நெதர்லாந்து ஹேக் நீதிமன்றத்தில் ஐந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. 2003 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக 10 முதல் 16 ஆண்டுகள் வரை ஐந்து புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சிறையில்டைக்க வேண்டும் என அரசு தரப்பு சட்டத்தரணி வாதிட்டார். புலிகளின் வன்முறைகளை நியாயப்படுத்தி கூட்டங்களை ஒழுங்கு செய்ததாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் நெதர்லாந்திலிருந்து இலங்கையில் புலிகளின் வன்முறைகளுக்கு ஆதரவாகவும் நாட்டைப் பிரிப்பதற்காகவும் பிரச்சாரம் செய்ததாக மேலும் குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் நெதர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் இந்த ஐவராலும் ஆயுதம் கொள்வனவு செய்யப் பணம் வழங்குமாறு அழுத்தங்களுகும் மிரட்டல்களுக்கும் உள்ளாகியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
நெதர்லாந்து உட்பட மேற்கு அரசுகள் தமது தேவைக்கு ஏற்ப புலிகளைப் பயன்படுத்திவிட்டு இன்று இலங்கை அரச ஆதரவு நிலையில் செயற்படுகின்றன. அகதிகளைத் திருப்பியனுப்பவும், இலங்கையிலிருந்து வெளியேறிய முன்னை நாள் போராளிகளைக் கைது செய்து போர்க்குற்றம் சுமத்தவும் ஆரம்பித்துள்ளன.
இது ஒரு புறமிருக்க புலிகளின் மொத்த வருடாந்த வருமானமாகக் கணிப்பிடப்பட்டிருந்த 300 மில்லியன் டொலர் பெறுமானமுள்ள சொத்துக்களுக்கு என்னவாகின என்ற கேள்விகள் எழுகின்றன.
மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துவிட்டு அகதிகளைக் கேடயமாகப் பயன்படுத்தும் கும்பல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் தேசிய வியாபாரிகள் இனம் காட்டப்பட வேண்டும். ஊடகங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் தமது முகமூடிகளாகப் பயன்படுத்திக்கொள்ளும் அப்பட்டமான பிழைப்புவாதிகளை நிராகரித்து உரிமைக்காக ஒற்றுமைப்படும் நிலை தோன்ற வேண்டும்.