புலிகள் அமைப்பின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவி அவர்களது பேட்டியைப் படித்ததிலிருந்து அவரைச் சந்திக்கவும்,அவரது எழுத்துக்களைத் தேடியெடுத்துப் படிக்கவும் ஆர்வம் மேலோங்குகிறது.இதுவரை ,அவர் நாம் அறியாதயெதையும் பேசவில்லை!கடந்த 30 ஆண்டுகளாகப் புலிகள் குறித்த எமது மதிப்பீட்டை , விமர்சனத்தை அவர் உறுதிப்படுத்துகிறார் -அவ்வளவுதாம்!நாம் பரந்தப்பட்ட மக்களை அண்மித்துப் புலிகள்மீதும்,தமிழ்த் தேசியத்தின் மீதும் வைத்த விமர்சனத்தைப் பலர் கிரகிக்கமுடியாது நம்மைத் துரோகியென எச்சரித்தனர்.ஆனால், நமது கருத்து உண்மையென்று நம் ஆயுட்காலத்திலேயே-நம் கண்முன்னேயே சாத்தியமாவது நமது மாற்றுக் கருத்துக்குக் கிடைத்த வெற்றியே!
இயக்கவாத மாயை தகரும் நமது கருத்தியற் போராட்டமானது மக்களைப் பற்றிக்கொண்டால் சிங்கள இனவாத அரசின் ஓடுக்குமுறை ஜந்திரம் நிச்சம் தகரும்.அதற்கு முன் சிங்கள அரசின் ஆதிக்கம் தகர்ந்தாகவேண்டும்.இது தகராமாற் சிங்கள வன்முறை ஜந்திரத்தின்மீது எவரும் கையை வைக்க முடியாது. இதுள், தமிழ்க்கவியின் கருத்துக்களிலிருந்து சிங்கள அரச ஆதிக்கம் பல் முனைகளில் தனது ஆதிக்கத்தை நிலையாட்டியுள்ளதென்பதும்,அதையே மேலும் விருத்திக்கிட்டுச் செல்லும் போக்கில், இன்றைய புலிகளது “மிச்சசொச்சம்” உதவுகிறார்களென்பதும் புரியத்தக்கதே!இதைக் குறித்துப் கணிப்பிடுவதில் நாம் சரியான வரையறையைச் செய்தாகவேண்டும்.
புலிகளது முன்னாள் பிரமுகர்கள் தற்போது தமிழ் நிலப்பரப்பெங்கும் “கட்டாக்காலி எருமைகளாக” அலைந்து, “இணக்க அரசியல் -இந்தியாவைக் கையாளுதல்”என வகுப்பெடுக்கின்றனர்.இவர்களை அரவணைத்து, இயங்கும் இந்திய -இலங்கைப் புலனாய்வுத்துறையானது இத்தகையவர்களோடு மிக நெருங்கிய நட்புப் பாராட்டுவதிலிருந்து நமது போராட்டம் மேலும் ,மேலெழ முடியாதவரையில் தமிழர்களைக்கொண்டே தமிழர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.இது மிக கொடுமையானவொரு சூழல்!
முள்ளிவாய்க்காலில் புலிகளது “சாண் ஏறிய போராட்டம்,முழஞ் சறுக்கிய சரணடைவிலிருந்து”தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் அராஜக இயக்கங்களின்வழி நமக்குள் வந்து சேர்ந்தன.இதுள் பேச்சுவார்த்தை மூலம்”தமிழீழம்”காணப் பிரபாகரன் மூன்று இலட்சம் மக்களைப் பலியெடுத்து, யுத்தத்தின் மூலம் பேச்சு வார்த்தைக்கு இலங்கையை நிர்ப்பந்தித்ததிலிருந்து நாம் மாபெரும் சமூகக் கிரிமினல் குற்றங்கொண்டவொரு பரப்புரையின் வழியிலான கொலை அரசியலைத் தரிசிக்கின்றோம்.
இது எந்தவிதத்திலும் சிங்களவின ஒடுக்குமுறைக்கெதிரானவொரு பரந்துபட்ட மக்களது போராட்டமல்ல.மாறாக, அந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்த புலிகள் தமிழ்பேசும் மக்களது உயிரைத் துஷ்ப்பிரயோகஞ்செய்து தமது இருப்புக்கானவொரு யுத்த்தால் தாமே அழிந்து போயினர்.இதை அன்று நாம் பரவலாக விவாதித்தபோது புலிகளை ஊதிப் பெருக்கி விவாதித்த “தமிழ் தேசியவாதிகள்”இன்று பெருங் கோடிசுவரர்களாகத் தமிழர்களது உயிர் -உடமை கொண்டு மகிந்தாவோடு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.இவர்களே மேலும் தேசியம் -விடுதலை எனவும் பரப்புரை செய்கின்றனர் தமது ஊடகங்களின்வழி!
இந்தக் கிரிமினல் குற்றஞ் செய்தவர்கள் அனைவரும் இப்போது புலிகளாகவிருந்து சாதரண மக்களாக மாறிவிட்டனராம்.ஆனால், அப்பாவிகள் தமது உறவுகளை மட்டுமல்ல தம் “இடம்- பொருள் – ஆவி ” அனைத்தையும் இழந்து, முடவர்களாக வாழும் போது அவர்களைக் குறித்து இவர்களைக் கிரிமினல் கூண்டில் ஏற்றுவதென்பது சிங்கள அரசின்அடுத்த சதியாட்டத்தை மட்டுப்படுத்துவதென்பதில் சந்தேகமில்லை!இது குறித்துப் பல்வேற பரப்புகளில் விவாதித்தாகவேண்டும்.
இத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலை “நாடுகடந்த தமிழீழ அரசு” என்ற “ஏகாதிபத்தியத்தின் கைக்கூலித் தமிழ் வக்கீலகள்அடங்கியவொரு கூட்டம்” மிகக் கயமையானமுறையில் எமக்குள் திணித்துக் கொண்டிருக்கிறது!இது, இலங்கைத் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது நலன்சார்ந்த மதிப்பீடுகளால் கிரகித்துக் கணித்துக்கொண்டு நம்மீது சவாரி செய்து வருகிறது.குறிப்பாகப் புலத்தில்.
இங்கே, இத்தகைய விமர்சனங்களுடாக மறைக்கப்படும் அரசியலைப் புரிவது அவசியம்.
“இந்தியாவைக் கையாளுதல்”எனும் கருத்தியற் கட்டுமானத்தின்வழி இந்திய அரசியல் விய+கத்தை இலங்கைக்குள் இழுத்துவந்து அதை உலக அரங்கில் நியாயப்படுத்துவதற்குத்தாம்நிலத்தில் பலர் முன்னாள் புலிகளாய் வலம் வருகின்றனர்!
