இந்தியாவின் மிகச்சிறந்த புகைப்பட ஊடகவியலாளரான தானிஷ் சித்திக் கந்தகாரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இது இந்திய ஊடகத்துறையினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
தானிஷ் சித்திக்கின் படங்கள் உலகப்புகழ் பெற்றவை. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் எதை இந்திய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பதிவு செய்ய தவறினார்களோ அதை தானிஷ் சித்திக் பதிவு செய்தார். இந்தியாவில் ரோஹிங்கிய முஸ்லீம்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக தானிஷ் சித்திக்கின் படங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. அதே போன்று மாட்டுக்கறி கொலைகள், சிறுபான்மை மக்கள் மீதான கும்பல் வன்முறைகளிலும் தானிஷ் சித்திக்கின் படங்கள் உலகை அதிரச் செய்தன, டெல்லியில் ஷாகின் பாகில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அற்புதமாக பதிவு செய்த தானிஷ் அதில் நடந்த மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தார்.
புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது வென்றுள்ள தானிஷ் சித்திக் கொரோனா மரணங்களால் டெல்லி எவ்வளவு திணறி வருகிறது என்பதை வெளிக்கொண்டு வந்தார். டெல்லியில் எந்த அளவு சடலங்கள் மொத்தம் மொத்தமாக எரிக்கப்படுகிறது என்பதை அவரது புகைப்படங்கள் வெளிக்கொண்டு வந்தது.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஊழியரான தானிஷ் ஆப்கான் நிலைகளை பதிவு செய்ய அங்கு சென்றார். ஆனால் துரதிருஷ்டமான கந்தகார் நகரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் தானிஷ் சித்திக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தானிஷ் சித்திக்கின் மரணம் இந்திய ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.