23.12.2008.
கடுமையான மனித உரிமை மீறல் புகார்களுக்கு உள்ளாகியுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேறிவரும் தமிழ் சிவிலியன்களை தடுப்புக்காவலில் வைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களுக்குள் செயற்படுவதற்கு உதவி நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதியளிக்க வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
போர் காரணமாக அந்த பகுதியில் சுமார் மூன்று லட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளார்கள்.
அங்கு செயற்பட்டுவந்த ஐ.நா மன்றம் உள்ளிட்ட மற்ற பல தொண்டு நிறுவன பணியாளர்களை அவர்களின் பாதுகாப்பு காரணங்களை காட்டி அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. அவர்களின் பாதுக்கப்புக்கு தம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அரசாங்கம் கூறியிருந்தது.
கடந்த சில மாதங்களில் இப்படி வந்த சுமார் ஆயிரம் தமிழ் சிவிலியன்களை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை தாம் நன்கு பராமரிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இவர்கள் காலவரையற்ற முறையில் மோசமாக பராமரிக்கப்படும் சிறை போன்ற இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது.