தமிழகத்தில் பள்ளர்கள் என்றழைக்கப்படும் சாதி உட்பட வேறு சில சாதிகளையும் இணைத்து தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமியோ பள்ளர் மக்களை பட்டியலில் இருந்தே வெளியேற்ற வேண்டும் எனக் கேட்கிறார்.அபப்டி வெளியேற்றினால் அந்த மக்கள் தங்களின் இட ஒதுக்கீட்டு உரிமைகள் அனைத்தையும் இழக்க நேரிடும். என்னும் சூழலில் பெயரை மாற்றிக் கொள்வது சாத்தியமா என்பது பற்றி தலித் முரசு இதழில் ஆசிரியர் புனிதப்பாண்டியனின் கருத்துக்கள் இவை,
இந்து மதத்தில் பிறந்த ஒருவர் தன் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. வர்ணாஸ்ரம தர்மம் அதை அனுமதிப்பதில்லை. பட்டியல் சாதியினர் மாற முடியாது. அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல என்றார். அவர்கள் பூர்வ பௌத்தர்கள் எப்போதும் வர்ணாஸ்சரம தர்மத்தை கேள்வி கேட்டவர்கள்.
அதனால்தான் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள் என்று நிரூபித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் பட்டியலிடப்பட்டதும் அதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கியதும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை வழங்கியதும் அம்பேத்கரின் சாதனைகள். அம்பேத்கர் உருவாக்கிய இணக்கத்தை உடைப்பதுதான் அவர்களின் நோக்கம். 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்கிறார்கள். இதில் பள்ளர்கள் 23 லட்சம் பேர், தேவேந்திரர்கள் 85 ஆயிரம் பேர். எண்ணிக்கையில் சிறிய தேவேந்திரர்களின் பெயரை 23 லட்சம் எண்ணிக்கை கொண்ட பள்ளர்கள் மீது திணிக்கிறார்கள். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? வாதிரியார்கள் தேவேந்திரகுல வேளாளர் என்ற அடையாளத்தை ஏற்க மாட்டோம் என அறிவித்திருக்கிறார்கள். பள்ளர், காலாடி, பண்ணாடி, குடும்பம் போன்ற பெயர்களுக்கும் இந்து மதத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால், தேவேந்திர குல வேளாளர்கள் என்பது இந்த மக்களை இந்து மயமாக்கும் அநீதியான ஒரு முயற்சி. சரி இவர்கள் தங்களை வேளாளர்கள் என்று அறிவித்துக் கொண்டால் ஏற்கனவே இருக்கும் வேளாள முதலியாரோ, பிள்ளைமார்களோ இவர்களை ஏற்றுக் கொள்வார்களா? இவர்கள் அவர்களுக்கு சம்பந்தி ஆகி விட முடியுமா? சாதி தன்னை மாற்றிக் கொள்ளாது இது இரண்டாயிரம் ஆண்டுகால சதி. தவிறவும் வேளாளர், பிள்ளை என்பதும் சாதியல்ல அவைகள் ஒரு பட்டம்.
பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை எந்த மக்கள் பிரச்சனைகளுக்காகவும் போராடியதில்லை. தூத்துக்குடி பால்ராஜின் ஆடு சாதி இந்துவின் தோட்டத்தில் மேய்ந்தமைக்காக அவரை காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்தார்கள். மரத்தில் கட்டி வைத்து அடித்து அதை விடியோ எடுத்து வெளியிடுகிறார்கள் அவர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என எந்த சாதியினரைச் சொல்கிறாரோ அந்த மக்கள்தான் இந்த வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். சரி பட்டியலில் இருந்து வேளியேற்ற வேண்டும் என்கிறாரே வெளியேற்றா விட்டால் கிருஷண்சாமி பொதுத் தொகுதியில் போட்டியிடுவாரா? தனது சாதிச் சான்றிதழை கிழித்துப் போடுவாரா கிருஷ்ணசாமி.இவர் ஒட்டு மொத்த தேவேந்திர குல வேளாளர்களுக்கும் பிரதிநிதியா தனது தேர்தல் வெற்றிக்கு பட்டியல் சாதிச்சான்றிதழையும் பயன்படுத்தி, தனித் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வெல்லும் கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்றச் சொல்வது அந்த மக்களுக்கு இழைக்கும் வரலாற்று துரோகம். ஒட்டு மொத்த சமூகத்தையும் மோசடியாக வழி நடத்துகிறார். தமிழகத்தில் ஒன்றரை கோடி தலித் மக்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு 18% இட ஒதுக்கீடு என்றால் சுமார் 30 லட்சம் பேர் இதுவரை அரசு ஊழியர்களாக இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள். நாளையும் இருப்பார்கள். ஆனால், சாதிக்கொடுமைகள் நவீனப்பட்டுள்ள இக்காலத்தில் பட்டியலில் இருப்பதுதான் அவர்களை ஓரளவுக்கு பாதுகாக்கிறது. இதுவும் இல்லை என்றால் அவர்கள் பழங்கால கொடுமைகளை மீண்டும் அனுபவிக்க வேண்டியிருக்கும். தேவேந்திரர்கள் பட்டியலுக்குள் வர மாட்டார்கள் என்கிறார் கிருஷ்ணசாமி 1930- சென்னை மாகாணத்தில் இருக்கும் ராமநாதபுரத்தில் கள்ளர்கள் அதிதிராவிடர்களுக்கு எதிராகவும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் எதிராகவும் மொத்தம் 11 விதமான தடைகளை அறிவிக்கிறார்கள். முழங்காலுக்குக் கீழே ஆடை அணியக்கூடாது, தங்கம் அணியக் கூடாது, மண்பானையில்தான் தண்ணீர் எடுக்க வேண்டும். அந்த மண்பானையை தலையில் வைக்க (சுமோடு) துணி பயன்படுத்தக் கூடாது. வைக்கோல்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்த இந்த கொடுமைகள் ஆதி திராவிடர்களுக்கு எதிராகவும், தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராகவும் நடந்தது. இதை எதிர்த்ததால் அவர்களின் குடிசைகளும், கால்நடைகளும் கொளுத்தப்பட்டன இந்த நான் சொல்லவில்லை மாமேதை அம்பேத்கர் சொல்கிறார். யாரும் எந்த மதத்தை வேண்டுமென்றாலும் தழுவிக் கொள்ளலாம் என்கிறது நமது அரசியல் சாசனம். ஆனால், யார் வேண்டுமென்றாலும் எந்த சாதியையும் தழுவிக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை. “பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர்களையும், விஞ்ஞானிகளையும் கொன்ற குற்றச் செயலலுக்காக இன்று கத்தோலிக்க போப் உலக மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார். அதே போன்று சங்கராச்சாரிகள் ஒன்று கூடி இரண்டாயிரம் ஆண்டுகளாக 25 கோடி பட்டியல் சாதி மக்களை இந்தியாவில் ஊருக்கு வெளியில் ஒதுக்கி வைத்து விட்டோம். அதற்காக மன்னிப்புக் கேட்கிறோம். இனி யாரும் எந்த சாதிக்கும் வேண்டுமென்றாலும் மாறிக் கொள்ளலாம். எழுதப்பட்ட புராணங்களையும், ஆகமங்களையும், வர்ணாஸ்ரம தத்துவத்தையும் திருத்தி விடுகிறோம் என அறிவிப்பார்களா? பட்டியல் சாதிகளைச் சேர்ந்த ஒருவர் சாதியை விட்டு வெளியேறுவது எளிது அவர் தனது சாதிச் சான்றிதழை கிழித்துப் போட்டு விடலாம். அல்லது, தன்னை பிற்படுத்தப்பட்ட சாதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் கிறிஸ்தவத்திற்கோ, இஸ்லாம் மதத்திற்கோ மாறி விட்டாலே பிற்படுத்தப்பட்ட சாதிக்கு மாறி விடுவார். பட்டியல் பாதிக்கப்பட்ட பூர்வ பௌத்தர்களுக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுக்கிறது. அம்பேத்கர் ஏற்படுத்திய இணக்கத்தை இவர்கள் குலைக்கிறார்கள். இது இந்துத்துவ சக்திகளின் சதித் திட்டம். இத்தனை உண்மைகளையும் மறைத்து ஒரு சமூகத்தின் மீது அநியாயமான வேலையை கிருஷ்ணசாமி செய்கிறார். அவரை எதிர்கால தலைமுறை தண்டிக்கும்!