15.08.2008.
இந்தியா ஒருபோதும் விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை விரும்பாது. இதனால் தோல்வியடையும் விடுதலைப் புலிகளை பாதுகாப்பதற்கான வியூகத்தை இந்தியா தற்போது முன்னெடுத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது அரசாங்கத்துக்கு சார்பான தமிழ் பிரதிநிதிகளுக்கு சலுகைகளை வழங்குவதனால் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். தமிழ் மக்களின் ஆதரவினை பெறும்வரையில் இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் கருத்து தெரிவித்துள்ளமை குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து ரில்வின் சில்வா மேலும் கூறியதாவது, விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் தேவை இந்தியாவுக்கு உள்ளது. ஏனெனில் இலங்கையில் பிரச்சினைகள் தொடர்ந்தால்தான் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பிராந்திய காப்பு என்பவற்றில் வல்லரசாக திகழ முடியும்.
எனவே புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது. அதன் வெளிப்பாடே நாராயணனின் கருத்தாகும். அத்தோடு அதிகாரப் பரவலாக்கலை இங்கு மேற்கொள்ள வேண்டுமென்று அழுத்தமும் மறைமுகமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொள்ளுமானால் பிரிவினைவாதத்தை தோல்வியடையச் செய்ய முடியாது. அது மீண்டும் துளிர்விடும்.
ஆனால் அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது. நாட்டின் வளங்களையும் தாரைவார்த்துள்ளது. படையினரால் கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டது. ஆனால் அங்கு வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கி அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
மாறாக இந்தியாவின் தேவைக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசாங்கத்திற்கு சார்பானவர்களிடம் அப்பிரதேசத்தை ஒப்படைத்தது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.
பிரபாகரனையும் முதலமைச்சராக்கி வடபகுதி அதிகாரத்தை வழங்க முடியும். ஆனால் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டுமென அமைச்சரொருவர் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு ஆயுதமேந்தியவர்களுக்கும் பிரிவினைவாத சிந்தனையுடையோருக்கும் அதிகாரங்களை வழங்குவதென்பது நாட்டை முழுமையான பிரிவினைவாதத்திற்கு தள்ளும் செயற்பாடாகும்.