இலங்கையில் இதுவரை ஆயுதப்போராட்டத்தை அப்பாத் தமிழர்கள் -இஸ்லாமியர்கள்மீது திணித்த அந்நிய தேசங்கள்புலிகளை வெறும் ஆயுதக் குறுங் குழுவாக்கி அழித்ததன்பின் இந்தியா, இப்போது அந்தக் குறும் ஆயுத -அராஜகக்குழுவுக்கு நிகரானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிப்பதற்கும் அதையே தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வுக்கானவொரு பெரும் சக்தியாவும் தூக்கி நிறுத்துவதில் இத்தகைய இந்திய லொபிகளை உருவாக்குகிறது.இந்த லொபிகளது குரலேதாம் “இந்தியாவைக் கையாளுதல்,இலங்கை அரசோடு இணக்க அரசியலை” செய்தலென்ற குரலாகும்.
சாரம்சத்தில்..
இலங்கையின் இனப்போராட்டமானது அந்நியத் தலையீட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வரலாறானது காலனித்துவக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பினும் அதை முற்றுமுழுதாக இந்தியச் செல்வாக்குக்குள் இறுகத் திணிப்பதற்கு இந்த லொபிகள்அவசியமாகிறார்கள்.
முள்ளி வாய்க்காலின் தோல்விகண்ட புலிகள், அரசியலைக் காவு கொடுத்து இன்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.எப்போது சகோரா இயக்கங்களை அழித்துக் கொன்றார்களோ அன்றே அவர்கள் அரசியல் மக்குகள்.இதிலிருந்து மீண்டு ஒரு புது யுகம் தமிழ்பேசும் மக்களுக்கு உதயமாவதற்குப் புலிகள் தம்மை அழித்தே வழியைத் திறந்துவிட்டிருப்பினும் அந்த வழியெங்கும் அந்நிய உளவுப்படைகளும்,முன்னாள் புலிகளது அந்நிய எடுபிடிகளுமாகத் தமிழ் மண் முற்றுமுழுதான துரோகத்தால் நிறைந்திருக்கிறது.இதைத்தமிழ்கவியின் பேட்டியிலிருந்து மிக நுணுக்கமாக இனங் காண முடியும்!
ப.வி.ஸ்ரீரங்கன் 30.05.2014
தமிழ்க் கவியின் நேர்காணலின் சில பகுதிகள்..
புலிகளது போராட்டம் வெற்றி பெறும் என்ற உங்களது நம்பிக்கை எப்போது தகர்ந்தது?
புலிகள் போரிட்டு நாட்டைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதை நான் இயக்கத்தில் இணைவதற்கு முன்பே என்னால் உணர முடிந்தது. தலைவரே ஒரு தடவை “நாம் இப்படித் தாக்குதல்களைச் செய்து நாட்டை அடையமுடியாது. அது ஒரு பேச்சுவார்த்தையில் தான் முடியும். நமது தாக்குதல்கள் மூலம் ஒரு நெருக்கடியை அரசாங்கத்துக்குக் கொடுத்து அதைப் பேச்சுவார்த்தைக்கு இழுப்பதே எனது நோக்கம்” என்றார்.
நீங்களே நினைத்துப் பாருங்கள்.. ஒட்டுமொத்தத் தமிழர்களில் ஈழத்தில் இருந்தவர்கள் அனைவரும் போரிட முன்வரவில்லை. போருக்கான நிதியைக்கூடப் பலவந்தமாகத்தான் திரட்ட முடிந்தது. போராளிகள் பலரது உறவினர்கள் அநேகமாக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பொருளாதார வசதியற்றவர்களே நாட்டில் இருந்தனர். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். வல்வெட்டியில் என் சகோதரி இருந்தாள். அவளிற்கு இளந்தாரிப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு மிக அருகே திலீபன் நினைவு உண்ணாவிரதப் பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கே மத்தியானப் பொழுதுக்கான பேச்சாளராக நான் போயிருந்தேன். நேரமிருந்ததால் என் சகோதரி வீட்டுக்கும் போனேன். அங்கே பிள்ளைகள் விளையாடப் புறப்பட்டார்கள். “ஏன் இங்கே திலீபன் நிகழ்வு நடக்குதே, இவங்கள் போக மாட்டாங்களா ?” என்று கேட்டேன். “சீக்.. அதுக்க நாலு பதினெட்டுச் சாதியும் வந்திருக்கும் இவங்கள் போமாட்டாங்கள்” என்றாள் சகோதரி. அந்தக் கிராமத்தின் மேட்டுக்குடிகள் எவரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. என்றாலும் நடந்த போரைக் காரணம் சொல்லி -பயன்படுத்தி – அவர்கள் இன்று வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். ஆக ஏராளமான மக்கள் புலிகளின் ஆட்சியை விரும்பவில்லை என்பது கண்கூடு.
‘சூரியக்கதிர்’ நடவடிக்கையின்போது நான் மானிப்பாயில் நின்றிருந்தேன். மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளிலிருந்த மக்கள் புலிகளோடு வெளியேற முனையவில்லை. அவர்களது விருப்பத்துக்கு மாறாகவே தென்மராட்சி நோக்கித் திருப்பி விடப்பட்டனர். சில யாழ்ப்பாண வர்த்தகர்கள் தமது கடைப் பொருட்களை சுழிபுரம், சண்டிலிப்பாய் நோக்கி நகர்த்தினர். இருந்துமென்ன அவர்கள் அனைவரும் வலிந்து தென்மராட்சிக்கு இயக்கத்தால் திருப்பிவிடப்பட்டனர். அப்போது, புலிகளுக்கு மக்கள் அனைவரும் தம்முடன் வந்து விட்டார்கள் என்ற பிரச்சாரத்துக்கு அது உதவினாலும் தென்மராட்சியிலிருந்து மக்கள் வடமராட்சி நோக்கி நகர்ந்த போது நிலைமை மாற்றமடைந்தது. இலவசப் படகுச் சேவை வழங்கி, மக்களை வன்னிக்கு நகர்த்த பெரும் பரப்புரை செய்யவேண்டியதாயிற்று. போராளிக் குடும்பங்களும் ஆதரவாளர்களும் தாமாக முன்வந்து வன்னிக்கு நகர்ந்தனர். இப்படியே வெளியே போய்விடலாம் என்ற குறிக்கோளுடன் நகர்ந்தவர்களும் உண்டு. ஏதோ ஒரு இக்கட்டு, இராணுவத்தைப் பற்றிய பயம் இவைதான் புலிகளைச் சகித்துக்கொண்டிருக்க வைத்தது. மேலும் தேசப்பற்றும் யார் குத்தியாவது அரிசியாக வேண்டுமென்ற நப்பாசையும் புலிகள்மீது மக்கள் நம்பிக்கை வைக்கக் காரணங்களாக அமைந்தன.
