இன்று பெண் விடுதலை பற்றிப் பெண்ணியவாதிகள் என்று தங்களை அடையாளப் படுத்துகிற சிலர் பேசும் போது வர்க்கம், சாதி, தேசியம் போன்ற பலவற்றுக்கும் அப்பாற் பட்டதாக ஒரு பெண்ணிலையை உருவாக்கிக் காட்ட முயலுகிறார்கள். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வர்க்கப் போராட்டம், சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் போன்றனவற்றைப் புறக்கணிக்கிறதற்கும் மேலாகத் தாங்கள் முன்வைக்கிற பெண்ணிய இலக்கிற்கு அவை தடவையாக அமையலாம் என்கிற கருத்தையும் வற்புறுத்த முற்படுகின்றனர். அதன் போக்கில் பெண்ணுரிமைக்கான போராட்டங்களின் வரலாற்றை மறைக்கவும் திரிக்கவும் முற்படுகிறார்கள்.
தேசியவாதமோ, மதவாதமோ, பிரதேச வாதமோ, சாதி அரசியலோ தமக்குட் பலவாறான அடக்கு முறைகளைப் பண்பாட்டின் பேராலும் சமூக அடையாளத்தின் பேராலும் கொண்டிருக்கவும் நியாயப்படுத்தவும் செய்கின்றன. இவ்வாறான கோட்பாடுகள் நாடுகிற சமூக நீதி குறைபாடானதாகவும் மனித சமூகத்தின் ஒரு சிறு பகுதியினது நலனை மட்டுமே கருத்திற் கொண்டனவாகவும் அமைகின்றன. குறிப்பிட்ட சில அடையாளங்கட்கு இடையில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதில் உள்ள கவனம் ஒவ்வொரு அடையாளத்துக்கும் உட்பட்ட முரண்பாடுகளைத் தீர்ப்பது பற்றிக் காட்டப் படுவதில்லை. பிற சமூக அநீகளைத் தட்டிக் கேட்க இயலாத பெண்ணியம் என்ன தான் உலகளாவிய முறையிற் பெண் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சமூக அநீதியையும் புறக்கணிக்கிற போது ஒரு வர்க்கத்தினதோ இனத்தினதோ சமூகப் பிரிவினதோ தரப்பிலேயே தன்னை நிறுத்திக் கொள்கிறது. ஏனெனில் இவ்வாறான விடயங்களில் நடுநிலை என்று ஒன்றுக்கு இடமில்லை.
வர்க்கப் போராட்டத்தை முன் நிறுத்துகிற மாக்ஸியர்கள் பாட்டாளி வர்க்க நலன்களை மட்டும் வற்புறுத்தி ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களது நலன்கட்கு மேலாக முன் நிறுத்துவது இல்லை. மாறாக வர்க்க அடிப்படையிலான சுரண்டலையும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் இல்லாது ஒழிக்கவும் அதன் தர்க்க ரீதியான நீட்சியாக வர்க்கங்களையே இல்லாது ஒழிக்கவும் போராடுகிறார்கள். எனவே எல்லா விதமான சமூக நீதிக்கான போராட்டங்களும் அவர்களது இலக்குக்கு உடன்பாடானவை. அதனாலேயே மாக்ஸியர்களாற் பலவாறான ஒடுக்கு முறைகட்கு எதிரான போராட்டங்களில் தலைமைப் பங்கேற்க முடிந்து உள்ளது. பல இடங்களில் உரிமைப் போராட்டங்கட்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கவும் தேவையான போது ஒத்துழைக்கவும் முடிந்துள்ளது. இது பெண்ணுரிமை விடயத்தில் மிகவும் பொருந்தும்.
