03.04.2009.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பலை நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத் தரப்பு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
அடுத்தவாரம் பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், ஊடகங்கள் வாயிலாகவே வன்னி மக்களுக்கான நிவாரணங்களை ஏற்றிக்கொண்டு நிவாரணக் கப்பலொன்று பிரித்தானியாவிலிருந்து புறப்படவுள்ளது என்ற தகவல் தமக்குத் தெரியவந்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
எந்தவொரு கப்பலும் இலங்கையின் கடற்பிராந்தியத்துக்குள் நுழைவதாயின் சட்டரீதியான அனுமதியின் பின்னரே நுழையமுடியும் என அவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
ஆனாலும், பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் கப்பல் குறித்து பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர், குறித்த கப்பல் தொடர்பாக பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாயின் கப்பலை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, ‘வணங்கா மண்’ கப்பல் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரித்தானிய அதிகாரிகளால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாக நிவாரணக் கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான க்ரஹாம் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் சட்டவிரோத கப்பல்களைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது.