முஸ்லிம் தமிழர்களின் கொழும்பு சார் பிழைப்புவாதத் தலைமைகளுக்கும் பெரும்பாலான தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லை. தமிழர்களாகவே தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத முஸ்லிம்களின் தலைமை சிங்களத் தரகு முதலாளித்துவத் தலைமைகளின் நீட்சியாகவே செயற்படுகின்றன. இஸ்லாமியத் தலைமைக்கும் மக்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை மறைக்கும் பிற்போக்குத் தமிழ் இனவாதிகள் ஒவ்வொரு தளத்திலும் இனவாதத்தை உமிழ்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மற்றும் புலம்பெயர் பிற்போக்கு இனவாதிகள் முஸ்லிம்கள் எங்களுக்குத் துரோகமிழைத்தனர், இப்போது நாங்கள் ஆதரிக்கிறோம், இனிமேலும் முஸ்லிம்கள் எமக்குத் துரோகமிழைக்கக் கூடாது என்று தமிழ்ப் பேசும் முஸ்லிம்களின் அனைத்துப் பிரிவினரையும் அவர்களின் எதிரியான வாக்குப் பொறுக்கும் தலைமைகளையும் வேறுபடுத்த மறுக்கின்றனர். இந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதனின் அறிக்கை ஒப்பீட்டளவில் வரவேற்கத்தக்கது.
இலங்கை அரச பாசிஸ்டுக்கள் தமது அரச பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி இஸ்லாமியத் தமிழர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் போராட அழைக்கும் அறிக்கை:
பயங்கரவாதத்தை முறியடித்ததாக மார் தட்டிக் கொள்ளும் அரசும் அரச படைகளும் வன்முறைச் சம்பத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றார்களா? அல்லது வன்முறையின் பின்புலத்தில் இருந்து செயற்படுகின்றார்களா? என்பதை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஜனநாயக ரீதியாக தமது உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதையே இது வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி எமது உரிமைக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டியவர்களாக நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குள் ஒரு பலம் அமையும்போதே எங்களை இன்னொருவர் அச்சுறுத்தும் நிலையை நாங்கள் இல்லாமல் செய்யமுடியும்.
இந்த சம்பவம் அளுத்கமையுடன் முடிவடையும் என்று கருதிவிட முடியாது. கடந்த காலத்தில் இந்த நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கி நீதி கேட்க தயாராகவேயுள்ளது. எனவே முஸ்லிம் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக தெரிவித்து அரசுக்கு முண்டு கொடுத்து பாராளுமன்ற கதிரைகளை சூடேற்றும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆப்பாவி முஸ்லிம் மக்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இந் நிலையில் வன்செயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயத்தில் நானும் பங்கு கொள்கின்றேன் எனவும் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.