ரஷ;யப் புரட்சி முதற்கண், உழைக்கும் வர்க்கங்களது விடுதலையே. ஆனால் அதுவே தேசிய இனங்களதும் பெண்களதும் விடுதலையாகவும் அமைந்தது. ஆண்-பெண் சமத்துவத்தை சோவியத் ஒன்றியத்தின் சட்ட நூல்களிலும் சமூக நடைமுறையிலும் புகுத்தி ரஷ;யாவை விடப் பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்த முதலாளிய நாடுகட்கு முன்னுதாரணமாக அமைந்தது அன்றைய சோவியத் ஒன்றியமே.
இந்தியாவை ஒத்தளவுக்கு ஆணாதிக்கம் வலுவாக இருந்த நாடு சீனா. சீனாவின் தேசிய விடுதலைப் போராட்டத் தலைமை கம்யூனிஸ்ட்டுக்களின் கைக்கு மாறிய பின்பு சீன விடுதலை என்பது பல வேறு விடுதலைகட்கு மத்தியில் பெண் விடுதலையையும் தனது வேலைத் திட்டத்தின் பகுதி ஆக்கியது. சீனாவில் பெண்ணுரிமைக்காக இயற்றப் பட்ட சட்டங்களும் திருமணம், மண முறிவு, சொத்து உரிமை போன்ற விடயங்களிற் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தன.
விடுதலையின் பின்பு என்றில்லாமல் விடுதலைப் போராட்டத்தின் போக்கிலேயே பெண்ணுரிமையை மாக்ஸியப் போராளிகள் வற்புறுத்தி வந்துள்ளனர். இது பற்றி அறிய விரும்புகிறவர்கள் நேபாள மாஓவாதிகள், பிலிப்பினியக் கம்யூனிஸ்ற்றுக்கள் போன்றோரது போராட்ட இயக்கங்களிற் பெண்களின் பங்கு பற்றியும் விடுவிக்கப் பட்ட பிரதேசங்களில் பெண்களின் நிலை பற்றியும் விசாரித்து அறியலாம்.
முதலாளிய நாடுகளில் முதலாளியமோ முதலாளியச் சீர்திருத்தவாதிகளோ வலிந்து பெண்கட்கு உரிமைகளை வழங்க முன்வரவில்லை. அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோஷலிஸச் சிந்தனையாளர்களும் கம்யூனிஸ்ட்டுக்களும் அப் போராட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். அது மட்டுமன்றி முன்னுதாரணமான பெண் விடுதலைப் போராளிகள் இடதுசாரிகளாகவும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.
இப்போது சர்வதேசப் பெண்கள் தினம் என்று கொண்டாடப்படும் பெண்ணுரிமையை அடையாளப் படுத்துகிற நாள் கூடத் தீவிர இடதுசாரிகளது பங்களிப்பினால் உருவாகியதே ஆகும். 1911 மாச் 8ம் நாள் தொடங்கிக் கொண்டாடப்படும் அந் நாளைப் பற்றிப் பேசும் போது கிளாரா ஸெற்கின் பற்றி இவர்கள் பேசுவார்கள். அவர் இடதுசாரிப் போராளி என்பதை மழுப்பி விடுவார்கள். இது ஏன்?
வேலைக்குப் போகும் பெண்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உதவும் மொண்டிசோரிப் பாடசாலைகள் என்ற கருத்துக்கு வித்திட்ட மொண்டிசோரி அம்மையார் தீவிர இடதுசாரியுங் கூட. இன்னும் பல வேறு வழிகளிற் காத்திரமான பங்களித்த பெண்ணுரிமைப் போராளிகளின் இடதுசாரி அடையாளத்தை மூடிக்கட்ட நம்மிடையே உள்ள சில நடுத்தர வர்க்கப் பெண்ணிய வாதிகள் முயல்வது ஏன் என்ற கேள்வியை தாம் கேட்க வேண்டும். இடதுசாரி, கம்யூனிஸ்ட் பெண்ணியவாதிகள் கட்சியில் இருந்த ஆண்களுடன் முரண்படுகிற சில சந்தர்ப்பங்களை இவர்கள் மிகைப் படுத்திக் கம்யூனிஸ்ற்றுக்களும் இடதுசாரிகளும் பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள் என்று உண்மைகளைத் திரிக்க முற்படுவது ஏனென்று நாம் விசாரிக்க வேண்டும். இவை நோக்கம் இல்லாமல் நடக்கிற காரியங்களல்ல.
