விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு வழங்கிய இந்தியாவுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் த வீக் என்ற ஆங்கில வார இதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“இந்தியாவின் யுத்தத்தை நான் முன்னெடுத்தேன். இந்தியா என்ன நினைக்கின்றதோ அதைத்தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமல்ல” எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இலங்கைக்கு உதவிய இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றிதெரிவித்துள்ளார்.
போரில் தம்முடைய வெற்றியும் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் தலைவி சோனியா காந்தியின் வெற்றியும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டன. இலங்கை போரின் போது இந்தியா வழங்கிய ஆதரவு மிகவும் முக்கியமானது.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இந்தத் தீர்வு இந்திய இலங்கை அரசியல் ஒப்பந்தப்படி அரசியலமைப்பின் கீழான 13ஆவது திருத்தச் சட்டத்தின் படி அமையும்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் மறுவாழ்வு பணிகளில் இலங்கை இராணுவம் ஈடுபடும். இலங்கையில் அமைதி சூழல் நிலவுவதால் அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்திய தொழிலதிபர்கள் புதிய தொழில்களை ஆரம்பிக்க முன்வரவேண்டும்.