என்பது அப்பேரnழுச்சியை முன்னால் நின்று தொடக்கிவைத்தவர்கள் யார் என்பதை இனங்கண்டால் புரியும். ‘ஜெகா’ இதற்கு ஒரு உதாரணம் மாத்திரமே. அவரோடு வழக்கு தொடரப்பட்ட ஏனைய இளைஞர்கள் மாத்திரமல்ல நாலாப்பகுதிகளிலும் அவ்வெழுச்சிக்கு தலைமை கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் தலவாக்கெலையை மையமாகக் கொண்டு உருவாகியிருந்த புரட்சிகர மலையக தேசியவாத சிந்தனையினால் பிணைக்கப்பட்டிருந்தவர்கள்.
அந்த புரட்சிகர மலையக தேசியவாதத்தின் முகமாக சந்திரசேகனே திகழ்ந்தார்.
தலவாக்கெலை சம்பவத்தின் பின்னர் சந்திரசேகரன் பொருளாதாரரீதியில் நெருக்கடிக்கு முகங்கொடுத்தார். அவருக்கு சொந்தமான இருகடைகளும் தீக்கிரையாக்கப் பட்டிருந்தன. அவற்றிலொன்றை அவரது மூத்த அக்காவும் மைத்துனர் பாலகிருஷ்ணனனும் பொறுப்பேற்று சிறு அளவில் முதலீடு செய்து வியாபாரம் நடத்திவந்தனர். சிறிது காலத்தின் பின்னர் சிறு அளவில் சந்திரசேகரன் தனது வியாபாரத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். ஆயினும் முன்னரைப் போல சொந்த செலவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை. அவர் வாடகைக்கு வாங்கியிருந்த மண்டபம் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது. சொந்தவாகனம் கிடையாது. கடன் தொல்லைகளும் இருந்தன.
வழமைப் போல பி. செல்வராஜ் சந்திரசேகரனுக்கு உறுதுணையாக இருந்தார். மகாலிங்கம் கைதாகி மகசீன் சிறைச்சாலையிலிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு தந்தையைப் போல திரு. ஆறுமுகம் பெரிதும் ஆறுதலாயிருந்தார். இவரது சவர அலங்காரக்கடை பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸுக்கு முன்னால் இருந்தது. அவரது வீடு சந்திரசேகரினின் வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்தது. அதன்பின்னர் சந்திரசேகரனுக்கு தினமும் குளிப்பதற்கு இவரே சுடுநீர் வைத்து கொடுத்து வந்தார். சந்திரசேகரனை தனது காரில் ஏற்றிக்கொண்டு கூட்டங்களுக்கும் கொழும்புக்கும் போய் வந்தார்.
மலையக மக்கள் முன்னணி உருவான பின்னரும் சந்திரசேகரன் பிரதியமைச்சராகும் வரை ஆறுமுகம் அவர்களே அவரை தனது சொந்த மகனைப்போல கவனித்து வந்தார். மலையக மக்கள் முன்னணி உருவாகி கருப்பு சிவப்பு வர்ணக்கொடியை தனது அடையாளமாக உயர்த்திப் பிடித்தபோது திரு. ஆறுமுகம் தனது காருக்கும் அதே வர்ண பெயின்ட் அடித்தார். அதில்தான் ஆபத்து சூழ்ந்த அந்தகாலத்தில் சந்திரசேகரன் பிரதியமைச்சராகும் வரை கம்பீரமாக பவனிவந்தார்.
இவர்களைப்போன்ற இன்னும்பலர் சந்திரசேகரனுக்கு அப்போது உறுதுணையாக இருந்திருக்கலாம். எனக்கது தெரியாமலிருந்திருக்கலாம். அதற்குக் காரணம் நான் அக்காலப்பகுதியில் சிறையிலிருந்ததுதான். ஆனால் ஒன்று மாத்திரம் எனக்கு நிச்சயமாகத் தெரியும். அப்போது அவரது குடும்பத்தினரும் அவரது சில நண்பர்களும் அப்பகுதி மக்களும் அவருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தனர்.
மலையக மக்கள் முன்னணியின் தோற்றம் 1989 பெப்ரவரி 20- முதலாவது மலையக அரசியல் கட்சியின் உதயம்..
1989…..
மலையக மக்கள் முன்னணி உருவாக்கப்பட்ட காலம் தென்னிலங்கை வரலாற்றில் மிகவும் பயங்கரமான காலகட்டமாகும். 1987 ஜூலை 29ந் திகதி கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தம் நாட்டை இந்தியாவுக்கு சரணடைய வைத்த துரோக ஒப்பந்தம் எனபிரகடனப் படுத்திக்கொண்டு ஜேவிபி தனது இரண்டவது இரத்தம் தோய்ந்த ஆயுத கிளர்ச்சியைத் தொடங்கியது.
ஜேஆர் தான் கொண்டுவந்த அரசியலமைப்பின் சுழலில் தானே சிக்கிக் கொண்டிருந்தார். இரு தடவைகள் மாத்திரமே ஒருவர் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என அவர் நிறைவேற்றிய யாப்பு கூறியது. இதன் படி இனி ஜேஆர் அடுத்த 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஐதே கட்சி யாரை நிறுத்துவது என்பதில் பலத்த இழுபறி அக்கட்சிக்குள் நிலவியது. ஆர். பிரேமதாசவும் காமினி திசாநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் அதற்கு போட்டிபோட்டனர். ஜேஆர் பிரேமதாச தெரிவாவதை விரும்பவில்லை. அதற்கு ஜேஆரின் சாதிவாதம் ஒரு காரணம். இது பிரேமதாசவுக்குத் தெரியும். எனவே கட்சியில் ஜேஆருக்கிருந்த செல்வாக்கை குறைத்து தனது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து பகிரங்கமாகவே கிளர்ச்சி செய்தார்.
ஜேவிபியினதும் பிரேமதாசவினதும் இந்தியவிரோத கோஷங்கள் ஒரேவிதமாக இருந்தபடியால் இருவரும் இணைந்து செயற்படுவது போலத் தோன்றியது. ஜேவிபியின் போர்வையில் யூஎன்பியின் ஆயுதம் தரித்த கொலைக்கார கும்பல் இரகசியமாக யூஎன்பிக்கு எதிராகச் செயற்படுவோரை போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தது.
யார் யாரால் கொல்லப்படுகிறார்கள் என்றே தெரியாத நிலை. முற்போக்குவாதியும் பிரபல நடிகரும் இளம் அரசியலவாதியுமான விஜயகுமாரதுங்க இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர். நாட்டில் ஜேவிபியின் பிரகடனப்படுத்தாத அரசாங்கம் கோலோச்சத் தொடங்கியது.
1988 டிசெம்பர் 19ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ எப்படியோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிமா பண்டாரநாயக்கவை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தல் மூடிவை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறிமா பண்டாரநாயக்க நீதி மன்றம் சென்றார். 1988 பெப்ரவரி 2ம் திகதி பதவியேற்ற பிரேமதாச ஆயுத கிளர்ச்சியை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜேவிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அப்போது தென்னிலங்கை முழுவதும் ஜேவிபியின் மறைமுக கட்டுப்பாட்டிலிருந்தது. ஆகவே தாம் ஆட்சியைக் கைப்பற்றுவது நிச்சயம் என்ற அதீத நம்பிக்கையில் அதற்கிணங்காமல் ஜேவிபி தமது ஆயுத கிளர்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.
