21.12.2008.
இலங்கையின் வடக்கே நெடுங்கேணி நகரப்பகுதியை ஞாயிற்றுகிழமை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சண்டைகளையடுத்து, நெடுங்கேணி நகர் இராணுவத்தினரின் வசமாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் வடஎல்லையில் அமைந்துள்ள நெடுங்கேணி நகரப்பகுதி விடுதலைப்புலிகளை பொறுத்தமட்டில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றும், இது இராணுவத்தினரின் வசம் வந்துள்ளதை அடுத்து, முல்லைத்தீவுக்கு தென்கிழக்கு பகுதிகள் உடனான விடுதலைப்புலிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேநேரத்தில், வன்னி போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் திருமுறிக்கண்டி பகுதியில் சனிக்கிழமை பல மணிநேரம் இடம்பெற்ற கடுமையான மோதல்களையடுத்து, இராணுவத்தினர் கைப்பற்றியிருந்த இரண்டு கிலோமீட்டர் நீளமான தமது மண் அரண் பகுதியை தாங்கள் அவர்களிடம் இருந்து மீட்டு எடுத்துள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளார்கள். இந்த மோதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பத்து இராணுவ சடலங்களை தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப்புலிகள் கூறியுள்ளார்கள்.
இந்தப் பகுதிகளில் இருத்தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.