ஆயினும் வெளியே தெரிந்த புலிகளின் பிரமாண்ட பிம்பம்போல உள்ளே நிலைமைகள் இருக்கவில்லை. இவர்கள் வெல்லப்போவதில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் நிலையே இருந்தது. தலைவருடன் முன்னரங்கக் காவல் நிலைகளில் சாவை எதிர்பார்த்து எதிரிக்காகக் காத்து நின்றவர்களை மட்டுமே போராளிகள் எனக் கருத முடிந்தது. அதேவேளையில் இயக்கத்தின் உள்ளே அதிகாரப்போட்டி, பொறாமை ,தகடுவைத்தல் (கோள்சொல்லுதல்), காத்து இறக்குதல் (பதவி பறிப்பது), அதிகாரமுள்ளவருக்கு யாரையாவது பிடிக்காது போனால் பிடிக்காதவரை முன்னரங்கக் காவல் நிலைக்கு அனுப்புவது எனப் பல சீர்கேடுகள் நிறைந்து கிடந்தன.
சக போராளிகளைக் குறித்துக் கேலி பேசினார்கள். அழகிய, படித்த, வேலைபார்க்கும் மனைவியையே தேடினார்கள். போராளிகள் சாதி பார்க்கக் கூடாது என்பதெல்லாம் போதனைக்கு மட்டுமே. கல்யாணத்திற்குத் தாலியும் கூறையும் வாங்கிய பின்பும் சாதியால் தடைப்பட்ட போராளிகளின் திருமணங்கள் உண்டு. இவற்றுக்கெல்லாம் இயக்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. “நான் சாதி பாக்கேல்ல …அதுக்காக ஆகவும் அடியில பாத்திடாதையுங்கோ” என்றவர்களும் முப்பத்தைந்து வயது கடந்தும் பதினெட்டு வயதுப் பெண் தேடியவர்களும் இயக்கத்தின் பெரும் தலைகளே. இவர்களை வைத்துக்கொண்டா சமதர்ம தமிழீழம் உருவாக்க முடியும்! தமக்கெனச் சொத்துச் சேர்க்கவும் தனிப்பட்ட வாழ்க்கையை வளப்படுத்தவும் அலைந்தோர் அதிகம்.
இவர்களிடையே அப்பழுக்கற்ற தியாக சிந்தையுடன் தமது சொத்துகளையும் இயக்கத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டு, திருமணமும் செய்யாமல் வீரச்சாவடைந்தவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக எல்லாம் தேசப்பற்றில் நடக்கவுமில்லை. தேசப்பற்றில்லாமல் நடக்கவுமில்லை.
1991-ல் விடுதலைப் புலிகள் வசம் ஒரு பெரு நிலப்பரப்பு வந்தது எப்படி? போரிட்டு வென்றதா என்ன! இந்திய இராணுவத்தின் பிடி விலகியபோது பிரேமதாஸவுடனான சங்காத்தத்தில் கிடைத்த பரிசு அது. இக்காலப் பகுதியில் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இவர்களுடைய கைகளில் போடப்பட்டனர். அழிக்க முடியாத கறை படிந்த வரலாற்றைப் புலிகள் உருவாக்கினர். இவர்கள் நமது பொது எதிரியைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. தமது சொந்த இனத்தை அழிப்பதில் மும்முரமாக இயங்கினர். அது சிங்கள அரசை மகிழ்விக்கவும் இருந்திருக்கலாம். இந்தியப் படையின் துணையுடன் பலவந்தமாகப் பிடித்துச்செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமன்னிப்புத் தருவோம் என்ற வாக்குறுதியுடன் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்களும் கொல்லப்பட்டனர். மற்றைய இயக்கங்கள் நாட்டை விட்டோடிவிட அந்த இயக்கங்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானவர்கள் ஆண்கள் – பெண்கள் என்ற பேதங்களின்றிப் புலிகளால் கொல்லப்பட்டனர்.
இதெல்லாம் கடந்து இவர்கள் போரிட்டு வென்ற சிறு நிலங்களைக்கூட வெகு நாட்களுக்கு இவர்களால் தக்க வைக்க முடியவில்லை. நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணத்தை வெறும் நாற்பதாயிரம் இராணுவத்தினரே தக்க வைத்திருந்தனர். பின் எப்படி இவர்கள் வெல்வார்கள் என நம்பலாம். நான் ஐம்பத்தைந்து வருடங்களாக நிகழ்வுகளை அலசிக்கொண்டிருப்பவள். நான் சிறுபிள்ளையில்லையே. ஒரு கட்டத்துக்குப்பின் பல முடிவுகளைத் தப்புத் தப்பாகவே புலிகள் எடுத்தனர்.”அதெல்லாம் இறுதி முடிவு தலைவர்தான்” என்பார்கள். ஆனால் அவர் எந்த முடிவையும் தனியாக எடுப்பதில்லை என்பது பலருக்கும் தெரியும். அவருக்கே இந்த நம்பிக்கை இல்லை. நடந்த போராட்டம் எங்கள் இருப்புக்காக மட்டுமே.
இறுதி யுத்தத்தின் போக்கு மாற்றப்படலாம் , அமெரிக்கக் கப்பல் வரும், இந்தியாவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் போரில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றெல்லாம் அப்போது வன்னியில் நிலவிய நம்பிக்கைகளை நீங்களும் கொண்டிருந்தீர்களா?
இல்லை! அது ரொம்ப சின்ன பிள்ளைத்தனமான நம்பிக்கை. அது எப்படிங்க, அமெரிக்கா தனக்கு இம்மியளவும் நன்மை பெற முடியாத தமிழீழ மண்ணுக்காக மூச்சுவிடும். இந்தியாவில் உள்ள தமிழர்களே எத்தனையோ விதமாக ஒடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் நகரங்கள் கேரள, கர்னாடக , வடநாட்டார்களின் முதலீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன. தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும் தமிழக மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமா என்ன! போதாததற்கு மீனவர் பிரச்சினை வேறு. ‘தன்ரை குண்டி அம்மணமாம், தங்கச்சி குண்டிக்கு பச்சைவடம் கேக்குதாம்’ என்றொரு பழமொழி உண்டு. இலங்கைத் தமிழருக்காக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஒற்றைத் துரும்புகூட அனுதாபத்தோடு அசைவதில்லை. ஈழத் தமிழர்களான நாங்கள் அவர்களுக்கு வர்த்தகமும் அரசியலும் கலையும் வளர்க்க உதவுகிறோம். அவ்வளவுதான். நீண்டகாலமாக தமிழகத்து அகதி முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களது நிலை பற்றி நான் அறிவேன். அங்கிருந்து கள்ளதோணிகளில் மீண்டும் இலங்கைக்குள் வந்த மக்களை நான் அப்போதே சந்தித்துப் பேசியிருக்கிறேன். சில ஆக்கங்களைக் கூட நான் எழுதினேன். ஆனால் எழுதியதைப் பிரசுரிக்கக் கொடுத்தபோது “நாங்கள் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம், இந்த நிலையில் இதைப் பிரசுரிக்கக் கூடது” என மறுத்துவிட்டனர். இலவு காத்த கிளியாக நான் இல்லை. எனக்கு அந்த நம்பிக்கையிருக்கவில்லை.
