1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.
புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர். அதுவே கைது செய்தலாக முடீவுற்றது. செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
செல்வி வவுனியாவில் உள்ள சேம மடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட. செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயெற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார்.
இதனை அடுத்து செல்வி அரசுக்கு சார்பானவர் என்ற ஒரு கருத்தை விதைப்பதற்கு புலிகள் முனைந்தார்கள். மாறாக செல்வி அரசுக்கோ ஏனை அமைப்புகளுக்கோ ஆதரவாக இல்லாது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக செயல்படுவது எனும் முடிவில் உறுதியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளிலும் செல்வி ஈடுபட்டிருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.
ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.
செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது. International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும். இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத்திற்காகவும் எழுத்துத்தளத்திலும் கலைத் தளத்திலும் படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
செல்விக்கு விருதினை வழங்கிய அமைப்பானது தனது வெளியீட்டு பிரசுரமொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: ‘மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது’.
இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன. ‘மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில் பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது.’
._._._._._.
செல்வியின் சில கடிதங்களும். சில கவிதைகளும்.
செல்வியின் கடிதங்கள்
அன்பான அரசு,
அன்பு வந்தனங்கள்.
20-02-88 திகதியிட்ட உங்கள் கடிதம் 26-02-88 இல் எனக்குக் கிடைத்தது. நண்பர் ரஞ்சித் யாழில் நிற்பதால் நான் இன்னும் அவரைச் சந்திக்கவில்லை. mayயில் நான் சந்திக்கும்போது புத்தகங்கைளப் பெற்றுக் கொள்வேன். ரஞ்சித் இங்கே – வவுனியாவுக்கு வர சூழ்நிலைகள் சாதகமாக இல்லை…..
Drama and Theatre சம்பந்தமாக நீங்கள் தந்துள்ளவை பலவற்றை நான் வாசிக்கவில்லை. Brecht , Stanislawosky போன்றவர்களை பாடக்குறிப்புக்களாக விழுங்கியதை தவிரவும் Brecht பற்றி அண்மைய காலத்தில் தளிர்| , மல்லிகை| போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்த சிறு குறிப்புக்களும் நாடக கலை| என்கின்ற இராமசாமியின் தமிழ்மொழி பெயர்ப்பும் வாசிக்கக் கிடைத்தன. இவை நாடக உலகின் சிறு மண்துளிக்கையளவு தானுமில்லை. நமது சூழலில் சிங்கள நாடகத்துறை வளர்ச்சியுடன் தமிழினது வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் மண் – மடு வித்தியாசந்தான். ஒரு புறம் இயல்பாய் இங்குள்ள புறக்கணிப்பும் மறுபுறம் நமது சூழ்நிலைப் பாதிப்புக்களும் எங்களது கலை வடிவங்களை சிதைக்கின்றன. 83 களுக்கு முன்னர் தரமான நாடகங்கள் பலவற்றை தாசீயஸ், பாலேந்திரா, நா. சுந்தரலிங்கம் போன்றோர் நெறிப்படுத்தினர். கலவரம் இவர்களை அந்நிய தேசங்களில் சரணடைய வைத்துவிட்டது. எனினும் 84 களிலும் பின்னரும் குறிப்பிடக்கூடியதாக வீதி நாடகங்கள், கவிதா நிகழ்வுகள் , மண் சுமந்த மேனியர்- 1, 2 ஆகியவை இடம்பெற்றன. இன்னும் சொல்லப்போனால் கொழும்புத் தமிழ்ச் சூழலில் கோமாளிகள், ஏமாளிக(ள்)ளாக அல்லோலகல்லோலப்பட அடக்குமுறைக்குள்ளான யாழ் சூழலில் நல்ல தரமான படைப்புக்கள் வெளிவந்தன. அமைதி ஒப்பந்தம் – மீண்டும் வடகிழக்கில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எது செய்ய முயன்றாலும்….. அனுமதி தேவைப்படுகின்றது.
நமது பெரிய யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் ஓரளவுக்கு University Liberary பெரியதாக இருந்தது. வந்தவர்களும் மீண்டும் நம்மை அழிக்க (60,000 புத்தகங்கள் வரை எரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறுகிறது) முயன்றுள்ளனர். இதற்குள்ளும்,
…. ‘நாம் வாழவே பிறந்தோம் – சாவை உதைத்து’ என்ற ஜெயபாலனின் கவிதை வரிகள் எங்கள் தேடலையும் வாழ்தலையும் உங்களுக்குப் புரிய வைக்கும்.
