விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்த பின்னரும் சரணடைந்த பின்னரும் கொலைசெய்துள்ள இலங்கை அரசு எஞ்சியிருப்பவர்களுடனான தொடர்புகளை முற்றாகத் வெளியுலகிலிருந்து துண்டித்துள்ளது.
காலி பூசா தடுப்பு முகாமில் இன்று நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் செய்தி சேகரிக்கச் சென்ற பீ.பீ.சி. செய்தியாளர் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் பாதுகாப்புத் தரப்பினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பூசா அமர்வின் போது ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் விடுத்திருந்த அறிவித்தலுக்கேற்ப, அதன் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லையிடம் ஊடகவியலாளர்கள் பலர் தொடர்பு கொண்டு அனுமதியைப் பெற்றிருந்தனர்.
அதன் பிரகாரம் இன்று காலை சுமார் பத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பூசா முகாமைச் சென்றடைந்திருந்ததுடன், ஆரம்பத்தில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமாவதற்கு சற்று முன் ஊடகவியலாளர்களிடம் வந்த பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி அவர்களுக்கு செய்தி சேகரிக்க இடமளிக்க முடியாதென அறிவித்தனர். ஊடகவியலாளர்கள் அங்கு வந்து அதற்குள் இரண்டு மணி நேரங்கள் மட்டில் கழிந்து போயிருந்தது.