பெப்ரவரி 18ந் திகதி தனது முதலாவது மந்திரிசபையை நியமித்த பிரேமதாஸ பிரதிபாதுகாப்பு அமைச்சராக ரஞ்சன் விஜயரத்ணவை நியமித்து ஜேவிபியை நசுக்குவதற்கான முழு அதிகாரத்தையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நான்குமுனைத் தாக்குதலுக்கு மக்கள் முகங்கொடுத்தார்கள். ஒரு பக்கம் ஜேவிபியின் பிரகடனப்படுத்தாத அரசாங்கம் தம்மைத்தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை ‘துரோகிகள்’ என முத்திரைக் குத்தி சர்வசாதாரணமாக படுகொலை செய்து கொண்டிருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் மரணசடங்கில் கூட இரத்த உறவினர் அல்லாத எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்பது ஜேவிபியின் உத்தரவாக இருந்தது. மீறுவோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னொருபக்கம் பிரேமதாச உடுகம்பொல போன்ற பொலிஸ் உயர் அதிகாரிகளின் கீழியங்கிய ‘கொலைக்கார பிரிவு’ ஜேவிபி சந்தேக நபர்களைக் கொன்று இரவு நேரங்களில் நடுதெருவில் டயரில் போட்டு கொளுத்தியது அல்லது அவர்களது சடலங்களை ஆற்றில் மிதக்கவிட்டது.
காலைவேளையில்கூட டயர்களில் பிரேதங்கள் எரிந்து கொண்டிருந்தன. இவ்வாறு டயர்போட்டு எரிக்கப்பட்ட சடலங்களின் எஞ்சிய உறுப்புகளை சாப்பிடுவதற்கு நாய்களும் காகங்களும் சண்டையிட்ட காட்சியை பரவலாகக் காணக்கூடியதாய் இருந்தது.
மற்றொரு பக்கத்தில் ஜேவிபி என சந்தேகிக்கப்பட்டவர்களை ‘பிரா’ (PRRA) என்ற அமைப்பு அரசின் துணையுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தது. அதைவிட ‘பச்சைப்புலிகள்’ ‘ Green Tigers‘ என்றழைக்கப் பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ‘ஆயுதம் தரித்த கொலைக்கார கும்பல்’ ஜேவிபி என சந்தேகிக்கப்பட்டவர்களை மாத்திரமல்ல எதிரணியினரையும் அழித்தொழித்துக் கொண்டிந்தது.
பஸ் ரயில் போக்குவரத்து கிட்டத்தட்ட முற்றாகவே ஸ்தம்பித்துப் போயிருந்தது. தொலைப்பேசி கேபள்கள் வெட்டப்பட்டு தொலைதொடர்புகள் முடமாக்கப்பட்டிருந்தன. இரவில் பாதையோரங்களில் மின் விளக்கு எரிவதில்லை. காலை 8.00 மணிக்கு முன்னரும் மாலை நாலுமணிக்கு பின்னரும் வாகனங்கள் பாதைகளில் ஓடக்கூடாது என ஜேவிபி கட்டளையிட்டிருந்தது. எனவே இரவில் மக்கள் வெளியே செல்வதை முற்றாக நிறுத்திக் கொண்டனர்.
ஜேவிபி ‘கடைகளை மூடு’ என கட்டளையிடும் மீறுவோரை தண்டிக்கும். அரசாங்கம் கடைகளைத் திற என உத்தரவிடும். மீறுவோரை பொலிசார் மிரட்டுவர் தாக்குவர். ஒருபக்கம் கடல் மறுபக்கம் பிசாசு இரண்டுக்கும் நடுவே நான் என்று சொல்வார்களே அப்படியான ஒரு நிலைமை. பச்சை பஜரோவைக் கண்டால் பயம். சிவப்பு கொடியைக்கண்டால் பயம். முன் பின் தெரியாத எவராவது அருகில் வந்தால் பயம். வாய் திறந்து இதைப்பற்றி பேசுவதற்கு பயம். இப்படி பயப்பிராந்திக்கு (fear psychosis) மத்தியில் தென்னிலங்கை மக்கள் தினமும் செத்துப்பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படியான சூழலில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு 1988 டிசெம்பர் 09 ந் திகதி விடுதலையானேன். இருபது வருட கடூழிய தண்டனைப் பெற்ற ஒரு அரசியல் கைதி சிறையில் அவல வாழ்க்கை கழித்துக் கொண்டிக்கும் போது திடீரென நான்கு வருடங்களில் விடுதலையானால் அவனது மகிழ்ச்சி எப்படியிருக்கும் என்பதை நான் விளக்கத் தேவையில்லை.
ஆனால் எனது திடீர் விடுதலை எனக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக அச்சத்ததைத்தான் தந்தது. பிற்பகல் இரண்டுமணியளவில் எனக்கு இவ்வறிவிப்பு கிடைத்தது. நிர்வாக நடைமுறைகள் பூர்த்தியடையும் போது 3.30 மணியாகிவிட்டது. இன்னும் சில நிமிடங்களில் ஊரடங்கு தொடங்கிவிடும். இவ்வாறு முன்னர் விடுதலைசெய்யப்பட்ட கருணாகரன் என்ற சக அரசியல் கைதி வெளியே அரசின் ஆயுத குழுவால் கடத்தப்பட்டு காணாமற் போயிருந்தார். என்ன செய்வது எங்கே போவது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அச்சமயத்தில் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த அனா சுப்ரமணியம் என்ற பெண்மணி சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவர் வரும்வரை வெளியே வரவேண்டாம் வந்து தனது காரில் என்னை அழைத்துப் போவதாக அறிவித்தார்.
என் கண்களில் நீர்தேங்கியது. தமிழ் அரசியல் கைதிகள் மற்றவர்களால் மறக்கப்பட்டுப் போயிருந்த சமயத்தில் அடிக்கடிவந்து சந்தித்து பற்பல உதவிகளைச் செய்தவர் அவர். அந்த அன்பான சகோதரி இன்று உயிருடன் இல்லை. அவர் வந்து என்னை வெளியே அழைத்துச் செல்லும்போது வெளியே ஒரு ஆச்சர்யம் எனக்காகக் காத்திருந்தது. புளோட் அமைபைச்சேர்ந்த மாறன் (அவரும் என்னோடு சிறையிலிருந்து விடுதலையானவர்தான்) ஈபிஆர்எல்எப்பைச் சேர்ந்த மற்றொரு தோழர் ஆகியோர் தத்தமது கார்களில் எனக்காகக் காத்திருந்தனர். இவர்களை விட மற்றொருகாரில் கரிய கம்பீரமான ஒரு உருவம் ‘உங்களை அழைத்துக் கொண்டுபோவதற்காகத்தான் வந்திருக்கிறேன்’ என்றது.
அவரை நான் முன்னர் கண்டதில்லை. அவரோடு எம்மோடு சிறையிலிருந்து விடுதலையான நண்பர் குருக்கள் சிரித்த முகத்தோடு நின்றார். அவர் டெலோ அமைப்பின் தலைவர் அடைக்கலநாதன் செல்வம் என அறிந்தபோது எனது ஆச்சர்யம் மேலும் அதிகரித்தது. யாருடன் செல்வது என திண்டாடினேன். அனா சுப்பிரமணியம் ‘அவரே நேரில் வந்திருக்கிறார். அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் அவரோடு செல்லுங்கள்’ என்றார். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். நான் செல்வம் அவர்களோடு அவரது காரில் ஏறிச்சென்றேன். அவர் நான் கண்டியிலிருந்த எனது மனைவியின் வீட்டுக்கு அன்றிரவே ஒரு காரை எனக்காக ஏற்பாடு செய்து ஒரு ஜீப்பில் ஆயுதம் ஏந்திய போராளிகளையும் அதற்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தார். என்னோடு குருக்கல் வீடுவரை வந்தார். இப்போது இவர் லண்டனில் வசிக்கிறார். வீட்டாருக்கு நான் விடுதலையான விடயம் தெரியாது. குருக்கல் வீட்டு கதவைத்தட்டி ‘எங்கே காதர்?’ எனறு அதட்டும் தொனியில் கேட்டார். கதவைத் திறந்த எனது மனைவி ‘அவர் மகசீன் சிறைச்சாலையில் ..’ என நடுங்கிக்கொண்டே பதில் சொன்னார். ‘பொய் சொல்ல வேண்டாம். அவர் அங்கு இப்போது சிறையில் இல்லை’ என அவர் மிரட்டிய போது என் மனைவி வெலவெலத்துப் போனார். என்னைக் கண்டதும் அவர்களால் அதை நம்ப முடியவில்லை.
நான் எனது குடும்பத்தோடு அன்றிரவு மாத்திரந்தான் மகிழ்ச்சியோடு கழித்தேன். மறுநாள் குருக்கலோடு ஏனைய சக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக என்னாலான சில முயற்சிகளை மேற்கொள்வதற்காக கொழும்பு சென்றேன். இந்திய தூதரகம் சென்று கலாநிதி ஜே.என் திக்சித் டாக்டர் ஜெய் சங்கர் ஆகியோரை சந்தித்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இன்னும் விடுதலை செய்யப்படாத அரசியல் கைதிகளின் பெயர்பட்டியலை கையளித்து அவர்களை விடுதலை செய்யமாறு வலியுறுத்தினேன்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நான் இந்திய தூதுவராலயத்துடன் நடத்திய மற்றொரு பேச்சுவார்த்தையின் போது நுவரெலிய சட்டத்தரணி தாயுமானவன் அவர்களும் கலந்து கொண்டார். சுமார் ஒருவாரம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கொழும்பில் இருக்க நேர்ந்தது. வீடு திரும்பியதும் வீட்டாரின் முகத்தில் மகிழ்ச்சியை விட அச்சமே காணப்பட்டது. நான் இல்லாத சமயம். பலர் வந்து சந்தேகத்திற்கிடமான முறையில் என்னை விசாரித்துவிட்டு சென்றதாகவும் தாங்கள் நான் எங்கு சென்றேன் என்ற விபரத்தை எவருக்கும் கொடுக்கவில்லை என்றும் கூறி ‘நீங்கள் சிறையிலிருந்த போது நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்ற திருப்தி எங்களுக்கிருந்தது. ஆனால் இப்போது நீங்கள் ஏன் இந்த நேரத்தில் விடுதiலையானீர்கள் என்று கவலையாக இருக்கிறது. உங்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என பயமாக இருக்கிறது.’ என் மனைவி பதறினார்.
அப்போது உடுகம்பொல நான் வாழும் மத்தியமாகாணத்திற்கு பிரதி பொலிஸ் மா அதிபராக வந்திருந்தார். அவரது அழிக்கப்பட வேண்டியவர் பட்டியலில் எனது பெயர் முன்வரிசையில் இருப்பதாக நம்பகரமாக எனது குடும்பத்தினர் அறிந்திருந்தனர். அத்துடன் சிவிலுடையில் டிரெக் வண்டிஒன்றில் வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிசார் ஓரிடத்தில் காத்திருக்கும் போது அவர்களில் சிலர் அதிலிருந்து இறங்கி அங்கிருந்த கடைக்காரர்களிடம் என்னைப்பற்றி விசாரித்ததையும் அதில் ஒருவன் எமது வீட்டுக்குப்போய் என்னை விசாரித்து விட்டு நானில்லாததால் திரும்பி வந்து அதே வண்டியில் ஏறிச்சென்றதையும் எனது மனைவியின் கிராமத்தவர்கள் கண்டிருக்கிறார்கள்.
நான் 1985ல் எனது மனைவியின் வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டேன். வீட்டில் அன்று மனைவியின் தங்கையின் மகனுக்கு பெயர் வைக்கும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிநருந்தது. எம்மால் (இதில் சந்திரசேகரனுக்கு சம்பந்தமில்லை) வன்னிக்காட்டில் பயிற்சியளிக்கப்பட்ட மூன்று மலையக இளைஞர்கள் வவுனியாவில் கைதாகி அதில் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தில் எனது பெயர் வெளியாகி பொலிசார் என்னைத் தேடிக்கொண்டிருந்த சமயம் அது. பிச்சைக்காரர்கள் பலர் வந்து மதிய ஆகாரம் பெற்றுச் சென்றனர். அப்பிச்சைக்காரர்களில் ஒருவன் தான் மட்டக்களப்பிலிருந்து அகதியாக வந்திருப்பதாகவும் என்னை அவனுக்குத் தெரியும் என்றும் கூறி என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியபோது சூதறியாத என் மாமி நான் இருந்த அறையைக்காட்டியிருக்கிறார். அவன் தனது தாயாருடன் வந்து சந்திப்பதாகக் கூறி சென்றவன் ஆயுதந்தரித்த பொலிசாருடன் வந்து என்னைக்கைது செய்து கண்டி பொலிசுக்கு கொண்டு சென்றான். பட்டப்பகலில் நடந்த இந்த கைதை ஊரே திகைத்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தது.
அன்று பிச்சைக்காரனாக நடித்தவன் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் றிபாய்தீன் என்பது பின்னர்தான் அவர்களுக்குத் தெரியும். ஆகவே இத்தடவை நான் விடுதலையான பின்னர் எனது வீட்டார் மிகவும் விழிப்புடனிருந்தனர். ஊராரும் உறவினர்களும் என்மீது கரிசனை கொண்டிருந்தனர். எனவே தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து வந்தன. நான் கொழும்பு சென்றிருப்பதாக கேட்போரிடம் வீட்டார் கூற நான் வெளியில் எவருக்கும் தெரியாமல் உறவினர்களின் வீட்டில் ஒளிந்திருந்தேன்.
என்னைத் தேடி வரும் மர்ம மனிதர்களின் பெயரை வீட்டார் கேட்டு குறித்து வைத்து என்னிடம் கூறுவார்கள். சில பெயர்கள் கேள்விபடாதவையாக இருக்கும். சில பரிச்சயமான பெயராக இருக்கும் ஆனால் அந்த நபருக்கும் அந்த பெயருக்கும் பொருத்தமில்லாமலிருக்கும். ஆனால் ஒரு பெயர் மாத்திரம் விதிவிலக்காக இருந்தது. அவரது பெயர் திலகேஸ்வரன் – நானும் சந்திரசேகரனும் அவரை ‘திலகேஸ்’ என அன்புடன் கூப்பிடுவோம். தலவாக்கெலையிலிருந்து சந்திரசேகரன் தன்னை அனுப்பியதாக சொன்னபோது அவருக்கு என் மனைவி சற்று மரியாதை கொடுத்தார். அவர் இப்படி பல தடவைகள் என்னைப் பார்க்க வந்து ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார். நான் வீட்டில் இருக்கவில்லை. திலகேஸ்வரன் மலையக வெகுஜன இயக்கத்தில் ஆர்வத்தோடு பங்கு கொண்ட ஒருவர். இவரும் இவரது மனைவி கல்யாணியும் மலையக மக்கள் முன்னணி உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பங்கு கொண்டவர்கள். கல்யாணி மலையக மக்கள் முன்னணியின் பெண்கள் அமைப்பிலே தலைமை உறுப்பினர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஆரம்பகாலத்தில் அனேகமாக ம.ம.முவின் பிரதான கூட்டங்கள் அனைத்திலும் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கிறார். திலகேஸின் பங்களிப்புகள் பற்றி பின்னரும் குறிப்பிட நேரும். தற்போதைக்கு ஒருவிடயத்தை மாத்திரம் கூற விரும்புகிறேன்.