புலிகள், ஆயுதங்களை மவுனிப்பதாகச் சொல்லி தங்களது சரணடைவை அறிவித்த போது உங்களது மனநிலை எப்படியிருந்தது. போராளிகளது கூட்டு இலட்சியம் தகர்ந்த தருணமல்லவா?
புலிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்கால் கடந்துதான் செய்யப்பட்டன. திரு.பா.நடேசனிடமோ, புலித்தேவனிடமோ மீதமுள்ள புலிகளின் தொகையோ,பட்டியலோ இல்லை. அப்படியொன்றைத் தயாரிக்க அவர்கள் முனைந்தாலும் அது உயிருடன் இருந்த முக்கியமானவர்களை மட்டுமே அடக்கியிருக்கும். ‘புலிகள் அனைவரும் வந்து அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்’ என ஒலிபெருக்கியில் அறிவித்தாலும் அப்படியான அலுவலகம் எதுவுமிருக்கவில்லை. புலிகள் ஒன்றுகூடவும் முடியவில்லை.
நான் பிள்ளைகளுடன் வட்டுவாகல் வந்தேன். அவர்களுடனேயே ஓமந்தை வந்தேன். ஓமந்தையில் ஆயிரக்கணக்கானவர்கள் அறிவித்தல் மூலம் பிரிக்கப்பட்டனர். ‘இயக்க உறுப்பினர்கள் – ஒருநாள் இருந்தவரோ பல ஆண்டுகள் இருந்தவரோ – பதிவு செய்துவிட்டுப் போங்கள். யாராவது பதிவு செய்யாமல் மக்களுடன் சென்று அங்கிருந்து நாம் பிடித்தால் நீங்கள் கைதி. நீங்களாகப் பதிவு செய்தால் பொதுமன்னிப்பு வழங்குவோம்’ என அறிவித்தனர். என்னை நன்கு தெரிந்த போராளிகளே இராணுவத் தரப்பில் நின்று இதனை அறிவித்தனர். அவர்களில் ஒருவன் என்னிடம் வந்து “ஆரோடை வந்தனீங்கள் அன்ரி?” என்றான். “நான் பிள்ளையோடை வந்தனான்” என்றேன்.போராளிகள் பதிவுக்காக ஒரு புறமும் பொதுமக்கள் பதிவுக்காக ஒரு புறமுமிருந்தது. இயக்கத்தில் சம்பளத்துக்கு வேலை செய்தோருக்கும் போராளிக் குடும்பங்களிற்கும் பதிவு செய்யத் தனிப் பகுதிகள். என்னை அழைத்தவனுடைய பெயர் சுரேஷ். பழைய போராளி. என்னையும் என்னுடன் இருந்த காயமடைந்த போராளிகளையும் பதிவு செய்யும் இடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனான். எனக்கு முன்பே ஏராளமான போராளிகள் அங்கிருந்தனர்.நாம் வாயால் சொன்ன விபரங்களை எழுதினார்கள். நிழற்படங்கள் எடுத்தனர். பின்னர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பினர். வேறெந்தப் பிரச்சினையுமில்லை. மனநிலை வெறுமையாக இருந்தது. அவ்வளவுதான்.
‘ஊழிக்காலம்‘ நாவலுக்கு இலங்கையில் எவ்வகையான வரவேற்பு இருக்கிறது?
‘ஊழிக்காலம்’ இங்கு வெளியிடப்படவில்லை. மிகச் சில நண்பர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவந்தனர். வன்னியில் சம்பவத்துள் இருந்து வந்தவர்கள் நால்வர் படித்துவிட்டு, ” ஒவ்வொரு சம்பவத்துக்கும் பிறகு இதுதான் வருமென்று தெரிகிறதே, நடந்தது எதையும் தவறவிடாமல் எழுதி இருக்கிறீங்க.. மற்றும்படி ‘திறில்’ இல்லை” என்றனர். சம்பவத்தில் சம்பந்தப்படாத ஒருவர் ஒரு பிரதியை இரவல் வாங்கிக்கொண்டு சென்றார். அதை நான்கு நண்பர்கள் படித்தனர். பன்னிரெண்டு கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்து மிதிவண்டியில் வந்து பாராட்டினார்கள். கட்டாயம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமை என்றார்கள். என்னை கண்டதிலேயே பரவசப்பட்டார்கள். சிங்கள அன்பர் ஒருவர் வாங்கிச் சென்றார். தான் மிகவும் ஆறுதலாக வாசித்ததாகவும் தாங்கமுடியவில்லை என்றும் சொன்னார். இதை மொழிபெயர்க்க கொடுக்கலாமா என்றும் கேட்டார். என்னை முன்னமே தெரிந்தவர்தான். சாதாரணமாகப் பழகியவர். இப்போது மிகுந்த மரியாதை கொடுக்கிறார். எனக்கு அது இடைஞ்சலாயிருக்கிறது என்றாலும் கேட்பதாயில்லை. அவர் ஒரு புலனாய்வாளர் கூட. நான் ஒரு பத்துப் புத்தகங்கள்தான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்தேன். வெளியிடும் அல்லது அறிமுகம் செய்யும் அளவுக்கு என்னிடம் பணபலம் இல்லை.
இராணுவக் கட்டுபாட்டுப் பகுதிக்கு தப்பி செல்ல முயன்ற மக்களை புலிகள் சுட்டுக் கொன்றது, புலிகள் பலவந்தமாக சிறுவர்களை இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றது குறித்தெல்லாம் நீங்கள் விபரமாக எழுதியிருப்பது தமிழ்த் தேசியத் தரப்புகளிடம் உங்களுக்கு கடுமையான விமர்சனத்தைப் பெற்றுத் தந்திருக்குமல்லவா?
உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது. மூன்றரை இலட்சம் மக்களைச் சாட்சியாக வைத்து நடந்தவைகளை நான் எழுதுகிறேன். அதில் பொய்யாக ஒரு சொல் எழுத முடியுமா? அல்லது நடந்தவற்றைத் திரித்துத்தான் எழுத முடியுமா? இன்னுமொரு காலம் இதுபோன்ற போராட்டம் வரும். அந்தக் காலத்தில் எதுவெல்லாம் மக்களிடமிருந்து புலிகளைப் பிரித்தது என்பதை வருங்காலச் சந்ததி அறிய வேண்டும் என நான் நினைத்தேன். ‘மக்கள் கடல் போன்றவர்கள், அதில் வாழும் மீன்கள் போன்றவர்கள் புலிகள்’ எனத் தலைவர் வாக்கு ஒன்றிருக்கிறது. இரவல்தான், இது சீன விடுதலைப் போர்க் காலத்தே மாவோ சொன்னது. பிறகு எப்படி இந்தக் கடல் மாறியது. சந்திக்குச் சந்தி இராணுவம் நின்றபோது பத்துப் பதினைந்து இளைஞர்களோடு தொடங்கின இயக்கம்தானே. அப்போது காப்பாற்றிய மக்கள் ஏன் இப்போது இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார்கள்? இதை நான் எனது நாவலில் விசாரணை செய்கின்றேன்.
