நேற்று முதல் தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டதும். சில தொலைக்காட்சிகளும், மாற்று ஊகடங்களும், வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில ஆத்து ஊடகங்களும் தங்களுக்குத் தாங்களே கதறிக் கொண்டு ஒரு அச்சத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
அதிமுக- பாஜக மற்றும் இவர்களை தழுவி வளரக்கூடிய நாம் தமிழர் போன்ற உதிரிகளின் மனநிலையும் இந்த ஊடகங்களின் மன நிலையும் அடிப்படையில் ஒன்றுதான். அது “என்ன ஆட்டம் போடுகின்றீர்களா இதோ வந்து விட்டார் மோடியின் ஆள்?” என்பதுதான் அந்த மனநிலை.
இது கேடு கேட்ட கோழைத்தனம் என்று இவர்களுக்கு உறைப்பதில்லை.ஆர்.என் .ரவி நாகாலாந்து ஆளுநர். முன்னாள் உளவுத்துறை அதிகாரி, ஐ.ஏ.எஸ் அதிகாரியும் கூட . தமிழ்நாட்டை புரட்டிப் போட இதுவே போதும் என இவர்கள் நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர் பெருந்தச்சன் பெரியார். அந்த நூல் பிடித்து தமிழ்நாடு பல்வேறு தாக்குதல்கள், தடைகள், இடையூறுகளுக்கு மத்தியில் தன்னை பாதுகாத்தே வந்திருக்கிறது. அதற்கு முழு காரணம் தமிழ் உணர்வும். தமிழ் இன உணர்வும். ஒரு சின்னப் பொறியில் “இந்தி தெரியாது போடா” என்றோ “Go Back modi” என்றோ பாசிச பாஜக ஒழிக என்றோ எங்கோ ஒரு மூலையில் கேட்டு அது உலகு தழுவிய அளவில் பற்றிப் பரவ இந்த கோழைகளா காரணம்..
மொத்தத்தில் மோடியின் பொம்மையான ஒபிஎஸ்-இபிஎஸ் இருவரையும் ஆட்டிப்படைத்தவர் வித்யாசாகர். காரணம் ஜெயலலிதா சுயநினைவு இழந்த போதே அதிமுக ஆட்சியும் ஐ.சியூவிற்குச் சென்று விட்டது. உள்ளடக்கம் இல்லாத அந்த ஆட்சியை வந்தவன் போனவன் எல்லாம் தன் கைப்புள்ள ரேஞ்சுக்கு டீல் செய்தார்கள்.
அதே நினைப்பில்தான் இப்போது ஆர்.என்.ரவி என்று ஆரம்பிக்கிறார்கள்.
இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் ஆட்சி முழுமையாக அரசுத் தன்மையோடு மக்களோடு ஒப்பந்தம் செய்து நடக்கிறது.
நாகாலாந்தில் எதையும் சாதிக்காமல் முழுக்க தோல்வியடைந்து அங்குள்ள மாணவர் அமைப்புகளால் “தூங்குகிறவர்” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டே ஆர்.என் .ரவி தமிழ்நாடு வருகிறார்.
நாகாலாந்து சூழல் வேறு தமிழ்நாட்டு சூழல் வேறு பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த ஆட்சியை அதன் கட்டமைப்பை ஆளுநர் குலைக்க முயன்றால் எப்படி கடந்த காலங்களில் அவர்களுக்கு தமிழ்நாடு பதில் சொன்னதோ அதே பாணியில் பதில் சொல்லும்.