ஒருவர் இடதுசாரிக் கொள்கைகளையோ மாக்ஸியத்தையோ ஏற்ற மறுகணம் புனிதராகி விடுவதில்லை. ஒவ்வொருவரும் அவரவரது சமூகப் பின்னணியில் இருந்து சுமந்து வரும் சுரண்டற் சமூகச் சிந்தனைச் சுமைகள் ஒரே வீச்சிற் தூக்கி எறியக் கூடியன அல்ல. இதற்காகவே விமர்சனம், சுய விமர்சனம் என்கிற நடைமுறைகளைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப் பிடிக்கின்றன. சமூகம் பற்றிய அறிவு கற்பதை விட முக்கியமாகச் சமூக நடைமுறை மூலமும் போராட்டங்கள் மூலமுமே ஒருவரை வந்தடைகிறது. இதனாலேயே மாக்ஸியர்கள் எவரையும் பூரண ஞானி என்று கொள்வதுமில்லை எதையும் முடிந்த முடிவாக்கி முற்றுப் புள்ளி வைப்பதும் இல்லை. ஆணாதிக்கச் சமுதாயத்திலிருந்து வரும் இரு பாலருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் பாதிப்பு உண்டு. அதிலிருந்து விடுதலை பெறுவது சமூக விடுதலைக்கு அவசியமானது. எனவே கம்யூனிஸ்ட்டுக்கள் தேசியவாத, சுரண்டும் வர்க்க, சாதிய, ஆணாதிக்கச் சிந்தனைகட்கு எதிரான போராட்டங்களைத் தமது கட்சிகட்கு வெளியே மட்டுமன்றி உள்ளேயும் நடத்த வேண்டியவர்களாக உள்ளனர். அவ்வாறு தொடர்ச்சியாக நடத்துவதான் மூலமே ஒருவர் நல்ல கம்யூனிஸ்ட் ஆக இயலும், ஒரு கட்சி நல்ல கம்யூனிஸ்ட் கட்சி ஆக முடியும். இவையெல்லாம் நமது நடுத்தர வர்க்கப் பெண்ணியவாதிகள் அறியாதவை அல்ல. ஆனாலும் அறியாதது போலக் காட்டிக் கொள்கிறார்கள். இது ஏன்? இதுவும் நோக்கமில்லாது நடக்கிற காரியமல்ல.
எனவே தான் இந்த இடதுசாரி எதிர்ப்புப் பெண்ணியவாதிகளின் சமூகப் பார்வையையும் போராட்ட அணுகுமுறையையும் போராட்டங்களையும் கொஞ்சங் கவனிக்க வேண்டி உள்ளது.
இவர்கள் பேசுகிற பெண்ணுரிமைப் பிரச்சனைகள் எவை? இவர்கள் முன்னெடுக்கிற பிரச்சனைகள் எவை? இவர்கள் வற்புறுத்திப் போராடுகிற பிரச்சனைகள் எவை? இவர்களது போராட்ட இலக்குத்தான் என்ன?
