14.10.2008.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் இதனைச் செய்வதற்கு இதுவே தருணம் என்று அவுஸ்திரேலியாவில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நேற்று திங்கட் கிழமை இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் ரோகித போகொல்லாகம, இலங்கை இராணுவம் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளோம். தற்போதைய நடவடிக்கைக்கு எமது நிதி வளங்கள் போதியளவாக இருக்குமென்ற முழுமையான நம்பிக்கை எமக்கு உண்டு என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
யுத்தம் அதிகரித்திருக்கும் நிலையில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு, உள்நாட்டு கடன்களை 20 சதவீதம் அதிகமாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது. இதில் 6.4 சதவீதம் யுத்தத்திற்கு செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடன் சந்தையில் முடக்க நிலை ஏற்பட்டிருக்கும் தற்போதைய தருணத்தில் கடன்படுதொகையை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேறு தேர்வு இல்லையெனவும் யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் ரோகித போகொல்லாகம கூறியுள்ளார்.