இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பில் வேறு ஒருவரை ஜனாதிபதி நியமித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது.
எனவே இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து சிராணி பண்டாரநாயக்காவை நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை அப்பதவியில் நியமிக்கும் முயற்சிகளை நாட்டின் ஜனாதிபதி கைவிட வேண்டும் என்று அது சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண, புதிய தலைமை நீதிபதி ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு சட்டரீதியான அதிகாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.
சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கண்டன பதவிநீக்க நடைமுறை சட்டவிரோதமானது என்று நாட்டின் அதியுயர் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை மதிக்காது புதிய தலைமை நீதிபதி ஒருவரை ஜனாதிபதி நியமித்தால், அது சட்டப்படி செல்லாது என்பது சட்டத்தரணிகள் சங்கத்தாரின் வாதம்.
ஜனாதிபதி செய்யக்கூடிய நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அரசியல் யாப்பின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராகத்தான் வழக்கு தாக்கல் செய்ய முடியாதே ஒழிய ஜனாதிபதி செய்கின்ற சட்டவிரோதமான நியமனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண விளக்கம் அளித்துள்ளார்.