தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று பேங்கொக்கில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மதியமளவில் மலேசியாவில் வைத்து கே பி உத்தியோகப்பற்றற்ற முறையில் கைது செய்யப்பட்டதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது. இக்கைது இலங்கைப் புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலிலேயே இடம்பெற்றதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. ஆனால் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் கைதிகளைப் பரிமாறும் உடன்படிக்கை இல்லாததால் அவர் தாய்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டு பாங்கொக் விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் இச்செய்தியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன ஊர்ஜிதம் செய்துள்லார்.
இலங்கையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் கொலைகளுடன் தொடர்புள்ள கே. பி. சர்வதேச மட்டத்தில் தேடப்பட்டு வந்தவர். ‘இன்டர்போல்’ என்று அழைக்கப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடமாடியவரெனத் தெரியவந்துள்ளது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே. பி. கைது செய்யப்பட்டார் என பாங்கொக் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.