எமது ஆண்ஆதிக்க சமுதாயத்தில் திலகேஸைப்போல ஒரு பெண் உரிமையை மதித்த ஆண்களைக் காண்பதரிது. அவர் என்றுமே மமமு யில் முக்கிய பதவிகளுக்கு வரவோ மேடைகளில் ஏற விரும்பியதில்லை. அவரது மனைவி கல்யாணி மேடையேறுவதையும் மமமு யில் முக்கிய பங்கு வகிப்பதிலும் பெருமை கொண்டார் மகிழ்ச்சி கண்;டடார். கண்டி பகுதியிலிருந்த மடவளை கிராமத்தில் எனது மனைவியின் வீடு இருந்தது. மலையக மக்கள் முன்னணி உருவான பின்னர் பலர் இங்கு அடிக்கடி வந்து போயினர். ஆனால் நான் விடுதலையான 1988 வரை இங்கு சந்திரசேகரனும் நாகலிங்கமும் சரத்தும் மாத்திரமே இரண்டொரு தடவைகள் வந்து போயிருக்கின்றனர். எனது வீட்டு விலாசம் அவர்களுக்குத்தான் தெரியும். என்னைத் தெரிந்த அநேகமானோருக்கு நுவரெலிய மாவட்டத்திலுள்ள நான் பிறந்த இராகலையிலிருந்த எனது தாய்வீடே தெரியும். ஆனால் திலகேஸிடமிருந்து என்னால் தப்ப முடியுமா?
1989 ஜனவரி 06: திலகேஸ் மீண்டும் வந்தார். தற்செயலாக நான் மனைவி வீட்டிலிருந்தேன். வந்திருப்பவர் திலகேஸ்தான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு அவரை சந்தித்தபோது எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் அவர் என்னைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டார். சந்திரசேகரன் என்னை எப்படியும் எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு சொல்லி தன்னை அனுப்பியதாகச் சொன்னார். நீண்டகாலத்தின் பின்னர் தலவாக்கெலை செல்வதையும் சந்திரசேகரனையும் ஏனைய அரசியல் நண்பர்களையும் சந்திக்கப் போகிறோம் என்பதையும் நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது. அடுத்து அவர் சொன்ன விடயம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ‘சந்திரசேகரன் உமாமகேஸ்வரனின் புளோட்டோடு சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடப்போகிறார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்களில் நிறையபேர் குழம்பிப் போயிருக்கிறார்கள். உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உடனே வாருங்கள்’ என்றார். எனக்கு உடனே தலவாக்கெலை பறக்கவேண்டும் போலிருந்தது. திலகேஸ் சந்திரசேகரன் வாடகைக்கு அமர்த்தி அனுப்பிய ஒரு காரில் வந்திருந்தார். நான் உடனே புறப்பட்டேன். என் மனைவி: ‘மறுபடியும் அரசியலுக்கா?’ என்று அச்சத்தோடு கேட்டார். நான் ‘போய் வருகிறேன்’ என்று மாத்திரம் கூறிவிட்டு திலகேஸ்வரனுடன் தலவாக்கெலை புறப்பட்டேன். நான் சிறையிலிருந்து விடுதலையாகி 26 நாட்களே கழிந்திருந்தன. நான் பிடிபட்டபின்னர் எனது மனைவியும் குடும்பமும் பட்ட துன்பங்களை அவர்கள் எளிதில் மறக்கமுடியாது என்பது எனக்குத் தெரியும். அதேசமயம் என்னால் அவர்களுக்கு புரியவைக்கவும் முடியாது.
மாலை 2.00 மணியளவில் நான் தலவாக்கெiலை சென்றடைந்தேன். பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸ் ஒரு தேர்தல் காரியாலயத்தைப்போல சுறுசுறுப்படைந்திருந்தது. சந்திரசேகரன் அங்கிருக்கவில்லை. என்னைக் கண்டதும வீpடி தர்மலிங்கம் ஓடோடி வந்து என்னைக் கட்டிப்பிடித்தார். சரத் தேவசிகாமணி செல்வராஜ் இன்னும் பலர் அங்கிருந்தனர் மலையக வெகுஜன இயக்கம் மறுபடி உயிர்பெற்றுவிட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. புதுமுகங்கள் பல அங்கிருந்து புன்னகைத்தன. நான் பஞ்சலிங்கம் ஸ்டோர்சின் மேல்மாடிக்கு சென்றேன் அது ‘புளொட்’ அமைப்பின் குட்டி முகாமைப் போலிருந்தது. டம்மிங் கந்தசாமி என்று வர்ணிக்கப்பட்ட கந்தசாமி உட்பட சிறி இன்னும் பலர் அங்கிருந்தனர். வீ டி தர்மலிங்கமும் அங்கிருந்த மற்றவர்களும் என்னைத் தனியான அறைக்கு அழைத்துச் சென்று விடயத்தை விளக்கினர்.
அதன் பின்னரே எனக்கு நிலைமை புரிந்தது. சந்திரசேகரன் தேர்தலில் போட்டியிடுகிறார். புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (DPLF) சார்பில் போட்டியிடுகிறார் அதன்வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய சட்டத்தரணி வினாயக மூர்த்தியுடன் வாகன ஊர்வல சகிதம் போயிருக்கிறார் என்பதை; (1989 ஜனவரி 06) அறிந்து கொண்டேன்.
1989 பெப்ரவரி 15 தேர்தலை நோக்கி…..
இக்காலப்பகுதியில் சந்திரசேகரன் தலவாக்கெலை பிரதேசத்தில் மிகவும் பிரபல்யமானவராவும் தலவாக்கெலை நகரத்தில் ஒரு பிரமுகராகவுமாகியிருந்தார். அவரை லிந்துல்ல தலவாக்கெலை மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் இதொகா தனது வேட்பாளராக நியமித்தது. அத்தேர்தல் வெற்றிதான் சந்திரசேகரனின் பாராளுமன்ற பயணத்திற்கு உந்துகோலானது. இவரது உள்ளுராட்சி தேர்தல்களின் வட்டாரத்தன்மை காரணமாக அது பெரும்பாலும் தலவாக்கெலை லிந்துலை நகர எல்லைக்குள் வாழ்ந்த தமிழ் வாக்காளர்களை மாத்திரமே இலக்காகக் கொண்ட தேர்தல் நடவடிக்கையாகவே இருந்தது. பரந்துபட்ட மக்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் பங்கு கொள்ளக் கூடிய விரிவான அரசியல் அடிதளத்தை அது கொண்டிருக்கவில்லை. எனவே அது மற்றொரு இதொகாவின் அரசியல் விவகாரமாகவே தோன்றியது. ஆயினும் அத்தேர்தல் இலங்கை அரசியல்முறை எவ்வாறு மலையக தமிழ் மக்களுக்கு பாதகமாக செயற்கையான முறையில் திட்டமிட்டவகையில் செயற்படுகிறது என்பதை சந்திரசேகரனுக்கும் அவரோடு அரசியலில் இணைந்திருந்த ஏனையோருக்கும் புரிய வைத்தது.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரேயொரு மாவட்டம் நுவரஎலிய மாவட்டமாகும். இயற்கையாக இம்மாவட்டம் பிரிக்கப்பட்டிருந்தால் அதில் வாழும் தமிழ்மக்களின் தொகை 90 வீதத்திற்கும் அதிமாக இருந்திருக்கும். ஆனால் இம்மக்களின் எண்ணிக்கைப் பலத்தை கட்டுப்படுத்துவதற்காக கண்டிக்கு அருகிலுள்ள – கண்டியோடு வரலாற்றுரீதியாக பிணைந்துள்ள – ஹங்குரன்கெத்த கொத்மலை வலப்பன ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகள் இணைக்கப்பட்டு பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்ல நவரெலிய மாவட்டத்திலும் சரி மலையக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மலையகத்தின் எந்த பகுதியிலும் சரி ஒரு மாநகர சபையினதோ ஒரு நகரசபையினதோ பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி தமிழ் கட்சி எதுவும் அதிகாரத்திற்கு வர வாய்ப்பில்லாதபடி செய்யப்பட்டுள்ளன. தலவாக்கெலை லிந்துல்ல நகராட்சி மன்றத்திற்கு வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற வாக்காளர்கள் அப்போது சுமார் இரண்டாயிரம் பேர் மாத்திரமே (2001 நகரசபை தேர்தலின் போது இத்தொகை 3467 மாத்திரமே);. சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் தலவாக்கெலை லிந்துல்ல ஆகிய இரு நகரங்களையும் அதனைச்சுற்றியுள்ள சிங்கள குடியேற்றங்களையும் இணைத்து சிங்கள வாக்காளர் அறுதி பெரும்பான்மை கொண்டதாக அமைக்கப்பட்டது. உதாரணமாக தமிழ் வாக்களார் தொகை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இதன் எல்லையிலிருந்த லோகி தோட்டத்தின் ஒரு சிறுபகுதி மாத்திரம் நகரசபை எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது –பெரும்பகுதி; இணைக்கப் படவில்லை. இந்நகரசபையின் எல்லை இன்னும் கால் மைல்களால் விஸ்தரிக்கப்பட்டிருந்தால் அது தமிழ் நகரசபையாக மாறியிருக்கும். ஆனால் ஏழுபேர் கொண்ட அந்த தலவாக்கெலை லிந்துல்ல நகராட்சி மன்றத்திற்கு – தமிழ் மக்கள்செறிவாக வாழும் அக்குவிமையத்திலிருந்து – ஒரே ஒரு தமிழர் மாத்திரமே தெரிவாக முடிந்தது.