நமது வெற்றிகளையே கொண்டாடிப் பழகியவர்கள், தமது தவறுகளைச் சுட்டி காட்டியவர்களை இயக்கத்தை விட்டே துரத்தியவர்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிறீர்களா? என்னுடைய மனநினையில் இன்னும் ஏராளமான போராளிகள் இருக்கின்றனர் என்பதும், அவர்கள் இதைத் தம்மால் செய்ய முடியவில்லை என அங்கலாய்த்தனர் என்பதும் உண்மை. எதிர்ப்பு என் வீட்டிலேயே கிளம்பியது.”இயக்கத்தில் இருந்த நீ இதை எப்படி எழுதலாம்” என்று கதையில் நாயகனாய் வரும் என் பேரன் தினேஸ் கேட்டான். பழைய தளபதிகளின் மனைவிகள் கேட்டனர். இவர்களுக்கு எல்லாம் நான் அளித்த பதில்: “நான் இயக்கமாக இருந்துதான் எழுதுகிறேன்.”
இன்னமும் எனக்கு எனது சந்ததி சுதந்திரமாக வாழவேண்டும் என்ற நப்பாசை உண்டு. காரணமேயில்லாமல் இதை எழுதவில்லை. இது என்னுடைய கடமை. நான் தமிழ்த் தேசியத்தை நேசித்த -நேசிக்கும்- நேசிக்கவுள்ள எழுத்தாளர். எழுத்தும் பேச்சும் எனக்குக் கைவரப் பெற்றதே மொழியையும் நாட்டையும் உணரவும் உணர்த்தவும்தான். எதிர்ப்பு இல்லாமல் எதுவுமில்லைத் தானே.
நீங்கள் நாவலில், புலிகள் இழைத்ததாகக் குறிப்பிடும் கொடுமைகளை அவர்கள் முன்பும் இழைத்தனர். கட்டாய ஆள்சேர்ப்பு வன்னியில் 2009-க்கு முன்னும் நடந்தது. அப்போது நீங்கள் அமைப்பில்தானே இருந்தீர்கள்?
ஒரு குடிகாரத் தந்தை தன் பெண்ணை இன்னொரு குடிகாரனுக்குக் கட்டிவைத்து விட்டான். இங்கேயும் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியைத் துன்புறுத்துகிறான், அடிக்கிறான். ஆனாலும் உடை, உணவு என்பவற்றையும் அன்பையும் கொடுக்கவே செய்கிறான். அவள் அடிவாங்கி அழும்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் தாங்க முடியாமல் ‘நீ உன் அம்மா வீட்டுக்குப் போய்விடு’ என்கிறார்கள். அம்மா வீடு இவளுக்கு இதை விடப் பெரிய கொலைக்களம். எப்படிப் போவாள்? வேறெங்காவது கடல் கடந்தும் போக முடியாது. முழுதாக ஆயிரம் ரூபாவைக்கூட கண்ணால் பார்க்க முடியாதவள் இலட்சக்கணக்கில் கொடுக்க எங்கே போவது? போதாததற்கு பிள்ளைகள் வேறு. அந்தப் பெண் ஆயுள் தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.
நான் அமைப்பில் விரும்பித்தான் சேர்ந்தேன். மறுபடியும் கழற்றிக்கொள்ள முடியாமல் நன்கு மாட்டிக்கொண்டேன். புலிகளின் மட்டு – அம்பாறை பகுதிதான் முதலில் கட்டாய ஆட்சேர்ப்பை 2003-2004 காலப்பகுதியில் செய்தது. வன்னியில் 2006-ன் பிற்பகுதியில் வீட்டுக்கொருவர் கட்டாயம் எனவும், இயக்கத்திலிருந்து விலகியவர்கள் கட்டாயமாக மீண்டும் இணைக்கப்பட்டதும் நடந்தது. இயக்கத்திலிருந்து விலகக் கடிதம் கொடுத்து, தண்டனைக் காலம் இரண்டு வருடங்கள் முடிந்து வீட்டுக்குப் போனவர்கள் வர விரும்பவில்லை. அவர்களைக் காவற்துறையினர் வேட்டையாடிப் பிடித்தனர். அகப்பட்டவர்கள் கைதிகள் போல் ட்ரக்குகளில் ஏற்றப்பட்டு மணலாற்று காட்டுப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீதியில் இந்த ட்ரக்குகளில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் கொண்டு செல்லப்படும்போது அழுதுகொண்டே செல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் அழியும். போனவர்கள் போராட வேண்டுமல்லவா.. அவர்களை ஆற்றுப்படுத்த, பேசிச் சரிக்கட்ட என்னை அழைத்துப் போனார்கள். ‘இக்கட்டான சூழல், பயிற்சி எடுத்தவர்கள் கூடிக் கைகொடுத்தால் தானே வெல்ல முடியும்’ என்று பலவாறு பேசினாலும் அவர்கள் என்னைக் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. பின்பு அவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டு பலர் தப்பியோடினார்கள். பலர் கொல்லப்பட்டனர். புதியவர்களோடு பழைய போராளிகள் ஒட்டவேயில்லை. நாங்கள் இதை மூன்று வகையாகக் கூறுவோம். ஒன்று முதல் ஒன்பதாம் பயிற்சி அணிவரை ‘கீழ்ப்படிவு – உத்தரவிற்குப் பணிதல்’குழு. பத்து முதல் பதினெட்டாவது பயிற்சி அணிவரை ‘நீ சொல்லு நான் விரும்பினால் செய்வன்’ குழு. பதினெட்டாவது பயிற்சி அணிக்கு மேல் ‘நீ யார் சொல்லுறது? நான் யார் கேட்கிறது?’ குழு.
2006 – 2007ல் இந்தப் பிரச்சாரப் பிரிவில் என்னையும் ஒரு அணியில் போட்டிருந்தாலும் நான் போகவில்லை. தமிழ்ச்செல்வன் கூப்பிட்டுக் கேட்டார். “அதுதான் கட்டாயமாக்கிற்றீங்களே.. போய்ப் பிடிக்கிற இடங்களில அடியும் நடக்குது. நம்மால முடியாது சாமி. அப்பிடிப் போகத்தான் வேணும் எண்டால் எழுதவோ நிகழ்ச்சிகள் செய்யவோ முடியாது” என்றேன். அப்போது என்னை விட்டு விட்டார்கள். மீண்டும் ஒரு தடவை அப்படி என்னைக் கேட்டபோது “நீங்கள் வேண்டாம் அன்ரி நாங்களே செய்கிறோம்” என்று குழுத் தலைவனே மறுத்துவிட்டான். தலைவருடைய கட்டளைக்கு மாறாக நடக்கத் தொடங்கியிருந்தனர். நான் நின்றால் நடக்கும் அநீதிகள் உடனுக்குடன் நேரடி ஒலிபரப்பாகிவிடும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.
