வறுமையையும் பட்டினியையும் தோற்றுவித்திருகும் சுதந்திர வர்த்தகச் சந்தைக்கு அவமானம் என்பது கிடையாது. நாகரீகம் என்பது மனிதர்களை அழித்துச் பணம் திரட்டிக்கொள்வது தான். இந்தியாவில் ஓடும் பஸ்சில் கோராமாகப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணிற்கு அமரிக்க அரசு விருது அறிவித்து சில நாட்களின் உள்ளாகவே பிரித்தானியாவில் பதின்ம வயதுப் பெண் ஒருவர் 48 மணி நேரத்திற்குள் 90 தடவை 90 ஆண்களால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட செய்தி மனிதத்தை உலுக்கியது.
பிரித்தானியாவில் பாலியல் அடிமை வியாபாரம் நிறுவனமயப்பட்ட வடிவத்தில் நடைபெறுவதாக சமூக நீதிக்கான பிரித்தானிய மையத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
குறித்த 16 வயதுப் பெண் பாலியல் அடிமைத் தொழிலில் ஈடுபட்ட தனது நண்பர்கள் ஊடான தொடர்புகள் ஊடாகவே இத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பெண்களில் அரைவாசிப் பகுதிக்கு மேலானவர்கள் ஆங்கிலப் பெண்கள் எனவும் அறிக்கையின் தகவல்கள் கூறுகின்றன. அறியப்பட்ட புள்ளிவிபரங்களே இத் தகவல்களைக் கொண்டுள்ளதாகவும் இத்தொகை பல மடங்கு அதிகமானதாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் அடிமைத் தொழிலை ஒழிப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
நவ தாராளவாத ‘சுதந்திரச் சந்தை’ கோரும் பெண்களின் சுதந்திரம் என்பது பெண்களைப் குடும்ப அலகின் அடிமைகள் என்ற நிலையிலிருந்து பாலியல் பண்டங்களாக மாற்றுவதற்கே.
அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதைத்த அழிவுக் கலாச்சாரத்தின் பலன்களை மறைக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியப் பெண்மீதான அக்கறை ஏன்?