எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் கலந்துள்ளனர்.அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எவர் என்ன சொன்னாலும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள் குடியேற்ற முடியாதென கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தந்த ஜெனரல் சரத் பொன்சேகா, தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதுடன், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
இதன் போது பீடாதிபதிகள் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஜெனரல் பொன்சேகா இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்;
எவர் எதைச் சொன்னாலும் கண்டபடி அகதி முகாம்களிலிருந்து மக்களை உடனடியாக மீள் குடியமர்த்திவிட முடியாது. மக்கள் அங்கு வழமையான அமைதி நிலையில் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அங்கு அங்குலத்திற்கு அங்குலம் நிலக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் கலந்துள்ளனர்.அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, அனைத்தும் சீர் செய்யப்பட்ட பின்னரே அகதி முகாம்களிலுள்ள மக்கள் உரிய வகையில் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்களெனத் தெரிவித்தார்.
வெளிநாடுகளும் பல தரப்பினர்களும் எதனைக் கூறினாலும் நிலக் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னரே அம் மக்கள் பாதுகாப்பாகக் குடியேற்றப்பட வேண்டுமென பௌத்த பீடாதிபதிகளும் தெரிவித்தனர்.