08.04.2009.
“புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கும் வேலை இடம்பெறுகிறது. புதுவருடம் பிறந்து குயில் கூவும் வேளையில் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த செய்தி வெளி வரும். ஆனாலும் இறுதிக் கட்டத்திலுள்ள புலிகள் பாரிய அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அதனை எதிர் கொள்ளவும் நாம் தயாராகவேயுள்ளோ’ மென்று பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;
“இந்த நாட்டில் பல தசாப்தங்களாகப் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
புலிகளின் சில நிழல்கள் சிற்சில இடங்களில் தெரிகின்றன. அவற்றை ஒழித்துக் கட்டி நாட்டுக்கு சுபிட்சத்தை ஏற்படுத்துவோம். புதுவருடம் பிறந்து குயில் கூவும் வேளையில் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தி வெளிவரும்.
பஞ்சாயுதத்தை கழுத்தில் கட்ட வேண்டிய குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளைக் கட்டியவர் பிரபாகரன். இவரின் தர்மம் படுகொலைகளை செய்வதுதான்.
புலிகளை வேரோடு அழிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். புலிகளின் சகல சக்திகளும் இழக்கச் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் கானல் நீரைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். பெரிய புலியின் குட்டி கூட காயப்பட்டுள்ளது.
புலிகள் தற்போது பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மறைந்திருந்து படையினர் மீது தாக்குகின்றனர். இது சர்வதேச யுத்த சட்டங்களை மீறிய செயலாகும்.
எமது படையினர் மனித நேயத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றனர். தாய் நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்கின்றனர்.
புலிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றனர். அவர்கள் இறுதி நேரத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபடலாம். ஆனாலும், நாம் அவற்றை எதிர் கொள்ளக் கூடிய நிலையில் எதற்கும் தயாராகவேயுள்ளோம்.
தமது பயங்கரவாத நடவடிக்கைகளை விட பிரசார நடவடிக்கைகளையே புலிகள் தற்போது வேகமாக முன்னெடுத்துள்ளனர். இந்தப் பொய்ப் பிரசாரங்களுக்கு பதிலளிக்கக் கூடிய விதத்தில் நாமும் செயற்பட வேண்டும்.
புலிகளுக்கான பிரசாரச் சக்திகளை சிலர் பெற்றுக் கொடுக்கின்றனர். இது துரதிர்ஷ்ட வசமானது. இலங்கையில் தமிழர் வேரோடு அழிக்கப்படுவதாக பிரசாரம் செய்கின்றனர். இந்த நாட்டில் எங்கே அப்படி நடை பெறுகின்றது? இது ஒரு நாட்டின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.
வடக்கிலுள்ள மக்களுக்கு உணவைக் கூட கொடுக்க விடாது புலிகள் தான் தடுக்கின்றனர். உணவுக்கப்பல்களை தாக்குகின்றனர். இப்படிப்பட்ட புலிகள் தமிழ் மக்களுக்கு எவ்வாறு விடுதலையை பெற்றுக் கொடுப்பார்கள். இதன் மூலம் பிரபாகரனின் மனதுக்குக் கூட விடுதலை கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பெறும் போது அதனை தடுப்பதற்கு சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. இந்த அமைப்புகளுக்கு புலி ஆதரவாளர்கள் அனுசரணை வழங்குகின்றனர்.
இலங்கை அரசு மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்க முயற்சிக்கப்பட்ட போதும் அந்த நேரத்தில் எம்மோடு நின்ற ரஷ்யா, சீன நாடுகளுக்கு நாம் மரியாதை செலுத்துகின்றோம்.
யுத்தம் நடைபெற்றாலும் நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்வது அவசியம். 3 தசாப்தங்களாக பின்னோக்கிச் சென்ற அபிவிருத்தியை 2,3 மடங்கு முன்னோக்கிச் செல்ல வைக்க வேண்டியது அவசியமாகும்.
எமது நாட்டின் அபிவிருத்திக்கு மற்றயோரின் உதவி தேவை. எனவே, அதற்குத் தடையாக இருக்காதீர்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நாட்டை முன்னோக்கிக் கொண்டு சொல்ல அனைவரும் ஒத்துழையுங்கள்.’