பிற்காலத்தில் தேர்தல் தொகுதிவரைவில் மலையக மக்களுக்கு காட்டப்படும் பாரபட்சத்தை பற்றி சந்திரசேகரன் பேசிய பேச்சுக்களே என்னை இது தொடர்பாக சிந்திக்க வைத்தது. இது தொடர்பாக பிற்காலத்தில் ஆழமாக ஆய்வு செய்து ஆதாரபூர்வமாக துல்லிய விபரங்களைச் சேகரித்து புள்ளிவிபர அடிப்படையில் ஆய்வு கட்டுரையொன்றை சமர்ப்பித்து இலங்கை மன்றத்திலும் சத்யோதயவிலும் இன்னும் பல கருத்தரங்குகளிலும் நான் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரை பேராதெனிய பல்கலைக் கழக விரிவுரையாளர் விஜய சந்திரனின் அவர்களின் தூண்டுதலால் வண.பிதா போல் கெஸ்பஸ் அவர்களினால் சத்தியோதய மூலம் ‘உள்ளுராட்சிக்கான புதிய தேர்தல் முறை’ (“A New Electoral System for Local Government”) என்ற பெயரிலே ஆங்கிலத்தில் புத்தகமாக 2001ல் வெளியிடப்பட்டது.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் என்பது பாராளுமன்ற அரசியல் ஏணியின் முதலாவது படி. அதில் கால்வைத்தால் மக்கள் ஆதரவும் திறமையும் ஆர்வமும் உள்ளவர்கள் மேலே மேலே சென்று அமைச்சராக வர முயல்வதும் அமைச்சராக வந்ததும் அப்பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதும் பாராளுமன்ற அரசியலின் விதி போலும். சந்திரசேகரன் திட்டமிட்டு பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்தார் என்று கூறமுடியாது.
புற நிலைமைகளே அவரை பாராளுமன்ற அரசியலுக்குத் தள்ளின என்பதே உண்மையாக இருந்தாலும் அவரது ஜனரஞ்சக அரசியலின் இறுதி போக்கிடம் பாராளுமன்றத்திற்கு அப்பால் வேறெதுவும் இருந்திருக்க முடியாது.
சந்திரசேகரனை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட வைத்ததில் இதொகா வின் துணைத்தலைவர்களில் ஒருவரும் அதன் ஹட்டன் அமைப்பளருமான திரு. ராஜூ அவர்களுக்கும் நடேசன் தலைவருக்கும் பெரும் பங்குண்டு. அதன் பின்னர் அவரை உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களும் அப்பகுதி இதொகா அங்கத்தவர்களும் அவரை 1988 ஏப்ரல் 28 ந் திகதி நடைப்பெற்ற முதலாவது மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தத் தொடங்கினர். 1977 ன் பின்னர் இதொகாவுக்குள் தொழிற்சங்கம் தனியாகவும் ஏதாவதொரு பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் – இதொக அரசியல் பிரிவில்- தனியாகவும் செயற்படத் தொடங்கியிருந்தனர். இதொகாவின் தொழிற் சங்க உத்தியோகத்தர்கள் பலரின் ஆதரவு சந்திரசேகரனுக்கிருந்தது. இதொகா அரசியல் பிரிவின் கீழ் மட்டத்திலுமிருந்த சில இளைஞர்களும் இவரை ஆதரித்தனர். ஆனால் பழைய இதொகா அரசியல்வாதிகளும் அடுத்த மாகாணசபை பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட நினைத்த வேட்பாளர்களும் இவரை மேலே வரவிடாமல் தடுப்பதில் கண்ணுங்கருத்துமாயிருந்தனர்.
இது பாராளுமன்ற அரசியலின் அவலட்சணமான மற்றொரு பக்கமாகும். சந்திரசேகரன் புரட்சியாளனாக தியாகியாக இருந்த போது அவரது முதுகைத் தட்டிக் கொடுத்தவர்கள் அவரது திறமையையும் துணிச்சலையும் பாராட்டியவர்கள் இப்போது அவரை முதுகின்பின்னால் குத்த தனித்தனியாக சதி செய்தனர். சந்திரசேகரன் போட்டியிட்டால் தம்மை விஞ்சிவிடுவார் என்ற பயத்தையும் அப்பட்டமான சுயநலத்தையும் தவிர இதற்கு வேறெந்த காரணமும் இருக்கமுடியாது.
மாகாணசபை தேர்தலின் போது சந்திரசேகரனை இதொகா வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனக்கோரி தலவாக்கெலையிலிருந்து பல தூதுக்குழுக்கள் தொண்டமானிடம் சென்றன. அவர் அதனை பரிசீலிப்பதாக அவர்களிடம் கூறியிருந்தார். அவருக்கு உள்ளுர விருப்பம் இருந்தாலும் சந்திரசேகரனைப்பற்றி அரசும் புலனாய்வுதுறையும் வைத்திருந்த கணிப்பீட்டைக் கருத்திற் கொண்டு தொண்டமான் தயங்கினார்;;. இந்நிலையில் ‘மiலையகத்தில் தீவிர இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக சந்திரசேகரன் வளர்ந்து வருகிறார். அவருக்கு வடக்கு கிழக்கு இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது. எனவே சந்திரசேகரனை வளரவிட்டால் வடக்கில் இளைஞர்களை வளர்த்து விட்ட அமிர்தலிங்கத்தினதும் கூட்டணியினதும் நிலைமைதான் இதொகாவுக்காகும்’ என தொண்டமானின் ஆலோசகர்கள் அவரை எச்சரித்தனர். மாகாணசபை தேர்தலில் இதொகா சந்திரசேகரனை ஒரு வேட்பாளராக நியமிக்கும் என சந்திரசேகரனின் ஆதரவாளர்களும் சந்திரசேகரனும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சந்திரசேகரனை விட அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியுற்றனர். அவர்கள் மாகாணசபை தேர்தலைப் பகிஷ்கரித்து தமது எதிப்பைக் காட்ட முயன்றனர். இதையறிந்த இதொக தலைமை காரியாலத்திலிருந்து சிலர் தலவாக்கெலை வந்து சந்திரசேகரனையும் அவரது ஆதரவாளர்களில் முக்கியமானவர்களையும் சந்தித்து ‘இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. சந்திரசேகரன் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதை விட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது நல்லதென தலைவர் கருதுகிறார்’ எனக்கூறி அவர்களின் மனதை மாற்றினர். அதன் பின்னர் அப்போது நடைப்பெற்ற மாகாணசபை தேர்தலில் இதொகா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து சந்திரசேகரன் பிரச்சாரம் செய்தார்.
மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இதொகா சந்திரசேகரனை மிகவும் கவனமாகவே கையாண்டது. அவரது செல்வாக்கு வட்டாரமான தலவாக்கெலை கொட்டகல ஹட்டன் பகுதிகளுக்கு வெளியே அவரை அறிமுகப்படுத்தி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவில்லை. அத்துடன் தலவாக்கெலை இதொகா காரியாலத்திலிருந்த அவருக்கு ஆதரவான உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு விரோதமாக வெளிப்படையாகவே செயற்படக்கூடியவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சந்திரசேகரனின் ஆதரவாளர்களைப் புறக்கணித்தனர்.
இந்நிலையில் 1988 டிசெம்பர் 19 ந் திகதி ஜனாதிபதி தேர்தலில் ஆர் பிரேமதாச வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதுவரை ஜனாதிபதியாக இருந்த ஜேஆர் அடுத்த நாளே (20ந் திகதி) ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் பிரேமதாசவை கலந்தாலோசிக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்தார். தன்னைப் போலவே பிரேமதாசவும் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி பாராளுமன்ற தேர்தலை ரத்து செய்துவிடுவாரோ எனப் பயந்தே பாராளுமன்றத்தை அவசரமாகக் கலைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் அப்போது அபிப்பிராயம் தெரிவித்தனர். எப்படியோ 1977 தேர்தலுக்குப்பின்னர் 1989 பெப்ரவரி 15ந் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
1989 பெப்ரவரி பாராளுமன்ற தேர்தலும் சந்திரசேகரனும்.
1988 டிசெம்பர் 20ந் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து சந்திரசேகரனின் பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸ் அல்;லோலகல்லொலப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் படையெடுத்தனர். இச்சமயத்தில் அவரது இருதளபதிகளும் அருகில் இல்லை. திரு நாகலிங்கம் 1983 ல் தமிழ்நாடு சென்று விட்டார். நடேசன் தலைவர் கடுஞ்சுகவீனமாக படுத்த படுக்கையிலிருந்தார். ஆயினும் தலவாக்கெலையிலிருந்து தூதுக்குழுக்கள் கொழும்பு சென்று தொண்டமானைச் சந்தித்தன. சந்திரசேகரனின் பெயர் பரிசீலனையிலிருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் உமாமகேஸ்வரன் நுவரெலியா நகரில் வந்து தங்கினார். மலையகத்தில் ஏற்கெனவே ஈரோஸ் ஈபிஆர்எல்எப் புளொட் ஆகிய அமைப்புகளிடமும் இன்னும் டெலி போன்ற சிறு அமைப்புகளிடமும் ஆயுத பயிற்சி பெற்று திரும்பிய மலையக இளைஞர்கள் சுமார் நூறு பேர் சிறையிலிருந்தனர் அல்லது சிறையிலிருந்து மீண்டிருந்தனர். வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு ஈபிஆர்எல்எப் தலைமையிலான கட்சிகள் அதன் நிர்வாகத்தை பொறுப்பேற்ற பின்னர் அத்தேர்தலைப் பகிஷ்கரித்த அமைப்புகளில் ஒன்றான புளொட் வன்னியிலும் மலையகத்திலும் தனக்கொரு அரசியல் தளத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றது.
சந்திரசேகரன் உமாமகேஸ்வரனை சந்தித்தாரா அல்லது உமா மகேஸ்வரன் சந்திரசேகரனைச் சந்தித்தாரா என்பது எனக்கோ வீ.டி தர்மலிங்கத்திற்கோ தெரியாது. அவ்விருவருவரும் பேசி ஏதாவது இணக்கத்திற்கு வந்திருந்தார்களா என்பதும் எமக்குத் தெரியாது.
ஆனால் 1989 ஜனவரி 01ந் திகதி வரை இதொகாவின் முடிவை எதிர்பார்ப்பது அதற்குள் இதொகா சந்திரசேகரனின் பெயரை அதன் வேட்புமனுவில் இடம்பெறா விட்டால் சுயேட்சையாகப் போட்டியிடுவது என முடிவெடுத்திருந்தனர். அதாவது சந்திரசேகரன் மலையகத்தின் தனித்துவம் என்ற கொள்கையில் அப்போதும் உறுதியாக இருந்தார் என அறிந்தேன். ஆனால் இதொகா சந்திரசேகரனை இத்தடவையும் ஓரம் கட்டிவிட்டது என்பதை உணர்ந்ததும் சந்திரசேகரன் தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக திரு.வினாயகமூர்த்தி அவர்களிடம் சட்ட ஆலோசனைப் பெறப்பட்டது. நாம் சிiறியலிருந்தபோது எம்மை ஏனைய சட்டத்தரணிகள் சந்திக்கவே பயந்த ஒருகால கட்டத்தில் மறைந்த ஜுனியர் ஜீஜீ பொன்னம்பலத்தின் உதவி சட்டத்தரணியான திருமதி ஜோய் ஜெயரத்னம் என்பவர்தான் எம் அனைவரக்கும் உடன்பிறவா சகோதரியாயிருந்தார். அதன் பின்னர் அப்பாப்பிள்ளை வினாயகமூர்த்தி அவர்கள்தான் அநேகமாக அனைவரக்கும் அப்பாவானார். அவருக்கு மலையக இளைஞர்கள் மத்தியில் நல்ல மரியாதையிருந்தது.
அவர் ஒரு சட்டப்பிரச்சினையை சுட்டிக்காட்டியிருக்கிறார். சுயேட்சைக் குழுவாக தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிதினத்திற்கு 14 நாட்களுக்கு முன்னமே பதிவு செய்திருக்கவேண்டும் இன்னும் நான்கு நாட்களே மீதியிருக்கும் இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிட முடியாது என்பதே அதுவாகும். இத்தறுணத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரசின்னத்தில் போட்டியிட அனுமதிப்பதாகவும் தேர்தலில் வெற்றிபெற முழுமையான ஒத்துழைப்பு நல்குவதாகவும் உமாமகேஸ்வரன் உறுதியளித்ததாகவும் கூறப்பட்டது
நாம் தனியாக கதைக்கப் போகிறோம் என்றதும் கண்ணியமானமுறையில் புளோட்டைச் சேர்ந்தவர்கள் கீழே சென்றனர். சிறியும் கந்தசாமியும் என்னிடம் ‘நல்ல முடிவாக எடுங்கள்’ என்று கூறிவிட்டு மேல் மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றனர். அன்று நாம் ஒருவகையில் தர்மசங்கடமான நிலையிலிருந்தோம்.