…..
‘பயணம்’ இதழுக்காக இரு கவிதைகள் அனுப்பி வைக்கின்றேன். ‘தேடல்’ கவிதை எனது நண்பர் ஒருவருடையது… தமதூரில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவது. நீங்கள் எதிர்பார்க்கின்ற கவித்துவம் இருக்கின்றதோ இல்லையோ இந்த நிகழ்வுகளின் மீதான கோபம், தாக்கங்கள் தான் இவை. மற்றது எனக்குள்ளே….. இது பற்றிய நேரடியான விமரிசனத்தை எனக்கு நீங்கள் எழுதுங்கள்.
படைப்பு – படைப்பாளி தொடர்பான சர்ச்சைகள் இங்கும் உள்ளன. என் கைக்கெட்டிய இந்திய தமிழ்க் கவிதைகளை விட சேரன், ஜெயபாலனின் கவிதைகள் மிக மிகத் தரமானவை. இவர்கள் இருவருக்குள்ளும் ஜெயபாலனின் மண் – மக்கள் தொடர்பான அனுபவம் ஆய்வுகள் இன்றுவரை மக்கள் கவிஞனாக அவனைக் காட்டுகின்றது. சேரனை நீங்கள் நுணுகி ஆராய்ந்தால் மண்ணில் கால் பதிக்காது வானத்திலிருந்து இறங்கி வருவதை நீங்கள் காணலாம். இரண்டாவது சூரிய உதயத்திலுள்ள உண்மையான இயல்பு,’ யமனின்’| இல்லை. ‘யமனை’ முதலில் நான் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு – இப்போது இல்லை.
‘புழுதி படாது,
பொன்னிதழ் விரித்த சூரிய காந்தியாய்
நீர் தொடச் சூரிய இதழ்கள் விரியும்’
இப்படி ஒரு கவிதையில் வருகின்றது. யமனில் இதனுள் சில சொற்கள் பிழையோ தெரியவில்லை. என்னிடம் கைவசம் புத்தகம் இல்லை (யாழில் நான் இருந்த வீட்டினை….. ஆக்கிரமித்ததில் எனது சிறு நூலகத்தையும் இழந்து விட்டேன்) எனினும் ‘புழுதிபடாது, பொன்னிதழ் விரித்த’ அடிகள் ஞாபகத்திலுள்ளன. புழுதிபடாமலும் கூட பிரமிக்க வைக்க சேரனால் முடியும்.எனினும், படைப்பு – படைப்பாளிகள் தொடர்பாக என்ன முடிவுக்கு வருவதென்பது என் வரையில் கேள்விக்குறி தான்.
நாடகம் தொடர்பான ஆங்கில புத்தகங்களும் உவ்விடம் வாங்கக் கூடியவற்றை அசோக்கிடம் லிஸ்ற் கொடுக்கவும். அவற்றை எனக்கு இங்கு அனுப்ப முடியும் போது அனுப்புவார்.
நான் பதிலைத் தாமதித்ததால் உங்களை விரைவில் பதிலெழுதச் சொல்ல முடியாது. எனவே பதிலெழுதுங்கள்.
தங்கள்
அன்புடன்,
செல்வி
08-04-88
இரவு 11-53
._._._._._.
அன்பான அரசு,
உங்கள் இரண்டு கடிதங்களும் கிடைத்தது. நன்றி.
அனுசுயா இங்கு வந்துவிட்டார். அவரிடம் நண்பர் ஒருவர் மூலமாக விசாரித்ததில் நீங்கள் ‘பயணம்’ இதழ்களை அனுப்பவில்லையெனத் தெரிந்தது.
என்னுடைய கவிதைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் நினைக்கிற அளவுக்கு புத்தகமாக வெளிவரும் தகுதி அவற்றுக்கில்லை. நீங்கள் விரும்பினாலும் கூட தொகுப்பாக்குகிற அவசரம் அவசியம் இப்போதைக்குக் கிடையாது. மன்னிக்கவும். ஆனால் இதற்குப் பதிலாக நான் உங்களிடம் வேறோர் உதவி கேட்கிறேன். நீங்கள் நாடகப் பிரதிகளை (Seript) நூலுருக் கொடுக்க முன்வருவீர்களெனில், தரமான ஈழத்து நாடகப் பிரதிகளை அனுப்பி வைப்போம். இன்றைய சூழலில் இங்கேயும் கவிதை, கதைகளைப் போட பலர் முன் வருகின்றனர். ஆனால், அந்தளவு கணிப்பை நாடகத்துக்கு கொடுக்கிறார்களில்லை.
