மறைந்த என் தந்தை வீ.பி. கணேசனின் புதிய காற்று திரைப்படத்தில், மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது திரைகதையில் உணர்வுடன் சுட்டிக்காட்டிய தோட்ட தொழிலாளியின் அன்றைய லயன் அறை வீட்டு முறைமை இன்னமும் மாறவில்லை. மலைநாட்டில் மாற்றம் வருமா என்று கேள்வி எழுப்பினால், கிடைக்கும் பதில் ஏமாற்றமாகதான் இருக்கிறது. லயன் முறையமைய அழித்துவிட்டு தனி காணி, நிலம், வீடு தாருங்களடா என்று கேட்டால், அதே லயனுக்கு மேலே லயன் கட்டி, மாடி வீட்டு லயன் முறைமையை, கொண்டு வர பார்க்கிறார்கள். இதையும் சிலர் இங்கே வரவேற்று வாழ்த்துப்பா பாடுகிறார்கள். இதுதான் இன்றைய மலையகம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழகத்தின் பிரபல விஷ்ணுபுரம் விருதை பெற்ற மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்புக்கு, அறிவொளி இயக்கத்தின் சார்பில் அதன் பொறுப்பாளர் கே. ரி. குருசாமி பாராட்டு விழாவை நடத்தியிருந்தார். மொரியஸ் நாட்டு கெளரவ தூதுவர் ஈஸ்வரன் தலைமையில், கொழும்பு பிரைட்டன் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தெளிவத்தை ஜோசப்பின் புதியகாற்று திரைக்கதையில் ஒரு காட்சி வருகிறது. குடும்பம் பெருகி தனது பருவ வயது ஆண், பெண் பிள்ளைகளுடன் ஒரே ஒரு லயன் அறை குடியிருப்பில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு தொழிலாளி, தனக்கு மேலதிக லயன் அறை ஒன்றை ஒதுக்கி தரும்படி தோட்ட முகாமையாளரிடம் அடிக்கடி கேட்டு, அது கிடைக்காமல் மனவேதனையுடன் வாழுகிறான்.
தெளிவத்தை ஜோசப்பின் திரைக்கதையில், ஒருநாள் இரவில் தன் லயன் அறை குடியிருப்புக்குள் செல்லும் அந்த தொழிலாளியை உள்ளே விட்டு விட்டு, கமரா வெளியே வாசலில் காத்திருக்கிறது. படத்தை பார்த்த நாமும் வாசலில் காத்திருக்கிறோம். திடீரென அந்த நள்ளிரவை ஊடறுத்து அந்த லயன் அறைக்குள்ளே இருந்து கூச்சல் எழுகிறது. என்ன நடந்தது? விட்டுக்குள்ளே சென்ற அந்த தொழிலாளி, தனது மனைவி என நினைத்து, தெரியாமல் தனது பருவ மகளின் பக்கத்தில் சென்று படுத்து விடுகிறான். மேலதிக வீட்டு அறை வசதி இல்லாத காரணத்தாலே எல்லோரும் ஒன்றாக படுத்து உறங்குவதால் இந்த விபரீத நிலைமை.
தெளிவத்தை ஜோசப்பின் கதையில் தொடர்ந்து, தனது மனைவி என நினைத்து மகளின் பக்கத்தில் சென்று படுத்து விட்டதால், திகைத்து, அவமானப்படும், அந்த மலைநாட்டு தொழிலாளி தந்தை, ஆவேசப்பட்டு, தனக்கு மேலதிக வீட்டு வசதியை செய்து தர மறுத்த தோட்ட முகாமையாளரை வெட்டி வீழ்த்த கவ்வாத்து கத்தியுடன் ஓடுகிறான்.
காணி, நிலம் வேண்டி ஏங்கி நிற்கும் மலைநாட்டு தொழிலாளி குடும்பத்தின் அவல நிலைமையை இதைவிட சிறப்பாக எவராலும் விவரிக்க முடியுமா என எனக்கு தெரியவில்லை. அந்த திரைப்படத்தில் நானும் ஒரு சிறுவன் வேடத்தில் நடித்திருந்தேன். இங்கு வந்துள்ள மலையக எழுத்தாளர் மன்ற செயலாளர் மு. சிவலிங்கமும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இந்த காட்சி அன்றே எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. தெளிவத்தை ஜோசப் மலைநாட்டு மண்வாசனை எழுத்தாளர். இந்த காட்சியின் மூலம் மலையக வீட்டு பிரச்சினையை யதார்த்தபூர்வமாக வெளிக்கொணர்ந்து விட்டார் என, நீண்ட காலமாக என் தந்தை, தெளிவத்தை ஜோசப் அவர்களை சிலாகித்து கூறிக்கொண்டிருந்தது எனக்கு தெரியும்.
ஆனால், சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1974இல் தெளிவத்தை ஜோசப் எடுத்துக்காட்டிய, அந்த மலையக பரிதாபம், இன்று இந்த 2014இலும் மாறவில்லை. மாற்றம் வேண்டும் என்றால், மாடி மேலே மாடி கட்டி, மாடி வீட்டு லயன் குடியிருப்புகளை தருகிறோம் என்கிறார்கள். காணி, நிலம் தரமாட்டோம் என்கிறார்கள். இதுதான் இந்த 40 ஆண்டுகளில் மலையகம் கண்ட வீடமைப்பு அபிவிருத்தி.
தெளிவத்தை ஜோசப் பெற்ற இந்த விஷ்ணுபுரம் விருது மலையக அவலங்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். ஆனால், இந்த அவலங்கள் இங்கே சொகுசு வாழ்வு வாழும் நம்மவர்களுக்கே இன்னமும் புரியவில்லை. ஆனாலும் மனம் சளைக்காமல் தொடர்ந்து நாம் போராடுவோம். நியாயத்தை ஒருநாள் வெல்ல வைப்போம். உங்கள் எழுத்துகளால் எங்கள் இதயங்களில் நீங்கள் பற்ற வைத்த அந்த அநீதிக்கு எதிரான தீ ஒருநாளும் அணையாது என தெளிவத்தை ஜோசப் அவர்களிடம், உங்களுக்கு இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த தம்பி குருசாமியையும் சேர்த்துக்கொண்டு நான் உறுதி கூறுகிறேன்.