சந்திரசேகரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் எமக்கும் சம்மந்தம் கிடையாது. ஆனால் அதுதொடர்பாக நாம் ஒரு முடிவை இன்றே எடுத்தாக வேண்டும். இது தொடர்பாக அங்கு காரசாமான அதே சமயம் ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. அங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகளும் அதன் பின்னர் மலையக மக்கள் முன்னணி உருவாகி பத்து வருடங்கள் கழித்து நான் அதைவிட்டு வெளியேறும் வரையிலான நிகழ்வுகளும் ஆவணப்பதிவுகளாக இன்னும் என்னிடமுள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டே இனி எனது நினைவுகளை மீட்கப் போகிறேன்.
அன்று அவசரமாக எடுக்கப்பட்ட முடிவாக அது இருந்தாலும் விடி தர்மலிங்கம் தேவசிகாமணி சரத் போன்ற மலையக அரசியலில் அனுபவமும் புரிந்துணர்வுமுள்ள நல்லெண்ணம் படைத்த பலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் அம்முடிவுகள் சரியானவை என்பது நிருபனமானது. அன்றெடுக்கப்பட்ட முடிவுகள்:
சந்திரசேகரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் எமக்கும் சம்மந்தம் கிடையாது. ஆனால் சந்திரசேகரன் இப்போது இதொகாவிலிருந்து வெளியேறி சுதந்திரமாக செயற்படுவதற்கு துணிந்திருக்கிறார். இது ஒரு நல்லவிடயம். இம்முறிவானது சந்திரசேகரனின் இதொகா அரசியலுக்கும் இளைஞர்களின் புதிய அரசியல் சிந்தனைக்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.
சந்திரசேகரன் தனிமனிதன் அல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் மக்கள் செல்வாக்கு தற்செயலாக வந்ததல்ல. அதில் அவரது பின்புலமும் செயற்பாடுகளும் தனிப்பட்ட பண்புகளும் முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தாலும் பல வருடங்களாக அப்பகுதி இளைஞர்கள் கருத்துரீதியில் மாத்திரமின்றி இரத்தம் சிந்தியும் சிறைசென்றும் பல்வேறுவகையில் போராடியும் உருவாக்கிய எழுச்சியே இன்று அவரது அரசியல் அடித்தளமாகும். எனவே சந்திரசேகரனை மையமாகக் கொண்டு இந்த எழுச்சியை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
மலையகத்தில் விழிப்புணாச்சியை ஏற்படுத்துவதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர்களும் ஈரோஸ் ஈபிஆர்எல்எப் புளோட் போன்ற அமைப்புகள் வகித்த பாத்திரத்தை குறைத்து மதிப்பிடமுடியாது. அதே சமயம் அவை மத்தியில் நிலவும் இயக்க முரண்பாடுகளையும் மோதல்களையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
புளொட் அமைப்பின் சார்பில் சந்திரசேகரன் போட்டியிடுவது வடக்கில் நடைபெறும் இயக்கமோதல்களை மலையகத்திற்கு இறக்குமதி செய்வதாக அமைவதோடு ‘மலையகத்தின் தனித்துவத்தின் மீது ஆதாரப்பட்ட ஏனைய தமிழ்பேசும் மக்களுடனான நல்லுறவும் ஐக்கியமும்’ என்று நாம் இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு முரணாகவும் அமையும். (ஏற்கெனவே பிற இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ‘புளோடின் பிரதிநிதியாக சந்திரசேகரன் எமது தோட்டத்திற்கு வந்தால் நாம் அவரை கலடியெடுத்து வைக்க அனுமதிக்கமாட்டோம்’ எனக்கூறியிருக்கிறார்கள். இதனை நாம் ஒரு சவாலாக எடுக்கத் தேவையில்லை. இதுவே யதார்த்தம் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.)
இத்தேர்தலில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியிருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் எழுச்சி தடம்புரண்டு போகலாம் திசைமாறிப் போகலாம் அல்லது அழிக்கப்பட்டு போகலாம். நிச்சயமாக வன்முறை தலைவிரித்தாடும். எனவே இத்தேர்தலில் பங்கு கொண்டு மக்கள் தொடர்பை விரிவுபடுத்தி அடுத்த கட்டத்திற்கான உறுதியான அடிதளத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். எமது அடுத்த கட்டம் என்பது எமக்கென ஒரு தனியான அரசியல் கட்சியை அமைப்பதாகும்.
இத்தேர்தலில் நாம் புளொட்டையோ உமா மகேஸ்வரனையோ மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தாமல் நங்கூர சின்னத்தை மாத்திரம் அறிமுகப்படுத்துவது. ‘சந்திரசேகரனுக்கு – நங்கூரசின்னத்திற்கு வாக்களியுங்கள’ என்பதே எமது கோஷமாக இருக்கவேண்டும்.
சந்திரசேகரன் ஜமவிமு யின் நங்கூர சின்னத்தில் போட்டியிடுவதால் நாம் இத்தறுணத்தில் புதிய கட்சி ஒன்றை அமைத்து அதனை அறிமுகப்படுத்தினால் அது குழப்ப நிலையையே ஏற்படுத்தும். குறிப்பாக இன்று ஒரு புதிய கட்சியை அறிமுகப்படுத்தி நங்கூரசின்னத்தையும் அறிமுகப்படுத்தினால் நாளை எமக்கென ஒரு சின்னத்தை அறிமுகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே தேர்தல் முடியும் வரை புதிய கட்சி ஒன்றை அமைப்பதில்லை ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் ஒரு கட்சியை ஒருவாரத்துக்குள் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படவேண்டும். இதனை நாம் ஒளிவு மறைவாக செய்யக் கூடாது. எமது ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் பகிரங்கமாகக் கூறவேண்டும்.
இதற்கு சந்திரசேரகன் ஒத்துக்கொண்டால் அதனை அவர் பகிரங்கமாக மேடையில் பிரகடனப்படுததவேண்டும். அத்துடன் திரு. பி. ஏ. காதரை பிரதம அமைப்பாளராகவும் திரு. வி. டி தர்மலிங்கத்தை பிரச்சார செயலாளராகவும் சந்திரசேரகன் அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னர் என்ன பிரச்சினை வந்தாலும் நாம் பின்வாங்கக் கூடாது.
இத்தீர்மானத்;தை அமுல் படுத்துவதில் எனக்கொன்றும் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் வீ.டி தர்மலிங்கத்தை தேர்தல் பணியில் வெளிப்படையாக ஈடுபடுத்துவது சரியா என்பதைப் பற்றி ஆராய்ந்தோம். அவர் அப்போது தலவாக்கெலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக இருந்தார். அரசாங்க ஊழியரான அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அரசாங்கம் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். அத்துடன் தேர்தல்களம் இனி யுத்தகளமாகத்தான் மாறப்போகிறது என்பது எமக்குத் தெரியும். அரசுடன் இணைந்திருந்த இதொகா அவரை பழிவாங்காமல் விடாது எனவே என்ன செய்து என நாம் கவலைப்பட்டோம். மறுபுறத்தில் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அவரே சிறந்த எழுச்சி பேச்சாளராகவும் மிகுந்த மக்கள் அபிமானம் பெற்றவராகவும் திகழ்ந்தார். எனவே அவரில்லாமல் எமது பணியைத் தொடரமுடியமலிருந்தது. அதற்கு அவர் ‘நீங்கள் எல்லாம் களத்தில் குதிக்கும் போது நான் எப்படி பார்த்துக் கொண்டிருப்பது.. நான் எனது தொழிலைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.!’ என உறுதியாக நின்றார். ‘சேரு (Sir)க்கு ஏதாவது பிரச்சினை கொடுத்தால் நாம் அது யாராக இருந்தாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.’ என உணர்ச்சி ததும்ப கூறினர்.
