உலகம் முழுவதும் தனது இறுதிக் கொள்ளையையும் அழிவுகளையும் திட்டமிட்டு நடத்திவரும் பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் அடிவருடிகளும் தமிழ் நாட்டில் மக்களின் குரலை ஒடுக்கக் கோரி ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மாருதி தொழிலாளர்களின் போராட்டம் இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கும் அதே வேளை தமிழ் நாட்டு பல்தேசியக் கொள்ளைக்காரர்களுக்கு மரணபயம் பீடித்துள்ளது.
தென்னிந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பு (Employers’ Federation of South India (EFSI)) என்ற அமைப்பு பல தரகு முதலாளிகளைக் கொண்ட அமைப்பாகும். தேசியப் பொருளாதாரத்தை அன்னியர்களுக்கு அடகுவைத்து நாட்டின் உற்பத்தியைச் சீர்குலைக்கும் இந்தத் தரகு முதலாளிகளின் கூட்டமைப்பு தொழிலாளர்கள் இந்த நூற்றாண்டின் நவீன அடிமைகள் எனக் கருதுபவர்கள்.
தமிழ் நாட்டில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (Democratic Labour Front (NDLF).) பல போராட்டங்களை நடத்திவருகிறது. NDLF இனை அழிக்குமாறே இவர்கள் ஜெயலலிதாவைக் கோருகின்றனர்.
புதிய ஜனநாயக் தொழிலாளர் முன்னணி இன் நடவடிக்கைகளை இப்போதே அழித்து தமக்கு நிம்மதியைத் தாருங்கள் என அவர்கள் ஜெயலலிதாவை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
EFSI இன் ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதம் பின்வருமாறு கூறுகிறது:
‘NDLD தொடர்பாக EFSI பல்வேறு உறுப்பினர்களின் தொடர்ச்சியான உள்ளீடுகளை பெற்று வருகிறது. அவர்கள் அரச நிறுவனங்களின் உறுதியைக் குலைப்பதிலும், தமது அரசியல் சித்தாந்தத்தைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் மட்டுமன்றி பல்தேசிய நிறுவனங்களும் இவர்களது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.’
மேலும், NDLF வளர்ச்சியடைவதற்கு முன்பதாக இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழிலதிபர்களின் கூட்டமைப்பு ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல்தேசிய தரகு முதலாளிகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் அதே வேளை தாம் சுதந்திரமாகக் கொள்ளையிடவும் அனுமதி கேட்கின்றனர்.
ஜெயலலிதாவிற்கு இவர்கள் எழுதிய கடிதத்தின் பிரதி ரைம்ஸ் ஒவ் இந்தியா என்டிரிவி உட்பட அனைத்து ஆங்கில வியாபார ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இனி ஜெயலலிதா சொல்லுப்போகும் நியாயத்தை ரைம் ஒப் இந்தியாவும், என்டிரிவியும் நியாயமாக மக்களுக்கு அறிவிப்பார்கள்.