19.12.2008.
யுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் இந்த நேரத்தில் அரசு யுத்தத்தை நிறுத்துமானால் அதற்கு எதிராக சகல மக்களையும் ஒன்று திரட்டி போராடி ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்துபேசிய லால்காந்த எம்.பி. இன்று படையினர் வடக்கில் தீரத்துடன் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிகின்றனர். வெற்றிகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முயன்று வருகின்றது.
விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போடுமாறு அரசு கூறினாலும் அவர்களை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்போது தான் யுத்தம் உண்மையான வெற்றியை அடையும்.
இன்று நாட்டின் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் முடியாது. நாட்டை சீரான பாதையில் இட்டுச் செல்லவும் முடியாது. மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே நாட்டை கட்டி எழுப்ப முடியும்.
நாட்டின் சொத்துகளையும் வளங்களையும் கொள்ளையடிப்பவர்களை எவ்வாறு தேசப்பற்றுள்ளவர்கள் என்று கூறமுடியும். அதிகாரப் பரவலாக்கல் பற்றியும் பேசுகின்றனர். எக்காரணம் கொண்டும் அதனைச் செய்யக் கூடாது அதனை நாம் எதிர்க்கின்றோம்.
இந்த நாட்டின் அனைத்து முடிவுகளையும் தீர்மானங்களையும் மகிந்தவும் அவரது இரு சகோதரர்களுமே எடுத்து வருகின்றனர். ஆனால், மக்களுக்கு அமைச்சரவை எடுத்த முடிவு என்று கூறப்படுகிறது. இப்போது இருப்பது எல்லாம் சகோதரக் கம்பனியே. அதேபோல முன்பும் சந்திரிகா ஆட்சியிலும் பலர் முடிவுகளை எடுத்திருந்தனர்.
ரணிலின் ஆட்சியிலும் இதே மாதிரி அவரது நண்பர்கள் சேர்ந்தே முடுவுகளை எடுப்பார்கள். அவரது புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 10,600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது.
இன்றைய ஆட்சியில் ஊழல்கள், மோசடிகள் அதிகரித்துள்ளன. ஆனால், அபிவிருத்தி யுத்தம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாண்டு தேர்தல் வருடமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலின் பின்னர் திடீர் பொதுத் தேர்தலும் வரலாம். அதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகின்றன.
இந்த நாட்டின் பிரிவினை வாதத்தை அரசாங்கத்தாலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியாலோ தீர்க்க முடியாது. மக்கள் விடுதலை முன்னணியாலேயே தீர்க்க முடியும்.