01.12.2008.
ஒரு சமூகத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் அச்சமூகத்தில் வாழும் பெண்களின் சுதந்திரம், கௌரவம், சமத்துவம் என்பன சிறப்பான நிலையில் பேணப்படுவதுதான் என உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி தேவிகா தயாபரன் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு வாரம் நவம்பர் 25 மற்றும் மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 ஆகிய தினங்களை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் யுத்த சூழலில் வாழும் பெண்களின் வாழ்வாதார உரிமையைப் பேணுவது தொடர்பாக தேவிகா தயாபரன் மேலும் தெரிவிக்கையில்;
உலகத்தின் எப்பாகத்திலும் நடைபெறுகின்ற அமைதியற்ற போர் சூழலினாலும் இடம்பெயர்வு , முகாம் வாழ்க்கை இவற்றினாலும் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே. குடும்பங்களின் சமூக, பொருளாதார , பண்பாட்டு , கலாசார கட்டமைப்புகள் சீர்குலைக்கப்படுவதும் தங்கிவாழும் சூழ்நிலைக்கும் அமைதியற்ற, ஆதரவற்ற அவல வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதும் பெண்களே. இவ்வாறான சூழ்நிலைகளால் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் அதிகரித்து செல்கின்றன.
பெண்கள் பாரம்பரியமாக வாழ்ந்து அனுபவித்த சுற்றாடல் , சூழ்நிலைகள், போர்சூழல்கள், இயற்கை அனர்த்தங்களினாலும் மாற்றப்படும் பொழுது பேணிவந்த குடும்ப கட்டமைப்புகள் சீர்குலைக்கப்படுவதும் பிள்ளைகளின் கல்வி, போசாக்கு , சுகாதாரப் பழக்கவழக்கங்கள் சீரழிந்து போவதும் குடும்பங்களுக்குள் அமைதி குலைவதும் பிரச்சினைகள் உருவாகுவதும் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளுக்கு அத்திபாரமாக அமைகின்றது. இதனால், ஏற்படுகின்ற குடும்பப் பிரச்சினைகள், குடும்பப் பிரிவுகள், விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இதற்கு மேலாக சிறுமிகள் எதிர்நோக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதுடன் பெண்கள் எதிர்நோக்கும் குடும்ப வன்முறைகளோடு வேலைத் தளங்களிலும் வெளியேயும் எதிர்நோக்குகின்ற உரிமைமீறல்கள், கொலைகள், தீயிட்டு கொளுத்தப்பட்டும் துப்பாக்கி வேட்டுக்களாலும் பலியாக்கப்படுகிறார்கள். இத்தனைக்கும் மேலாக கலாசாரம், சமூக பண்புகள் என்ற கவசங்களுக்குள் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளுடன் சீதன கொடுமைகள் என்றும் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் என்றால் இவையெல்லாம் வாழ்வியலின் விதிமுறைகள் எனக்கூறி வன்முறை சுரண்டல்களினால் அவர்களின் உரிமைகளும் உணர்வுகளும் மீறப்படுகின்றது.
ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கான அளவுகோல் மனிதநேயமும் அந்த சமூகத்தில் வாழும் பெண்கள் சுதந்திரம், கௌரவம், சமத்துவம் மதிக்கப்படுவதும் தான். அவ்விடயங்கள் மீறப்படும் போது சமுதாயம் சீரழியும் நிலையே உருவாகும்.
பெண்களின் உரிமைகளும் அந்தஸ்தும் பேணப்படும் பொழுது அந்த சமூகம் முன்னேற்றம் அடைந்து முழுமைபெறும். ஆகவே நாம் விரும்புவது வன்முறைகளற்ற வாழ்க்கையையும் வாழ்வதற்கும் வன்முறைகளற்ற சமூகமாக மாற்றுவதற்கும் அனைவரும் ஒன்றிணைவோம், செயற்படுவோம்.