ஒரு வீட்டில் உழைக்கும் பிள்ளை அதுதான் என்றிருந்தால் எடுக்க வேண்டாம், ஒரே பிள்ளை வேண்டாம், வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை மற்றது எல்லாம் பெண்பிள்ளை என்றால் வேண்டாம், வீட்டுக்கு ஒரே பெண் அடுத்ததெல்லாம் ஆண் என்றால் வேண்டாம், பதினாறு வயது நிரம்பியிருக்க வேண்டும், போராளி – மாவீரர் குடும்பங்களில் பிடிக்க வேண்டாம் என்றெல்லாம் கட்டளைகள் இருந்தன. இதை யார் கடைப்பிடித்தார்கள்.. எவருமில்லை! நாங்கள் மதிவதனி , திருமதிகள் சிலர் கூடிப் பேசி வேதனைப்படத்தான் முடிந்தது. ஒரு போராளி புதிய போராளியாக இணைந்த பெண்ணொருவரை பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்றும் பிடிபட்டது. எனினும் அவன் சிறு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டான். காரணம், பிள்ளை பிடியில் அவனை மிஞ்ச ஆளில்லை என்பதாகும். ஈற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் அவனைக் கொன்றனர். அவனுக்கு லெப்.கேணல் விருது கூட வழங்கப்பட்டது. இப்படி நிறையச் சம்பவங்களுண்டு.
மக்களை விடத் தாங்கள் உயர்வானவர்கள், மக்களை விடவும் அதிகாரமும் சலுகையும் படைத்தவர்கள் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்ததாகக் கருதுகிறீர்களா?
தமக்கென ஒரு பெரு நிலப்பரப்பு, அதிகாரம், பதவி, வரி வசூலிக்கும் இறை, சொத்துகளைக் கையகப்படுத்தும் அதிகாரம், நீதி வழங்கும் அதிகாரம், காவற்துறை, ஆயுதப்படை எல்லாவற்றையும் கொண்டு தம் மக்களின் வெளியுலகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தி, கடவுச்சீட்டு நடைமுறையைக் கொண்டு வெளிப் பயணங்களையும் கட்டுப்படுத்தி, வர்த்தக மேலாண்மையையும் தமக்குள் வைத்துக்கொண்டு அரச அதிகாரிகளையும் தம் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்த புலிகள் மக்களை விட மேலானவர்கள் தானே. என்னதான் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட காவற்துறை, நீதிமன்றம் என்பவை இருந்தாலும் வனத்துறை தானே கைது செய்து தானே தண்டனை வழங்கியது. பொருண்மிய மேப்பாட்டுத்துறையும் அவ்வாறே. நிர்வாக சேவை, புலனாய்வுத்துறையும் அவ்வாறே. திரைப்பட வெளியீட்டுத்துறையும் அவ்வாறே. இவ்வாறு ஏகப்பட்ட நீதிபதிகளுக்குப் பணிந்து மக்கள் வாழும்போது யார் பெரியவர்?
அது முந்தியொருகாலம்.. மூத்தண்ணர் இருக்குங் காலமொண்டு… சிங்கள இராணுவமும் பொலிசும் இருந்த காலத்தே மக்களே பெரிசு. புலிகள் சோத்துக்கும், பாதுகாப்புக்கும் மக்களை நம்பியிருந்த காலம்.. மக்கள் பெரிசு! வேறு ஏதாவது நல்ல கேள்வியாகப் போடுங்கோ.
இறுதி யுத்தத்தில் புலிகளின் தளபதிகளும் பொறுப்பாளர்களும் தலைமையின் கட்டளையை மீறி நடந்தார்கள் என்கிறீர்கள். தலைமை தனது தளபதிகள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருந்ததா?
உண்மை! 2007-ல் நடந்த பல அராஜகங்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டபோது “யுத்தம் நெருக்கமாக இருக்கும்போது நாம் விசாரணை அது இது என்று போட்டுக் கொண்டிருந்தால் அப்படி அப்படியே போட்டுட்டு போயிடுவாங்க, நான் பொறுத்துத்தான் போக வேண்டும்” என்று தலைவர் கூறினார். வாய் வார்த்தைக்கு ஆதாரம் கேட்காதீர்கள். கூட இருந்த இருவருமே கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் இவர்களிடம் நம்பிக்கையிழந்த தலைவர் ஆனந்தபுரச் சமருக்கு நேரடியாகவே இறங்கிவிட்டார். அவரை மீட்க நடந்த சமரில் தான் பெரிய தளபதிகள் இறந்தனர். இச் சமரில் என் பேத்தியும் நின்றிருந்ததால் என்னிடம் விபரம் சொன்னாள்.
எமது போராட்டத்தின் இயங்கு திசை இனி எதுவாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
புயல் ஓய்ந்த பின் முறிந்த மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். இருக்கும் செடிகளை மீளெழுப்ப வேண்டும் . உடைந்த குளங்களைச் செப்பனிட வேண்டும். புதிய விவசாயிகளுக்கு விதை வேண்டும். இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? மக்கள் உறங்கிவிட்டார்கள் என்று எண்ணக்கூடாது. அவர்கள் பசி மயக்கத்தில் கிடக்கிறார்கள். அவர்கள் எழட்டும், நடக்கட்டும், தமது பாதைகளில் தடைகளை அகற்றவும், தமது வீடுகளிற்குள் அந்நியர் புகாமல் பாதுகாக்கவும், தாம் கைகளை வீசி நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? வன்னியில் இவ்வருடம் தேன் இல்லை. பாலைப்பழம் இல்லை. உடும்பு, முயல், பன்றி எதுவுமில்லை. காடுகளில் விறகு பொறுக்கக் கூட யாரும் போவதில்லை. எமது மக்கள் எங்கள் காடுகளில் காடேறிகள் உலாவுவதாக உணர்கிறார்கள். பேய்களுக்குப் பயந்து பெண்கள் போவதுமில்லை. எப்போது மீட்பர் வருவாரென்று தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். நாங்கள் எழுதலாம். வாசிப்போர் அருகிவிட்டனர். செத்த வீடு, கலியாணவீடு, சமூர்த்திக் கூட்டம் எல்லாயிடமும் உதுதான் கதையாம். பாலனைப் பொலிசு கொண்டு போட்டான் . கள்ள மரம் அரிஞ்சதாம். ‘அவன் பொமிற் எடுத்தவன் தானே’ , ‘பொமிற் மூன்று நாளைக்கு தானாம் அதுக்குள்ளை அரிஞ்சு கூரைக்கு ஏத்திப் போடணுமாம்’. இல்லாட்டி வீட்டிலை கிடந்த மரமும் போச்சு அவனும் கைதி . பெண்டில் கதறுகிறாள் ஒன்றரை இலட்சம் கொடுத்து அழிஞ்சதாம். உள்ள நகையும் போச்சு மரமும் போச்சு. இந்த நிலை நீடிக்கிறது.பல முனைகளிலும். புதிய போராட்டத்திற்கு விதை ஊன்றியாகிவிட்டது. மக்கள் உணரவேண்டும், உணர்த்த வேண்டும்!
