நேற்றுதான் புதுச்சேரி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதிக தொகுதிகளை ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் நிலையில் 6 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ள பாஜக புதுவை முதல்வர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தத் துவங்கியுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.இன்று (திங்கட்கிழமை) மாலை ஆளுநரைச் சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.காங்கிரஸ் தலைமையில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிட்டன.30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. நேற்று இந்த வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 தொகுதிகளில் வென்றுள்ளது. 6 இடங்களில் பாஜக வென்றுள்ளது. 5 இடங்களில் போட்டியிட்ட அதிமுக ஒன்றில் கூட வெல்ல வில்லை.
14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான திமுக 6 தொகுதிகளில் வென்றுள்ளது. விசிக, கம்யூனிஸ்டுகள் ஒரு தொகுதிகளில் கூட வெல்ல முடியவில்லை. ஐந்து தொகுதிகளில் சுயேட்சைகள் வென்றுள்ளார்கள்.
இதில் அதிமுக என்ற கட்சியே பாஜகவால் அழித்தொழிக்கப்பட்டு விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நமச்சிவாயம் எம்.எல்.ஏ வை தன் பக்கம் இழுத்துதான் பாஜக போட்டியிட்டது. நமச்சிவாயமும் வென்றுள்ளார். ஆனால் 6 தொகுதிகளை மட்டுமே பாஜக வென்றுள்ளது ரங்கசாமி 10 தொகுதிகளில் வென்றுள்ளார். சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாகவும் கூறுகிறார்.
முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் ஆரம்பம் முதலே நிலவி வரும் நிலையில் ரங்கசாமி தன்னை முதல்வர் என்று கூறி வந்தார்.பாஜகவோ நமச்சிவாயமே முதல்வர் என்று கூறி வந்தார். இன்று ரங்கசாமி தனியாக தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று மாலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநர் இன்னும் நேரம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ரங்கசாமியை முதல்வர் ஆக்குவதில் பாஜகவில் உள்ளவர்களுக்கே விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.