நடுத்தர வர்க்கப் பெண்கள், குறிப்பாக உயர் நடுத்தர வர்க்கத்தினர், அதே வர்க்கத்து ஆண்கட்குச் சமமாயிருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாயுள்ளனர். அதிற் கேடில்லை. ஆனால் அந்த அக்கறை ஏன் கூலி உழைப்பில் ஈடுபடுகிற பெண்களின் சமத்துவம் பற்றிக் காட்டப்படுவதில்லை? பெண்கள் ஆண்களை விட மிகக் குறைவாகவே ஊதியம் பெறுகிற துறைகளில் விவசாயத் துறை முக்கியமானது. கிராமியக் கூலி உழைப்பாளர்களிடையே பால் அடிப்படையிலான ஊதிய வேறுபாடு அதிகம். இது பற்றி யாராவது எடுத்துச் சொல்லி அதுபற்றிப் பேசப்பட்டால், என்.ஜி.ஒப் பணத்தில் ஆள் அமர்த்தி ஆராய்ச்சி செய்து தகவல்களைச் சேர்த்து அறிக்கை எழுதிக் காசு சம்பாதிக்கிற சாமர்த்தியம் நமது பெண்ணிய நிறுவன எசமானியர்கட்கு இருக்கிறது. ஆனாற் சமமான ஊதியத்திற்கான போராட்டங்களில் இறங்க அவர்கட்கு இயலாது. அவர்களுடைய வாழ்க்கை முறை அப்படி.
போரின் கொடுமையால் அல்லற்பட்டு வாழ்வுக்கும் சாவுக்குமிடையே அல்லாடி அகதி வாழ்வு வாழ்கிற பெண்களுக்குப் புனர் வாழ்வு என்கிற பேரில் என்.ஜி.ஓக்கள் மூலம் அள்ளிப் பெறுகிற பணத்திற் கிள்ளி விநியோகித்து கொண்டு தங்களது வசதிகளைப் பெருக்கியபடி பெண்ணியவாதமும் பெண் மேம்பாடும் பேசுகிறவர்களை என்.ஜி.ஓக் கலாசாரம் உருவாக்கி இருக்கிறது. இவர்களை மறுத்து ஒரு கேள்வி கேட்டால் உபகார நிதியையே நிறுத்தக் கூடியளவுக்கு அதிகாரம் இவர்களது கைகளில் குவிந்து உள்ளது. இது விடுதலையோ விமோசனமோ அல்ல. மாறாக இது ஒரு புதிய அடிமை முறை. அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் முகவர்களாகவும் கங்காணிமாராவும் இவ்வாறானவர்கள் இயங்கி வருகிறார்கள்.
மலையகத்தில் பெண்களிடையே செயற்படுகிற என்.ஜி.ஓப் பெண்ணியவாதிகள் இருக்கிறார்கள். தோட்டப் பாடசாலைகள் சிறார் பராமரிப்பு மையங்கள் போன்ற வற்றிற் காணப் படுகிற சாதிப் பாகுபாடு, அதிகாரத் துஷ;பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிராக இவர்கள் யாரும் சுட்டு விரலைத் தன்னும் அசைக்க முயல்கிறார்களா? இல்லை. மலையகப் பிரமுகர்களதும் அரசியல் வாதிகளதும் தொழிற் சங்கத் தலைவர்களதும் நட்பும் ஆதரவும் இல்லாமல் இவர்களாற் பிழைப்பு நடத்த இயலாது.
இது தான் நாம் இன்று இலங்கையிற் காணக் கூடிய பெண்ணியச் சீமாட்டிகளின் பெண்ணுரிமை நடவடிக்கைகளின் தன்மை. இவர்கள் பேசுகிற பெண்ணுரிமை, ஒரு குறிப்பிட்ட வர்க்க அடுக்கிற்குள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு வசதியாக உள்ள ஒரு கருவியே ஒழிய உண்மையிலேயே அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட உழைக்கும் வர்க்கப் பெண்களின் உரிமைகளை வெல்வது பற்றியது அல்ல.
தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக ஏன் கொழும்பிலுள்ள பெண்ணிய நிறுவனங்களாற் குரல் கொடுக்க முடியவில்லை? பேரினவாத ஒடுக்கு முறை, பால் வேறுபாடு இல்லாமல் வடக்கு கிழக்கின் மக்களை முக்கியமாக வறுமைப் பட்ட மக்களை வதைக்கிறது. பெண்களும் சிறுவரும் ஆயுதம் ஏந்துவது பற்றிப் பேசுகிற அளவுக்கு இவர்களால் ஏன் அந்த நிலைக்கு அவர்களைத் தள்ளி உள்ள அரசியலைப் பற்றிப் பேச இயலுவது இல்லை?