உங்களது மேடும் பள்ளமுமான நீண்ட வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்களது இயக்க வாழ்வைப் பெருமிதமாக உணர்கிறீர்களா?
நான் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவள். மனிதனோ மற்றவையோ காரணமில்லாமல் காரியமில்லை. எனது வாழ்க்கை எந்த அசம்பாவிதமுமின்றி இருந்திருந்தால் இந்தப் பேனா என் கையிலிருந்திருக்காது. எனக்குப் பதினான்கு வயதில் கல்யாணம் ஆகாதிருந்திருந்தால் குடும்பச் சுமையை நான் இப்போதும் சுமந்திருப்பேன். இருபத்து நான்கு வயதுக்குள் பிரசவம் முடிந்தது. நாற்பத்து மூன்று வயதில் எந்தக் குடும்பப் பொறுப்பும் என்னிடமில்லை. காட்டாறு போன்ற என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்துப் பார்க்கலாம். எனக்குத் துன்பங்கள் வரும் போதெல்லாம் நான் வருந்தியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். துடித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்திற்குப் பின் நான் அழுததை யாரும் பார்த்திருக்க முடியாது. தியானம் என்னை வழிப்படுத்தியது. வாழ்க்கையில் நான் விரும்பிய அனைத்துமே எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்கு என்னுள்ளேயே எனக்கு உருவம் கொடுத்து முயன்றேன். எனக்கு வெளியே கடவுள் இருப்பதை நான் நம்பவில்லை. ஆனால் என் எண்ணங்களின் சக்தியை எனக்குத் தெரியும். அதில் நல்ல எண்ணங்களையே விதைக்கப் பழகினேன். இன்பம்- துன்பம் எல்லாமே சமமாகிவிட்டது. அவமானம் என்று எதையும் கருதவில்லை. அவை எனக்களித்த பாடங்கள் தெளிவானதாக இருந்தன. கொடுப்பதில் இன்பம், அணைப்பதில் இன்பம்.
வாழ்கையில் எல்லாமே கற்பதற்கான செயல்கள் தான். அந்த வகையில் என் இயக்க வாழ்வு எனக்குப் பெருமிதமானது. அந்த வாழ்க்கையில் நான் அநேகருக்கு நன்மை செய்திருக்கிறேன். ஒரு கிராமத்தையே வாழ வைத்திருக்கிறேன். இன்றும் என்னிடம் அதே அன்புடன் பழகுகிறார்கள். வேறென்ன வேண்டும்! அன்புள்ளவர் எங்கிருந்தாலும் வாழ்வில் அன்பையே பெறுவார். நான் பெருமிதமாக உணர்கிறேன். பல மடங்கு பெருமிதமாக இப்போதும் உணர்கிறேன்.
இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? வாழ்வின் மீதியை எவ்வாறு கழிக்க விரும்புகிறீர்கள்?
நான் சரணடைந்ததிலிருந்து விடுவிக்கப்பட்டதுவரை எழுதிவிட்டேன். ‘எங்கே அவள்’ என்றொரு சிறு நாவலை எழுதி பதிப்பகத்துக்குக் கொடுத்து விட்டேன். ‘ஊழிக்காலம்’ மூலம் பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைத்தன. ஆனால் என்னுடைய இந்தியப் பயணம் நாற்பத்தைந்தாயிரத்தை விழுங்கி விட்டது. மேலும் மேலும் ஆக்கங்களைக் கோருவோர் எதுவும் தருவதில்லை.‘ஆம்பல்’ என்றொரு இணையப் பத்திரிகை மாதம் பத்தாயிரம் ரூபாய்கள் தந்தார்கள். அதுவும் இம்மாதத்துடன் நின்றுவிட்டது. ஆனாலும் நான் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையின் மீதிதான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது. பார்க்கலாம்.. இயற்கை என்ன வழி வைத்திருக்கிறதோ! பொதுவாகவே புலமையும் வறுமையும் சேர்ந்துதானே இருக்கின்றன. மகளுடனும் பேத்திகளுடனும் சேர்ந்திருக்கிறேன். மகிழ்ச்சிதான். அது மனதைப் பொறுத்தது.
என்னை இதயம் திறந்து பேச வைத்ததற்கு நன்றி.
http://www.shobasakt…asakthi/?p=1157
தமிழ்க்கவி அவர்களது மன நிலைகள் தமிழர்களான பலரிடம் உள்ளது . அதில் தவறு என்பதற்கு எதுகும் இல்லை ஆனால் தமிழர்கள் ஒன்றிணைத்து எதிரியிடம் இருந்து பாதுகாப்பதற்கு போராட்டத்தை தவிர்க்க முடியாது ஆனாலும் அதற்கான செயல்பாடுகளின் தவறுகளுக்கு சமூகமும் காரணமாக இருந்துள்ளது. காரணம் முள்ளிவாய்காலின் பிற்பாடு எமது விடுதலைக்காக உலகத்தை புரிய வைக்கும் போது போராட்டத்தை புரியாத் சமூகததை எப்படி போராடவைப்பது என்பதற்காக நாம் எதிரியிடம் தோற்றது தான் வரலாறாக முள்ளிவாய்காலில் சமூகத்திடம் ஒப்படைகப்பட்டுள்ளது.
சிங்கள தேசம் தமிழர்களினது உரிமைகளை அழிப்பவர்களுக்கு வாக்களிக்கும் போது தமிழர்கள் அரசியல் சுயநலன்களை எதிர்பார்பவர்களை வளர்த்தது . கல்வி என்பது எந்தளவிற்கு புனித மானதோ அதனை கற்றவர்கள் பின்பற்றாதவரை அடிப்படை மக்கள் அடிமை என்பதனை ஒரு சமூகம் ஏற்றாக வேண்டும். தந்தை செல்வாவும் தலைவர் பிரபாகரன் அவர்களும் எதற்காக தமிழீழம் கேட்டார்களோ அதற்காக வாழ்ந்த வரலாறுதான் தமிழர்களினது ஈழப்போராட்டம் ஆனால் அதனை எதிர்த்து நிற்கும் சமூகமாக புலம் பெயர் சமூகம் தமிழ் அமைப்புக்களை வளர்க்கும் போது எதிரியானவன் இன்றும் விடுதலைப் போராட்டம் என்பதனை பயங்கரவாதம் ஆக்கி தமிழர்களினது அழிவுகளை தொடர்வதால் தமிழர்கள் எதிரிக்கு இன்றுவரை சந்தற்பம் அழித்துக்கொண்டிருப்பதே சர்வதேச இனஅழிப்பின் ஆரம்பம். .