இத்தீர்மானங்களோடு நாம் சந்திரசேகரனின் வருகைக்காக காத்திருந்தோம். மாலை 6.30 மணியளவில் அவரது வாகன ஊர்வலம் தலவாக்கெலை வந்து சேர்ந்தது. அவரை வரவேற்பதற்கு தலவாக்கெலை நகரில் பெருந்தொகையான மக்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். நான் வந்திருக்கும் தகவல் கேள்விபட்டதும் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் செல்லாமல் பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸ் மாடிக்கு வந்தார்.
சிறிது நேரமே எமது பிரிந்தவர் கூடல் பாச பரிமாற்றம் இடம் பெற்றது.’வாருங்கள் மேடைக்கு. மற்றவற்றை பிறகு பேசுவோம்’ என கையைப் பிடித்து அன்போடு அழைத்தார். ‘அதற்கு முன்னர் கொஞ்சம் பேச வேண்டுமே. பேசலாமா?’ என்று கேட்டேன். உடனே அவர் நிலைமையை விளங்கிக் கொண்டு நிதானமாக நான் சொல்வதை செவிமடுத்தார். புதிய கட்சி அமைப்பதைப்பற்றி நான் கூறும் போது அங்கிருந்த அனைவரும் சந்திரசேகரனின் முகபாவம் என்ன சொல்கிறது என அறிய அவரது முகத்தையே கண்மூடாமல் நோக்கினர். அவர் மகிழ்ச்சியோடு ‘நல்ல முடிவு’ என்று கூறினார். அதன் பின்னர்; எமது அடுத்த அனைத்து தீர்மானங்களையும் கேட்டு விட்டு: ‘இப்போது விடயம் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். எனக்கு இதில் எந்தப்பிரச்சினையுமில்லை. இன்னும் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் பின்னர் பேசலாம். இப்போது நாம் ஒரு மனதோடு செயற்படுவோம்.’ என்று கூறி என்னையும் விடியையும் மேடைக்கு அழைத்துச் சென்றார்.
மேடையில் ஏறிய வீ.டிக்கு அறிமுகம் தேவைப்பட வில்லை. அனைவரும் ஆரவாரத்தோடு உற்சாகமாக கைதட்டினார்கள். என்னை அங்கிருந்த படித்த இளைஞர்களுக்கும் என்னோடு சிறையிலிருந்து மீண்ட இளைஞர்களுக்கும் தெரிந்திருந்தது. மற்றவர்களுக்கு நான் யார் என்பதை சந்திரசேகரன் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. அவர் என்னைப்பற்றி கூறி என்னைப் பேசச் சொன்னபோதுதான் நான் முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகில் இருப்பதைப்போல உணர்ந்தேன்.
அதுவரை இலங்கையிலிலுள்ள அநேகமாக அனைத்து முற்போக்கு புத்திஜீவிகளோடும் பேசியிருக்கிறேன். நூற்றுக்கணக்கான கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறேன். வடக்கு கிழக்கிலும் சரி தெற்கிலும் சரி எனது காலத்தில் உருவான சகல இயக்கத் தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன் தெற்கில் காமினியாப்பா, தர்ம சேகர முதல் றோகன விஜய வீர வரை தெற்கில் இரத்தின சபாபதி முதல் பத்மநாபா பாலகுமார் உமா மகேஸ்வரன் சந்ததியார் ஸ்ரீ சபாரத்னம் பரந்தன் ராஜன் மாத்தயா அன்டன் பாலசிங்கம் போன்ற இயக்கத் தலைவர்களையும் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசியது இதுவே முதற்தடவை. அது அத்தனை எளிதான காரியமல்ல. நான் எனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டேன். நான் பேசி முடிந்த பின்னர் மக்கள் பலத்த கரகோஷம் எழுப்பினார்களஅந்த கைத்தட்டு எனது பேச்சுக்காக அல்ல என்பது எனக்குத் தெரியும். பின்னர் வீடி பேசினார். அவரது உரை கூட்டத்தை தட்டி யெழுப்பியது. அவர் தனது குரலை உயர்த்தி பேசிவிட்டு நிறுத்திய போதெல்லாம் உற்சாகமாக மக்கள் கைத்தட்டினர். கடைசியில் சந்திரசேகரன் பேச எழுந்ததுமே பலத்த ஆரவாரம். தேர்தலில் போட்டியிடுவதிலுள்ள அனுகூலம் ஒன்றிருக்கிறது. பிரதம வேட்பாளரின் உரையை மக்கள் ஆர்வத்தோடு கேட்பார்கள். இது மக்கள் மத்தியில் கருத்துகளை கொண்டுசெல்வதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது.
சந்திரசேகரனைப் பொருத்தளவில் அவர் பிரதம வேட்பாளராக இருந்ததைத் விடவும் மக்கள் மனமறிந்து நிலைமைக்பேற்ப பேசுவதில் வல்லவராயிருந்தார். அவரது பேசியபோது அவரது ஒவ்வொரு வசனத்திற்கும் கைத்தட்டு விழுந்தது. அவரது மேடைப்பேச்சை அன்றுதான் முதன்முதலில் கேட்டேன். மக்களுக்கு புரியும் வகையில் எவ்வளவு பெரிய விடயத்தையும் எளிமையாக விளக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அவரது பேச்சு இருந்தது. நான் அவரது பேச்சைக் கேட்டு சொக்கிப் போனேன். எம்மிடம் ஒத்துக் கொண்டபடி நாம் வலியுறுத்திய விடயங்களை தனது நிலைப்பாடாக எவரையும் சீண்டாமல் எல்லாருக்கும் புரியும் படி எடுத்தியம்பிய அந்த அழகும் லாவகமும் அவருக்கே உரிய கலை. நான் அவரிடமிருந்து தான் தொழிலாளர் மத்தியில் எப்படி மேடையில் பேசுவது என்பதைக் கற்றுக்கொண்டேன்.
இன்னும்வரும்…
Late Mr Chnadrasekaran started to distance or rather takes his own way since late 1987. It was mainly because of the cold war which was going bet ween him andMr Sellasamy. Sellasamy feared for MrChandrasekaran, where as Mr Thondaman saw him as an asset and future leader. In 87 MrChandrasekaran arranged a Satyakragam in Talawakelle temple protesting the detention of youth from up country under PTA, mopst of them were from Talawakelle and Ragala. MrSellasmy raised this as an issue in the cwc and said MrChandrasekaran had done this with out consulting CWC, a letter of show cause was sent, butMr Chandrasekaran send an excellant reply, after this incident, MrChandrasekaran did not take part in core meetings such as planning commitee, executive committee meeting of the CWC.
As far as I know Mr Thondaman offerd Mr Chandrasekaran a ticket to contest PC polls in 87, but he did not show interest, main reason for this according to Selvaraj, that Indo Lanka accord was not the best solution for tamils. But Mr Thoandaman requested Chandrasekaran to work for the election, its true he was mainly used in Talawakelle area, its because he had more influene in that area. Mr Thoandaman never tried to undermine MrChandrasekaran, he did not fear for him, It was Mr Sellasamy who feared. when Mr Chandrasekaran was elected to parliament in 94 Mr Thondaman who had 9 mps appointed Mr Chandrasekaran as deputy leader of the Indian tamil MPs.
In 1989 election CWC made a mistake by not fieldning Chandrasekaran, One of the reason was Mr Chandrasekaran did not make a request nominate him, but Mr Thondaman had other thoughts, stateless issue was resolve just prioer to parliament election and voters were being registerd. He knew by 94 election more indian tamil MPs would be elected and Chandrasekan woul have his opportunity.