முன்னாள் இடதுசாரிகளான பெண்ணியவாதிகள் சிலர் இப்போது பெண்ணுரிமைக்கு இடதுசாரிகள் வழங்கிய பங்கை மறுப்பதிலும் மாக்சியத்தை மறுப்பதிலும் நேர்மையான மாக்ஸியவாதிகளை ஓரங் கட்டுவதிலும் காட்டுகிற கவனத்தைப் பெண்கள் வர்க்க அடிப்படையிற் சுரண்டப் படுவது பற்றிக் காட்டுகிறார்களா? வன்னியிலல்ல, இவர்கட்கு எட்டக் கூடிய தொலைவில் ஆடைத் தொழிற்சாலைகளும் சுதந்திர வர்த்தக வலயக் கம்பெனிகளும் உள்ளன. அங்கே மிக மோசமான முறையிற் சுரண்டப் படுவோர் பெண்கள். அவர்கட்குத் தொழிற் சங்க உரிமைகள் இல்லை. சாதாரண மனித உரிமைகள் பலவும் இல்லை. அவர்களின் உழைப்பு மட்டுமன்றி அவர்களது உடலும் சுரண்டலுக்கு உட்படுகிறது. இவை பற்றி ஏன் நமது பெண்ணிய வாதிகளாற் பேச இயலவில்லை? இவற்றுக்கெல்லாம் ஒரே ஒரு காரணந்தான் உண்டு. அவர்களது வர்க்க நலன்கள் அவர்களது நடத்தையைத் தீர்மானிக்கின்றன.
நமது நடுத்தர வர்க்கப் பெண்ணியவாதிகள் பாலியற் சமத்துவமும் சுதந்திரமும் பேசுவார்கள். வர்க்க அடிப்படையிலான பாலியற் சுரண்டல் கண் முன்னே நடக்கிறது. அது பற்றிப் பேசமாட்டார்கள். தேசிய இன அடிப்படையில் பாலியற் கொடுமைகள் நடக்கின்றன. தட்டிக் கேட்க மாட்டார்கள். இது தான் அவர்கள் அறிந்த சமத்துவம். இவர்கள் கேட்பது தங்கள் வீடு, அலுவலகங்களின் நாலு சுவர்கட்கு நடுவில் வரையறுக்கப் பட்ட சமத்துவமே ஒழிய நாட்டுக்கான, அனைத்துப் பெண்களுக்குமான சமத்துவம் அல்ல. பிற சமூக அக்கறைகள் அற்ற பெண்ணியம் பேசுகிறவர்களில் என்.ஜி.ஓ. நிதி பெறும் பெண்ணியவாதிகளே இன்று அதிகமாக அறியப் பட்டவர்கள். அவர்கள் மறுக்கிற பிற சமூக அக்கறைகள் எல்லாம் அவர்களுக்குள் மறைவாக இருக்கின்றன. அவர்களால் தங்களது வர்க்கம், பிரதேசம், சாதி, தேசிய இனம் உட்பட்ட பல்வேறு சமூக அடையாளங்களில் ஊறிப் போய் உள்ளவர்கள் என்பதனாலேயே அவை பற்றிய போராட்டங்களை முக்கியப் படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. அவை பற்றிப் பேசினால் பெண்ணுரிமைக்குக் கேடு என்று உள்ளுர அவர்களும் நம்பவில்லை, நாங்களும் நம்ப வேண்டியதில்லை. வர்க்கங்கள் உள்ளனவும் வர்க்கச் சார்பற்ற எதுவுமே இல்லை. பெண்ணியம் அதற்கு விலக்கல்ல.