காரணம் சர்வதேசத்திற்கு நாம் எமது போராட்டத்தை நியாயப்படுத்தாத போது சர்வதேசம் மக்களின் அழிவுகளுக்கு தீர்வுகளை தவிர அரசியல் பிரச்சனைகளை விலக்குவதற்கு எம்மிடம் பலமான அணுகுமுறை இல்லை. அதனை விடுதலைப் புலிகள் பெறுவதற்காக போராடினார்கள் சர்வதேசம் அவர்களை மதித்தது அதனால் எமது விடுதலைக்கான நகர்வை சர்வதேச நகர்வை சந்தற்பமாக்க தமிழர்கள் இன்றும் எதிராகவே உள். அதனால் வரலாற்றின் தீர்ப்பானது தோற்காமல் தந்தை செல்வாவையும் தலைவர் பிரபாகரன் அவர்களையும் எமது இனத்தின் விடிவை நோக்கி செயல்பட வைத்ததே இன்றைய நகர்வின் வெற்றி தோல்விகள் ஆகும்.
அதனை இனியாராலும் மாற்ற முடியாது. என்பதே புலம் பெயர் சமூகத்தில் முள்ளிவாய்கால் அவலக்குரல் ஓய முன்பு உருவான நா.க.தமிழீழ அரசாங்கமும். தாயக மக்கள் அடையாளமாக கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வும்.வடமாகாணசபையும் அதனால் தோற்றதும் தோற்க்க வேண்டியதும் ஊழல்களே அன்றி ஈழவிடுதலை அல்ல. அதாவது சிங்கள தேசம் சிங்கக் கொடி அகற்றப்படும் வரை தமிழர்கள் தம்மை பாதுகாக்க போராவேண்டியது யதார்தத்தின் நகர்வு வரலாற்றின் நகர்வாக ஈழத்தின் இனவாத மகாவம்சக் கொள்கை அழிகப்படாதவரை ஈழமும் ஈழத்தமிழர்களும் போராடித்தான் ஆக வேணடும் என்பதே வரலாற்றின் தெரிவாக இதுவரை காலமும் பல மன்னர்கள் தோற்றாலும் ஈழத்தின் விடுதலை வரலாறு தோற்காமல் உயிர்புடன் தன்னை நகர்த்திவருவதனை உலகத்தமிழினம் உணர்ந்து செயல்பட வேண்டியது வரலாற்றுக்கடமை ஆகும். இதனை இனறு வாழும் மக்கள் ஏற்க்க முடியாதமைக்காக வரலாற்றினை நாம் அலட்சியப்படுத்த முடியாது
அதாவது கடவுள் இருக்கின்றார் என்பது எமக்கான நம்பிக்கை உலகில் கோயில்கள் இருப்பது யதார்த்தம் அதில் எதனை நாம் உண்மை என ஏற்கின்றோமோ அதுவே கோயில் இருப்பதற்காக கும்பிடுவதனை விட கடவுள் இருக்கின்றார்என்ற நம்பிக்கை யோடு நாம் எமது வாழ்வை உண்மைக்காக போராட வேண்டும். . எமது இனத்தின் அவலத்தை வரலாறு ஒப்படைத்துள்ளது அதற்கு மாறாக எம்மை மாற்றினால் அது வரலாற்றுத் துரோகம் என்பதனை அடுத்தவர்கள் ஏற்க்க வேண்டும் என்பது எதிர்பார்பே ஒளிய ஏற்க்க வேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும். . அதனால் உலகத்தமிழ் பேசும் மக்கள் நா.க.தமிழீழ அரசாங்கத்தை உண்மைக்காக போராடி வளர்கப்பட வேண்டிய து காலத்தின் கடமை மட்டுமல்ல வரலாற்றுக்கடமை . அதனை தவறாக வழிநடத்தி முன்னேற முடியாது என்பதனை ஏற்பது காலத்தின் கட்டாயம்.
இது ஆறு மாதத்துக்கு முதல் ஆனந்த விகடனில் டி.அருளெழிலன் தமிழ்க் கவியை எடுத்த பேட்டி. இரண்டுக்கும் இடையில் 6 அல்ல 60 வித்தியாசங்கள்
http://www.pathivu.com/news/29239/57//d,article_full.aspx
சுப ராஜன் – தமிழ் கவி யுத்ததுள் வாழ்ந்த பெண்மணி! பதிவு + ஆனந்த விகடன் கூட்டு தமக்கு வேண்டியதை மட்டும் வெட்டி போட்டுள்ளார்கள். தமிழ் கவியின் நாவலில் உள்ள விடயங்கள் தான் வெட்டி ஒட்டியுள்ளனர். நீங்கள் புத்தகத்தை வாசித்து விட்டு தமிழ் கவியை விமர்சிப்பதே நேர்மையானது. யுத்தவாடை தெரியாத புலம் பெயர் தமிழர்கள் புலியை விமர்சிப்பதை ஒரு அருவருக்கத்தக்க ஒரு ரத்த வாடையாக பார்ப்பது இன்றைய யதார்த்தம். இந்த ரத்தவாடைக்குள்ளும் கந்தக புகைக்கள்ளும் மூச்சத்திணறியவனின் வலிகள் புலம்பெயர் சமூகத்திற்கு புரியாது!
துபபாக்கிகள் முதுகில் துருத்தினாலும் நெற்றியில் அழுத்தும் போதும் உண்மையை சொல்பவரே மனித குலத்தின் பேுhராளிகள். எல்லாம் முடிந்த பின்………..
யதார்த்தத்தை தெளிவாகக் கூறியிருக்கின்றார். தமிழ்த் தேசியம் என்ற போர்வையைப் போர்த்தபடி இயங்கு பவர்களால் இன்றுவரை ஏற்றுக்கொள்ளமுடியால் மழுப்பலாக புறக்கணிக்கும பல உண்மைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்..எல்லாம் முடிந்தபின்பும் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட அந்த அமைப்புக்குள் இருந்துவந்த அனுபவங்கள் மூலம் கற்றுணர்ந்த தகுதிவாய்ந்த தமிழ்க்கவி அவர்களின் ஊழிக்காலம் நடந்து முடிந்த நிகள்வுகளின் யதார்த்தத்திற்க்கு காலம்கடந்தென்றாலும் சான்றாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.
ஆனால்இ அப்போதெல்லாம் ‘நாங்கள் விழ மாட்டோம்’ என்ற நம்பிக்கை இருந்தது. இலங்கை இராணுவம் பல வருடம் போராடிப் பிடித்த இடங்களைக் கூடஇ எங்கள் பொடியள் சில நாள் சண்டையில் மீட்டிருக்கிறோம் எனும்போது அந்த நம்பிக்கை இயல்புதானே! மீண்டும் இந்த நகரத்துக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான்இ தங்கள் வீடுகளின் கதவு ஜன்னல்களைக்கூட மக்கள் கழற்றிக்கொண்டு போனார்கள். ஆனால்இ 2008-க்குப் பிறகு நிலைமை தலைகீழ்!
புலிகள் போரிட்டு நாட்டைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதை நான் இயக்கத்தில் இணைவதற்கு முன்பே என்னால் உணர முடிந்தது.
எவ்வளவு பெரிய முரண்பாடு. ஆனந்த விகடன் பேட்டியை மாத்தி இதெண்டிட்டாங்கள் என்றால் தமிழ்க் கவி ஆனந்த விகடனை சும்மா விட்டுவைத்திருக்கலாமா?