விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் சரண் அடைவது தொடர்பாக இலங்கை அரசுடன் விஜய் நம்பியார் ஆலோசனை நடத்தினார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிசேல் மொன்டாஸ் கூறியுள்ளார்.
பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றபோது ராணுவத்தால் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தட்டிக் கேட்ட நடேசனின் சிங்கள மனைவியையும் ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்று விட்டனர்.
நடேசனையும், புலித்தேவனையும் சரணடைய வைக்க அனுப்பி அவர்களை சிலர் சதி செய்து கொன்று விட்டதாகவும் ஒரு சர்ச்சை உள்ளது.
இந்த நிலையில், இவர்கள் சரணடைவது தொடர்பாக விஜய் நம்பியார், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் மொன்டாஸ் கூறியுள்ளார்.
விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்பான வேண்டுகோளுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் மேரி கொல்வின் அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.
சரணடைவதாக இருந்தால் இலங்கைப் படையினரிடம்தான் சரணடைய வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை அப்போது விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
வெள்ளைக் கொடியுடன் போகச் சொன்னார்…
சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி இலங்கை படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்றும் விஜய் நம்பியார் கூறியிருக்கிறார்.
மேலும், நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொழும்பில் இருந்த தூதரக அதிகாரிகள், அரசியல்வாதிகள் உட்பட பலருக்கும் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது அரசின் உயர் நிலையில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, பதிலுக்கு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது என்று மொன்டாஸ் கூறியுள்ளார்.
இதன் மூலம் நடேசன், புலித்தேவன் சரணடைதல் என்ற கடைசிக் கட்ட நிகழ்வுகளில் விஜய் நம்பியாருக்குத் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. விஜய் நம்பியார் பேச்சை நம்பித்தான் நடேசன் உள்ளிட்டோர் சரணடைய சென்றுள்ளனர் என்றும் புரிகிறது.
ஆனால், நடேசன் அல்லது புலித்தேவன் தொடர்பாக விஜய் நம்பியார் தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுவதை இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பாலித கோஹனா மறுத்துள்ளார்.
மொத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன், ராணுவம் நடத்திய கடைசி நேர மோதல்களின்போது ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பது மட்டும் புலனாகிறது. இந்த நிகழ்வுகளில் பல்வேறு தரப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வருகிறது.
நடேசன், புலித்தேவன் வீர தமிழர்கள், மறத்தமிழர்கள், வணங்கா தமிழர்கள். தேசிய தலைவர் வழி வந்தவர்கள் .குப்பியுடன் திரிபவர்கள். மிசேல் மொன்டாஸ் ஒரு துரோகி.