அண்மையில் ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ தொகுதியை வாசித்தேன். ஆனால், அதைவிடவும் மேடைபற்றிய பூரண பிரக்ஞையுடன் எழுதப்பட்ட தரமான நாடகப் பிரதிகள் இங்குள்ளன. அப்படி ஒரு எண்ணம் உங்கள் நண்பர்களுக்கு இருக்குமாயின் எழுதுங்கள். இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். தொகுப்புக்கு வேண்டிய முன்னுரை, Cover Desige சகலமும் அனுப்புவோம். வெளியீடு உங்களுடையதாக இருக்கும். ஆலோசியுங்கள். புத்தகங்களின் பெயர்களைத் தயவு செய்து எழுதாதீர்கள். இவற்றை உங்களுக்கு வசதி கிடைத்து. அனுப்ப முடிந்ததால் அனுப்புங்கள். இவற்றை வாசிக்க முடியவில்லையென்ற ஆதங்கமும், பொறாமையுந்தான் வருகிறது. இங்கு சில புத்தகங்கள் உவ்விடமிருந்து வந்துள்ளன. ஆனால் அவற்றின் விலையைக் கேட்டால் தலை சுற்றும். எனக்கு இவற்றை வாங்குகிற வசதி இன்னும் 4 வருடங்களுக்கு இருக்காது. அப்படி இருந்தது உமா வரதராஜனின் ‘உள் மன யாத்திரை’ டானியலின் ‘தண்ணீர்’ வாங்கினேன்.
‘Journal of South Asian Literature’ என்ற ஒரு தொகுப்பு சிங்களவர் ஒருவரால் தொகுக்கப்பட்டுள்ளது.
இதில் யேசுராசா, நுஃமான், ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது. நான் இன்னும் பார்க்கவில்லை. University Libraryலுள்ளதாக நண்பரொருவர் கூறினார். ஆனால் அதனை வாங்கி அனுப்ப எனக் முடியுமென நான் உறுதி கூறமாட்டேன். கொழும்பில் நண்பர்கள் உங்களுக்கு யாரேனுமிருப்பின் அவர்களுக்கு எழுதுங்கள்.மற்றும் சிறு சஞ்சிகைகளை யாராவது நம்பிக்கையான நண்பர்கள் வருவாரெனின் அவ்வப்போது அனுப்புவேன். English Poems ஐயும் Copy பண்ணி அனுப்ப முடிந்ததை அனுப்புகின்றேன்.
வேறென்ன, எழுதுங்கள்
அன்புடன்
செல்வி
18-09-88
._._._._._.
அன்பான அரசு,
நீங்கள் எழுதியதான எனது முன்னைய முகவரிக்கு அனுப்பிய கடிதம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் அதிலே நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்களென எனக்குத் தெரியாது. இங்கு நாட்டு நிலைமைகள் ரொம்ப மோசம் அதுவும் இந்த திருநெல்வேலி பல்கலைக்கழக வட்டாரம் தினந்தோறும் வெடிச்சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது. நாடகப்பிரதிகளை திரும்பவும் அவரிடம் எழுதும்படி கொடுத்துள்ளோம். பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் நாடு திரும்பிய பின் அவரிடம் ஒரு முன்னுரை கேட்டு அனுப்பலாமென்பது எண்ணம். அண்மையில் சித்ரலேகா அக்கா வீட்டுக்குப் போனபோது திரு.நுஃமான் சென்னை வந்துள்ளதாகக் கூறினார். அவர் தங்கியுள்ள முகவரி தெரியாத போதும் அவர் எஸ்.வி.ராஜதுரையை, பொதிய வெற்பனைச் சந்திப்பாரென்பதால் அவரை நீங்கள் சந்திக்க முடியுமாயின், அவருக்கும் முடிந்தால் வைத்திருக்கும் புத்தகங்களைக் கொடுத்துவிடவும். அசோக்கிடம் இதனைச் சொல்லவும்.
அசோக் தவநாதனிடம் கொடுத்துவிட்ட கடிதம் கிடைத்தது. ஆனால் புத்தகங்களைத் தவநாதன் இன்னமும் கொண்டு வந்து தரவில்லை. அதன் பின்னர் இது வரை நான் தவநாதனைச் சந்திக்காததால் வேறு எந்த விபரமும் தெரியாது. அசோக்கின் திருச்சி முகவரி எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் அனுப்புங்கள்.
அண்மைக்கால நிகழ்வுகளில் பெண்கள் மீதான வன்முறைகளை வைத்து ஒரு நாடகமொன்றை April 29th மேடையேற்றவுள்ளோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சி தான். இதற்கு எவ்வாறு அரசு தரப்பிலான ஒடுக்குமுறை இருக்குமோ தெரியாது. முயன்று பார்க்கின்றோம். வெற்றியளித்தல் பின்னர் எழுதுகின்றேன். இத்துடன் வீர. சந்தானம் அவர்களுக்கு ஒரு கடிதம் வைத்துள்ளேன். அவரிடம் கொடுத்துவிடுங்கள். அவரை எனக்கு கடிதம் அனுப்பச் சொல்லுங்கள். நுஃமான் Sir இடம் ‘இனி’ Magazene தொகுப்பும் ‘நாடகக்கலை|’ மு.இராமசாமி அவர்களின் மொழிபெயர்ப்பு நூலையும் மனதில் பதிஞ்ச காலடிச்சுவடுகள் – சாமிநாதன் எழுதிய Drama Work shop பற்றிய புத்தகத்தையும் அனுப்ப மறக்கவேண்டாம். முன்னர், அசோக்கிடம் தஞ்சாவூர் University Drama Theatre arts Syllabusஐ எடுத்து அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தேன். உங்களால் முடியுமாயின் அனுப்பி வைக்கவும்.
‘Crying Asia’ எனும் நிகழ்ச்சியொன்று வரும் Octoberஇல் மணிலா பிலிப்பீன்ஸில் நடைபெற இருப்பதாக அறிந்தேன். உங்கள் குழுவினரில் யாராவது போகிறீர்களா?
நுஃமான் Sir ‘வியூகம்’, ‘திசை|’ கொண்டு வந்தாரா? அவர் உவ்விடம் வருவது தெரிந்தருந்தால் இவற்றைக் கொடுத்துவிட்டிருக்கலாம். தவநாதன் திரும்பவும் இந்தியா வரவிருப்பதாகச் சொன்னான். வந்தால் – என்னைச் சந்தித்தால் கொடுத்து விடுகிறேன்.
உங்களது சூழ்நிலைகள் முயற்சிகளை எழுதுங்கள். எனக்கு பரீஷ ‘ஞாநி’, வீதி நாடக இயக்கம், கூத்துப் பட்டறையினருடன் பரிச்சயம் ஏற்படுத்தித் தருவீர்களா? அவர்களது வெளியீடுகள், முயற்சிகள், அனுபவங்கள் எங்களுக்கு உதவலாம் தானே.
பி.கு. நீங்கள், அசோக், பொதியவெற்பனுடன் சேர்ந்த Photo அனுப்பி வைக்கிறீர்களா?
அன்புடன்
செல்வி
20-04-89
._._._._._.
செல்வியின் கவிதைககள்
மீளாத பொழுதுகள்
அமைதியான காலைப் பொழுது
காலைச் செம்மை கண்களைக் கவரும்
காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்
தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்
எங்கும் அமைதி! எதிலும் இனிமை!
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது
பொழுது புலராக் கருமை வேளையில்
தட தடத்துறுமின வண்டிகள்
அவலக் குரல்கள்: ஐயோ!அம்மா!|
தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்…
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.
தாய்மையின் அழுகையும்
தங்கையின் விம்மலும்
பொழுது புலர்தலின்
அவலமாய்க் கேட்டன.
காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது
மெல்லிய ஒலிக்கும் பயத்தையே தூண்டின –
எங்கும் அச்சம்: எதிலும் அமைதி,
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்…
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது!
._._._._._.
கோடை
அந்திவானம்
செம்மையை விழுங்கும்
அலைகள் பெரிதாய்
கரையைத் தழுவும்
குளத்தோரத்துப் புற்களின்
கருகிய நுனி
நடக்கையில்… காலை நெருடும்
மேற்கே விரிந்த
வயல்கள் வெறுமையாய்
வானத்தைப் பார்த்து
மௌனித்திருக்கும்
வெம்மை கலந்த
மென் காற்று
மேனியை வருடும்.
புதிதாய் பரவிய
சாலையில் செம்மண்
கண்களை உறுத்தும்
காய் நிறைந்த மாவில்
குயிலொன்று
இடையிடை குரலெழுப்பும்.
வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச் செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்.
ஒதுங்கிப் போனகல்
ஏளனமாய் இனிக்கும்.
இதயத்தின் நினைவுகள் விரிந்து
சர்ரென்று வலியெடுக்கும்
வாடைக்காற்றின் சிலிர்ப்பும்
வரப்போரத்தில் நெடி துயர்ந்த
கூழாமரத்தின் பசுமையும்
நிறைந்த குளத்தின் மதகினூடு
திமிறிப்பாயும் நீரினழகுமாய்
ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள்
ஊமையாய் மனதுள் அழுத்தும்.
._._._._._.
விடை பெற்ற நண்பனுக்கு
மின் குமிழ்கள் ஒளியுமிழ
நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்
விரைவில் வருவதாய்
உனது நண்பனுடன் விடைபெற்றாய்
உன்னிடம் பகிர
எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன.
முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப.
செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து
வசந்தம் பாடிய குயில்களும்
நீயும் நானும் பார்த்து இரசித்த
கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது
தலையை அசைத்தும்
எனது செய்தியை உனக்குச் சொல்லும்.
பருந்தும், வல்லூறும், வானவெளியை மறைப்பதாக
இறக்கையை வலிந்து விரித்தன நண்பா
கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன:
கூடவே சில கோழிகளும்..
இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க
எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.
நடந்து நடந்து வலித்துப் போகும்
கால்களின் மீது படியும் என்
மண்ணின் புழுதியை
முகர்ந்து
வீதியிலன்றி வீட்டினுள்ளும்
முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி
குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு…..
இறையைத் தேட,
இறக்கையைக் கிழிக்க……
வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த
கொடுமைகட் கெதிராய் கோபம் மிகுந்து
குமுறும் உனது குரலுடன்
குழந்தைச் சிரிப்புடன் விரைந்து வா
நண்பா!
._._._._._.
சிலிர்க்கும் மழைச்சாரல் தெறிக்க
தவளைகள் பின்னணி இசைக்கும் இரவு
குளிர் மிகுந்து கொடுகு மென்னுடல்
உனது இனிய அணைப்புக் கேங்கும்
பிரிதலின்றி கழிந்த பொழுதுகள்
கனவாய் மட்டுமே உணர்த்தும் கொடுமையை
எப்படி உன்னிடம் சொல்வேன்?
நெரிசல் நிறைந்த சென்னை நகரில்
எனது உணர்வை எனது கிளர்வை
எனது நேசத்தை எனது காதலை
எனது விரல்களின் மெல்லிய வருடலை
எங்ஙனம் உனக்கு உணர்த்த முடியும்?
புறாவும் அன்னமும் தூது செல்லும்
காலமா இது….
தென்றல கூட இளமையிழந்து
மௌனமாய்……
மானுட நேயம் நோக்கிய வாழ்வை
படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள்
கொடூரம் மிகுந்த விழிகள் தொடர
வாழ்தலின் கசப்பு நெஞ்சை நெருடும்.
மனிதம் மறந்து சவமாய் கிடந்து
வாழ்தலில் எனக்கு பிரியமே யில்லை!
._._._._._.
அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்…..
காலைப் பொழுதுகளில்
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற் சிறுணுங்கி|யில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்?
கேள்வியில் கனக்கும் மனது
விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்
அவிழ்க்கப்படும் பொய்கள்
விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன
அவை என் மீது விழுந்து விடும் பயத்தில்
அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கின்றேன்
மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்
நன்மைக்குத் தான்
செவிப்பறைமென் சவ்வுகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன.
திட்டங்களில் புதைந்து போன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன…
மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாதது
நான் களைத்துப் போனேன்
புகை படிந்த முகத்துடன்
வாழும் நாள்கள் இது.
._._._._._.
பனியில் கலந்து கரைந்து போன இரவு…
பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூச்சிழுப்புப் போல
இந்த வாழ்க்கையும்…
நாய்களின் ஊளையும்
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்கும்
வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.
எனக்குள்,
பனிக்காக அணிந்த உடைகளின் கதகதப்பை மீறி
இரவின் தனிமையில்
என்னைத் தூங்கவிடாது துரத்துகின்ற நினைவுகள்…
குழந்தையொன்று வீறிட்டழுகின்றது
போர்வை விலகிப்போய் குளிர் உறுத்துகிறதோ…..
அறையிலே,
தூங்கும் எனது தோழியின் கனவிலே
சூரியத் தேரேறி கந்தர்வன் ஒருவன் வரக்கூடும்.
இப்போது,
தூரத்தே கேட்கும் துவக்குச் சன்னங்கள் பட்டு
பரிச்சைக்காய்
புத்தகங்களை முத்தமிட்டபடி
முதிரா இளைஞனொருவன் இறக்கவும் கூடும்.
நிகழ்தகவுகளே இங்கு நிகழ்வுகளானதில்
அதிகாலைப் பனிதடவும் செம்மையும் கூட
தன் அர்த்தத்தை இன்று இழந்துபோனது.
._._._._._.
இராமனே இராவணனாய்
நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.
என்னை யாரும் கேள்வி கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்
றூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது எனது இதயம்.
எந்த நேரமும்
விழுந்து வெடித்து விடக்கூடும்.
அசோகவனங்கள் அழிந்து போய்விடவில்லை.
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால்
சிறைப்பிடித்தது இராவணனல்ல, இராமனே தான்.
இராமனே இராவணனாய்
தனது அரசிருக்கையின் முதுகுப்புறமாய்
முக மூடிகளை மாற்றிக் கொண்டதை
பார்க்க நேர்ந்த கணங்கள்..
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.
இந்தச் சீதையைச் சிறை மீள வருவது யார்?
அசோக வனங்கள்
இன்னும்
எத்தனை காலத்திற்கு?
செல்வியுடன் பகிர்ந்த நினைவலைகள்:
1984 பங்குனி 19ம் திகதி உம்மை நான் யூழ் பல்கலைக்கழக உணவுவிடுதியில் ஒரு குறிப்பிட்ட நபரின் அறிமுகத்தோடு சந்தித்தேன். நாம் ஊரைவிட்டு >உறவைவிட்டு உமது விடுதலைப் பயணத்தில் தொலைதொpயா தூரத்தில் பயணித்த போது நான் முதல் முதல் கண்ட -ஆத்மார்த்தமான நட்புடன் வரவேற்ற 3பெண்களில் (இருவர் இன்று அவுஸ்திரேலியாவிலும்>மற்றவர் ஐரோப்பிய நாடொன்றிலும் இருப்பதாக அறிகின்றேன்.)முக்கிய இடத்தை என்றும் நிரப்பியவர் நீர் தான்.ஏனெனில் என்னைப்போல் குடும்பத்தில் மூத்தவளாக இருந்தும் குடும்பச்சுமைகளை புறம் தள்ளி
வேறு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து ஏதோஒரு லட்சியத்திற்காக துணிந்து புறப்பட்ட முன் வரிசையில் சந்தித்த பெண்களாயிருந்ததுகூட எமது நட்புக்கு ஒரு பாலமாக இருந்திருக்கும்.இந்த இரு வாரங்களின் பின் நாம் கடமைகளின் நிமித்தம் சில மாதங்கள் தூரதேசம் பிரிந்திருந்தாலும் 1984 மார்கழி பகுதியில் உம்மை மீண்டும் சந்தித்ததையும் நீரும் இன்னும் உயிருடன் இருக்கும் குறிப்பிடத்தக்க பெண்களாகிய நாமெல்லோரும் எமது போராட்டத்தில் மேற்கொண்ட பல வேலைத்திட்டங்களையும் நினைவுகூறுகின்றேன்.
அந்த குறிப்பிட்ட ஒன்றரை வருட காலங்களில் நீரும் நானும் மேற:கொண்ட பணிகளின் நிமிpத்தம் ஒரே அறையில் வாழ்ந்து சிறந்த தோழிகளாக பழகினோம் .என்னில் உள்ள சில பலயீனமான குணங்களான வரட்டுத்தனம்> அவசரசெயற்பாடு> முற்கோபம் போன்றவைகள் கூட உம்முடன் பழகிய காலத்திற்கு பின்பே நிதான செயற்பாட்டிற்கு வந்ததாக உணர்கின்றேன்.படிக்கும் காலங்களிலிருந்த வாழ்க்கையின் ரசனை>இயற்கையின் வனப்பு பற்றிய அக்கறையெல்லாம் போராட்டம் பற்றி முற்று முழுதாக சிந்திக்கத் தொடங்கிய பின் வரட்டுத்தனமான வேதாந்தங்களை கடைப்பிட்க்க வேண்டிய சூழல் அன்றைய காலத்தில் ஏற்பட்டது.ஆனால் உமது நட்பொன்றின் மூலம்தான் நான் மீண்டும் வாழ்வியலின் அழகையும் பல யதார்த்தங்களையும் உணர முடிந்தது.
ஏனெனில் உமது மென்மையான குணம் பக்குவமான தன்மை>பிரச்சனைகளை கையாளும் விதம் வாழ்வியலை இயற்கை சிருங்காரங்களோடு ஒப்பிட்டு விவாதிப்பது>மிக நிதானமான பொறுமை என பல நற்பண்புகளை உம்மில் கண்டு அடிக்கடி வியந்திருக்கின்றேன். உம்முடன் பழகியதால்> நீர் எனது பல குறைபாடுகளை சொல்லி வழிநடத்தியதால் -என்னுடன் இணைந்து செயற்பட்டதால் நான் உம்மிடம் இருந்து கற்றவை பல. அதன் மூலம் வாழ்க்கையில் வென்றவை சில.
நீர் ஓர் நடைமுறை பெண்ணிய வாதி> கவிஞை> இலக்கியவாதி மொத்தத்தில் மனிதநேயவாதியான ஒரு செயற்பாட்டாளர் என்பது எல்லோருக்கும் தொpந்த விடயம்.ஆனால் ஓர் கால கட்டத்தில் ஒருஅரசியலமைப்பின் உயர் அங்கத்திலுள்ள ஒரு தீவிர செயற்பாட்டாளர் என்பது பலருக்கு தொpயாமலிருக்கலாம்.அங்கு தான் உமது நட்பு கிடைத்ததென்பதை நான் பெருமையுடன் நினைவுகூறுகின்றேன்.ஏனெனில் எமது போராட்டத்தை நேசித்து புறப்பட்டபோது உளசுத்தியோடு அனைத்து அர்பணிப்புக்களோடுதான் செயற்பட்டோம். ஆனால் பல அகபுற சூழல்களால் போராட்டம் திசைமாறிய போது -பிற்பட்ட காலத்தில் போராட்டத்தில் பங்கு கொணடதை அவமரியாதையாக- அவமரியாதைப்படுதத்ப்படுபவராக அதுவும் குறிப்பிடத்தக்க பெண்களாகிய நாம் வாழ்க்கைகளை> எதிர்காலத்தை> எமது லட்சியத்தை >நம்பிக்கைகளை தொலைத்தவர்களாக பi துன்பங்களுக்கு ஆளாகினோம்.அதற்காக எமது பாதைகளை> நாம் கொண்ட கொள்கைகளை தூக்கியெறிய முடியாது அல்லது மொத்தத்தில் போராட்டம் பிழை >நாம் சமூகத்i;தபற்றி சிந்தித்தது பிழையென சொல்லிக்கொண்டு நாம் தப்பிக்கொள்ள அல்லது ஒதுங்கிக்கொள்ளமுடியாது.ஏனெனில் எத்தனையோமககள் எமது போராட்டத்தில் அதன் பிரதிநிதிகளென செயற்பட எமக்கு பலவிதத்திலும் அனுசரனையாக > உந்து சக்தியாக இருந்தார்கள்.எம்மிடமிருந்து எதையோ எதிர்பாத்தார்கள ;.ஏனெனில் சமூகத்திலுருந்து நாமும்>எம்மிலிருந்து சமூகத்திற்குமான பவ கடமைப்பாடுகள்> கற்பித்தல்கள்> லழிநடத்தல்கள் உண்டு இவற்றையெல்லாம் முகம் கொடுத்து சிறப்பாக செயற்பட்டவர்தான் தமயந்தி என்ற புனைபெயர் கொண்டசெல்வி என்னும் செல்வநிதி. .எவ்வளவோ எமது வரண்டு போன போராட்ட சிந்தனை துன்பங்களையும் முகம் கொடுக்கும் போதுதனக்குள்ளோ> தன்னைச்சுற:றியுள்ளவரினோடோ வாழ்வியலின் அழகியலை கற்பனையில் மீட்டெடுப்பது அவரின் வெற்றியாக இருந்தது.
அதே நேரம் தான் சார்ந்த அமைப்பு ஒரு அராஜகத்தை> ஒருமனித நேய குழிபறிப்பைஅநாகாPகமாக செய்து முடித்து அது எமக்கு தொpயவந்த போது மிக ஆக்ரோசமாக இந்த செயற்பாட்டை எதிர்த்தார்.இவ் அரசியல் அமைப்பின் மகளிர் பிரிவின்உயர் குழு உறுப்பினர் 5வரில் ஒருவரான செல்வி உட்பட்ட 4 பெண்களும் இந்த நடவடிக்கையால் அரசியல் அமைப்பிற்குள் மிக முரண்பட்டனர்.அன்றுதான் செல்வியின் ஆக்ரோசம்- ஆத்திரம் மனிய நேயத்திற்காக முகம்தொpயாத -கொலையுண்ட அந்த இளைஞர்களுக்காக வீறுகொண்டு நட்புகள் அரசியலையும் அதனை நியாயப்படுத்திய எம்மைப் போனறோரையும் தூக்கியெறிந்தார்.ஒன்றரை வருடம் தான் நாம் தோழமையாக இருந்தாலும் செல்வியின் பாதிப்புக்கள் காலத்திற்கும் என்னுள் அழியாதவை என்று அன்றே உணர்ந்திருந்தேன்.அது போன்றே இருவரின் தோழமையும் இறுக்கமாக இருந்தது.ஆனால் இச் சம்பவத்திற்கு பிற்பாடு செல்வியுட்பட இந்த 4 பெண்களும் இந்த அரசியலமைப்பிலிருந்து முற்றாக ஒதுங்கிக்கொணடனர்.அன்றைய எனது அறிவின்படி அமைப்பின் உட்கட்சி ஜனநாயகத்தின் மூலம் தொடர்ந்து அமைப்பைத்திருத்தலாம் என்ற நப்பாசையில் அந்த அரசியல் தீர்மானத்தின் பின் செல்வியின் நட்பையும் தொலைத்தேன்.
ஆனால் வெளியேறிய செல்வி தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து யாழ் பலகலைக்கழக வட்டத்தூடு மனித உரிமை மீறல்களுக்காக கொலைசெய்யப்படும்வரை போராடியுள்ளார்.இவருடன் விலகிய பெண்கள் இன்றுவரை சொந்த வாழ்வில் வெளிநாடுகளில் ஒதுங்கியே உள்ளனர்.செல்விக்கு நாட்டை விட்டு வெளியேற சந்தர்ப்:பமும்> தீர்மானிக்கப்பட்வாழ்க்கைத்துணையும் இருந்தும் மக்களின் அவலங்களை விட்டு வெளியேற முடியாமலும் சிறந்த மனித உரிமைவாதியாக செயற்பட்டதாலும் அநீதிக்கெதிராக குரல்கொடுத்தே புலிகளின் கடத்தலுக்குப்பின் காணாமல் போக்கடிக்கப்பட்டார்.ஒரு யதார்த்த பெண்ணிலைவாதியாகவும் மனிதஉரிமைசெயற்பாட்டாளராகவும்>முற்போக்கு பெண்கவிஞையாகவும்>ஒரு சிறந்த நேர்மையாளரானதுமான இந்தப் பெண் ;போன்றோஈ;கள் அழிக்கப்பட்டதானது எமது போராட்ட வரலாற்றை சில கணங்களாவது ஸ்தம்பிக்க வைத்துள்ளதென்பது வரலாற்றில் இடம்பெறும்.தனது இதமான>ரவுத்திரமான சிந்தனைகளை எம்போன்றோரில் விதைத்த இந்த பெண் கவிஞை என்றும் எம்மில் வாழ்கின்றார்.
இந்த நினைவுகூறல்மூலம் அவரின் பிரிவால் இன்றுவரை உள்ளம் உருகும் தாய்> சகோதாpகுடும்பத்தினர் மற்றும் விசேடமான நண்பர் ஏனையநண்பாகள் நண்பிகள் தோழிகள் அனைவருடனும் நினைவலைகளை பகிர்ந்து கொள்கின்றோம்.
ஜெ.ஜென்னி